சென்னை, ஜூன்.26- வேலூர் மாவட்டத்தில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளிடம் கலந்துரையாடிய தோடு, அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார். அந்த நிகழ்வு குறித்த காட்சிப் பதிவை தன்னுடைய‘எக்ஸ்’தளப்பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த எக்ஸ் தளப் பக்கத்தில், ‘கனவுகளை நனவாக்கி, எல்லோருக்கும் எல்லாம் என எல்லோரது மனங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதே திராவிட மாடல்’ என்றும் பதிவிட்டு இருந்தார்.
சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் பற்றி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
சென்னை, ஜூன்.26- மேனாள் பிரதமர் வி.பி.சிங்கின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்.
ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரி புகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்ணின் துணிவு
விண்வெளியில் பயணம் செய்ய
23 வயது ஆந்திரப் பெண் தயார்
அமராவதி, ஜூன் 25 23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ஆம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதா வரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி (23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் டைடன்ஸ் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் வரும் 2029-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜானவி தங்கேட்டி 5 மணி நேரம் வரை விண்வெளியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர்தான் டைடன்ஸ் விண்வெளி வீராங்கனை பயிற்சித் திட்டம் மூலம் பயணம் செய்ய உள்ள முதல் இந்திய பெண் என்னும் பெருமையையும் பெற வுள்ளார். ஜானவிக்கு விண்வெளியில் பயணம் செய்ய தகுந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜானவி தங்கேட்டி சமூக வலைத்தளம் மூலம் கூறியுள்ளதாவது:
அடுத்த 2026-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் டைடன்ஸ் விண் வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளேன். இம்முறை எனக்கு விண்வெளி இயக்கம், உருவகப்படுத்துதல், மருத்துவ மதிப்பீடு போன்றவை கற்பிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை அளித்த டைடன்ஸ் விண்வெளி மய்யத்துக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த பயிற்சியில் இந்தியர்களின் பிரதிநிதியாக செல்வதால், இந்திய வம்சாவளியினருக்கும் பெருமை சேர்க்கும் என நினைக்கிறேன். எனது நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நினைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.