“மதச் சார்பின்மை தெளிவு தேவை!” என்ற தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்று ‘தினமணி’யில் (19.6.2023) வெளி வந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1976இல் மதச் சார்பின்மை என்று சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ஏதோ ஒரு குற்றமான செயல் போல கட்டுரை சிலாகித்து எழுதியுள்ளது.
மதச் சார்பின்மை குறித்து ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், பி.ஜே.பி. வரை மாறுபட்ட கருத்துகள் உண்டு என்பது வெளிப்படை கட்டுரையாளர் ஆர்.எஸ்.எஸ். பற்றிப் புளகாங்கிதத்தோடு எழுதி இருப்பதிலிருந்தே அவர் கருத்து என்ன என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகவே தெரிகிறது.
மூன்று முறை ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது ஏன் என்பதைக் கவனிக்க வேண்டாமா?
ஆர்.எஸ்.எஸை நேருவே பாராட்டியிருக்கிறார்; அம்பேத்கரே பாராட்டியிருக்கிறார் என்பது எல்லாம் எந்த அடிப்படையில் என்பதை விளக்க வேண்டாமா?
காந்தியாரே பாராட்டியிருக்கிறார் என்றுகூட சங்பரிவார்கள் கூறுவதுண்டு.
வார்தாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமைப் பார்வையிட்ட காந்தியார் ஆர்.எஸ்.எஸைப் பாராட்டியதாக ஒரு கதை அளப்பு. உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்.பற்றி காந்தியார் என்ன கூறினார்?
ஹிட்லர், முசோலினி போன்றவர்களின் நாஜிச, பாசிச படைகளும் ஆர்.எஸ்.எஸ். போல தான் வேலை செய்தன என்று முகத்தில் அறைந்ததுபோல காந்தியார் கூறிடவில்லையா?
அம்பேத்கர் ஜெயந்தியையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். ‘நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஆனால் ஹிந்துவாக சாக மாட்டேன்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், செய்து காட்டிய அம்பேத்கரைப் பற்றிப் பேச இந்த ஆர்.எஸ்.எஸ். நாக்குகளுக்குப் பொருத்தமோ தகுதியோ உண்டா?
நேருவின் பாராட்டுதல்களையும் பெற்றது ஆர்.எஸ்.எஸ் என்று எழுதுவதற்கு எத்தனை மடங்கு நேர்மையின்மை தேவைப்படும்?
காந்தியாரைப் படுகொலை செய்த சூழலில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்ட நிலையில், ‘அந்தத் தடையை நீக்குங்கள் சாமி’ என்று அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் எத்தனைக் கெஜ குட்டிக் கரணம் போட்டார்?
கடைசியாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மூக்கை நுழைத்து, வக்கீல் டி.ஆர்.வி. சாஸ்திரிமூலம் நேருவை அணுகி தடை நீக்கப்பட்டது என்பதை ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அய்யர் எழுதியதுண்டே! (‘துக்ளக்’ 12.5.2021 பக்கம் 15)
ராகுல்காந்தி அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். பற்றிக் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதுதான் ‘தினமணி’ நடுப்பக்கக் கட்டுரையின் முக்கிய குற்றச்சாட்டு.
“இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பிரிவினை நோக்கம் இல்லை என்பது உண்மை. அது ஒன்றினாலேயே மதச் சார்பற்ற கட்சி என ஆகிட முடியுமானால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் பிரிவினை நோக்கம் இல்லை, அதையும் மதச் சார்பற்றது என்று ஏற்க ஏன் ராகுல் காந்தி மறுக்கிறார்?” – இதுதான் ‘தினமணி’யின் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஜோக்.
இந்திய யூனியன் முசுலீம் லீக்கும் பிரிவினை நோக்கம் கொண்டதல்ல என்பதை ஒப்புக் கொண்ட ‘தினமணி’ அதோடு ஆர்.எஸ்.எஸை எப்படி ஒப்பிட முடியும்?
ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையே பிரிவினைவாதம் தானே. அது கூறும் ஹிந்து மதம் என்பது பிறப்பின் அடிப்படை யிலேயே நான்கு வருணங்களையும், ஆயிரக்கணக்கான ஜாதி களையும் அடிப்படை ஆணிவேராகக் கொண்டது தானே!
எப்பொழுதோ அல்ல – இப்பொழுதும் ஆர்.எஸ்.எஸ். சங்பரி வார்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுவார்களா? அது மனித சமூகத்தைப் பிளவுபடுத்தும் பிரிவினை நஞ்சு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரை சொல்லச் சொல்லட்டுமே பார்க்கலாம்.
‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று சொல்லும் சங்கராச்சாரியாரை ஜெகத் குரு என்று சீராட்டும் – பாராட்டும் இந்த சக்திகளுக்கு பிரிவினை பற்றிப் பேச சற்றேனும் யோக்கியதாம்சம் உண்டா?
“முஸ்லீம் லீக் மதச் சார்புள்ளதாக இருப்பது தவறல்ல. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் ஹிந்து மதம் சார்புள்ளதாக இருப்பதும் தவறல்ல” என்று கூறுகிறது ‘தினமணி’ கட்டுரை.
இதன் மூலம் என்ன கூற வருகிறது ‘தினமணி’. ‘ஹிந்து ராஜ்யம் அமைப்போம்’ என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதற்கு வக்காலத்து வாங்குகிறது.
450 ஆண்டு கால வரலாறு கொண்ட இஸ்லாமியர்களின் மசூதியை இடித்து, அதே இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது நியாயத்திலும் நியாயம் என்று சத்தியம் செய்கிறது.
முஸ்லீம்களை வெளியேற்ற குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வரும் பி.ஜே.பி. ஆட்சிக்குச் சப்பைக் கட்டு கட்டப் பார்ப்பது பச்சைப் பார்ப்பனத்தனம்தானே!
“மதச் சார்பற்றதாக அரசாங்கம் இருக்க வேண்டுமே தவிர மக்கள் சமுதாயம் அப்படி இருக்க வேண்டியதில்லை” என்று மங்கலம் பாடி கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திலும் இடிக்கிறது. இன்றைய ஒன்றிய அரசு மதச் சார்பற்ற தன்மையில்தான் நடைபோடுகிறதா?
காசி சிவன் கோயிலை புனருத்தாரணம் செய்வது, அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதில் பிரதமரே முண்டாசு கட்டி மும்முரமாக ஈடுபடுவது – ‘தினமணி’ கூறும் மதச் சார்பற்றதாக அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்கு இயைபு உடையது தானா?
மூர்க்கத்தனமாக ஓர் அமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று முழங்கால் மண்டிப் போட்டு தூக்கி நிறுத்த முயன்றால், இத்தகைய முரண்பாடுகள் தவிர்க்கப்பட முடியாதவைகளாகவே ஆகிவிடும் என்பதற்குத் ‘தினமணி’ கட்டுரை ஒன்றே போதும்!
‘தினமணி’ கட்டுரையின் தலைப்பு “மதச்சார்பின்மை – தெளிவு தேவை!” என்பதாகும். ஆம். ‘தினமணி’ தனக்குத் தானே சொல்லிக் கொள்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.