வேலூர், ஜூன்.26- ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள வேலூர் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 2 நாட்கள் நடை பெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.6.2025) சென்னையில் இருந்து ரயில் மூலம் வேலூர் சென்றார். அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து அரசு வேலூர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்திற்கு செல்லும் வழிநெடுகிலும் முதலமைச்சருக்கு சாலையின் இருபுறங்களிலும் பொது மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் பெற்றுக் கொண்டார்.
மருத்துவமனை வசதிகள்
அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அங்கு தரை மற்றும் 7 தளங்களுடன் ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதை கட் டுவதற்கு 22.8.2023 அன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனையில் மகளிர் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் மருத்து வம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், நுண்ணுயிரியல் பிரிவு, உயிர் வேதியியல் பிரிவு, நோய் கண்டறிதல் துறை, அறுவை அரங்கங்கள் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் மொத்தம் 560 படுக்கை வசதிகளும் செய்யப்பட் டுள்ளன.
மேலும், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.7 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலைய புதிய கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
21 ஆயிரம் பேருக்கு பட்டா
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் வட்டங் களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வருவோருக்கு, ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21 ஆயிரத்து 776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
திடீர் ‘ரோடு ஷோ
முன்னதாக வேலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ‘ரோடு ஷோ’ நடத்தினார்.சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.