இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங் களிலேயே பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் இயரெண்டல் நட்சத்திரத்தை, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. இந்த நட்சத்திரம் மார்ச் 2022ஆம் ஆண்டே ஹபிள் தொலைநோக்கியால் கண்டு பிடிக்கப்பட்டது என்றாலும், தெளிவான புகைப்படத்தை ஜேம்ஸ் தொலைநோக்கி தான் எடுத்துள்ளது. இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 1290 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.
கலிஃபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெயில் காலத்தில் அதிக வெப்பத்தை உள்ளே விடாத, குளிர்காலத்தில் உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியிடாத, சுவருக்கு அடிக்கும் புதிய வகை பெயின்ட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டு அடுக்குகளால் ஆனது. உட்புற அடுக்கு பல நிறங்களை உடைய கனிமமற்ற நானோ துகள்களாலும், மேலடுக்கு அலுமினிய துண்டுகளாலும் ஆனது.
நாய்களுக்கு நம்மை விட 10,000 மடங்கு அதிகமான மோப்ப சக்தி உண்டு. நாம் நோயுற்றிருக்கும்போது நம் உடலிலிருந்து சில வகையான ஆவியாகக் கூடிய கனிமச் சேர்மங்கள் வெளிப்படுகின்றன. இவை ஏற்படுத்தும் மணத்தைக் கொண்டு பழக்கப்படுத்தப்பட்ட நாய்களால் புற்றுநோய், நீரிழிவு, மைக்ரான், மலேரியா, கோவிட் உள்ளிட்ட 8 நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், நகரங்களில் பல்வேறு காரணங்களினால் நிலத்திற்கு அடியில் வெப்பநிலை கூடிக் கொண்டே வருவதும், இதனால் நிலம் மேல் நோக்கி விரிவடைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிலத்தின் மீது இருக்கும் கட்டடங்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தெற்கு சீனாவின் யாங்சி ஆற்றுப்படுகையில் பன்றியின் பல் எச்சத்தைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதன் வாயிலாக, காட்டுப் பன்றிகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்காக வளர்க்கும் வழக்கம் 8,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவில் தோன்றிவிட்டது தெரியவந்துள்ளது.
பூமியில் இருந்து 2.8 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது கேலக்சி சோம்ப்ரெரோ. இது நம் பால்வெளி மண்டலத்தை விட இரண்டு மடங்கு சிறியது. அகச்சிவப்பு கேமராவைக் கொண்டு இதை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். இது வட்ட வடிவ சக்கரம் போல் காணப்படுகிறது. இந்தப் படம் அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில், ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர்தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப்பட்டுள்ளது. இது 43,000 ஆண்டுகள் பழைமையானது. உலக வரலாற்றிலேயே மிகப் பழைமையான, முழுமையாகக் கிடைத்த நியாண்டர்தாலின் கைரேகை இதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கியூபா நாட்டின் குகை ஒன்றில் ஒரு பறவை எலும்பு தொல்லெச்சத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 18,000 ஆண்டுகள் பழமையான இந்த எலும்பு அழிந்துபோன ஒரு வாத்து இனத்தினுடையது என்கின்றனர். இந்த வாத்து இன்றுள்ள வாத்துகளை விடச் சிறியது. இதற்கு, அமேசொனெட்டா க்யூபென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.