திருநெல்வேலி, ஜூன் 26 திருநெல்வேலி மாவட்டம் கூடங் குளம் அணுமின்நிலையத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால பணிக்கு அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்களை தோ்ந்தெடுக்கவேண்டும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடா்பாக, கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநா், தலைவா், உயா் அதிகாரிகள் ஆகியோ ருக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் கூறியுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 18.2.1999இல் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சு வார்த்தையில் அணுமின் திட்ட பணியாளா் குழு இயக்குநா் அதன்டராசென், மாவட்ட ஆட்சியா் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.
பணி வாய்ப்பு
அதில் அணுமின்நிலையத்தில் சி பிரிவு வேலைவாய்ப்புகளில் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்கள், அவா்களது வாரிசுகள், உள்ளூா் இளைஞா்கள் ஆகியோருக்குதான் வாய்ப்பு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, 2011 வரையில் தி.மு.க. ஆட்சி காலம் வரையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது வேலை வழங்கப் பட்டவா்கள் இன்று வரையில் அணுமின்நிலையத்தில் நிரந்தர மாக வேலையில் இருந்து வருகி றார்கள். இந்நிலையில் மீண்டும் அணுமின்நிலையத்தில் 117 சி பிரிவு பதவிகளையும் 62 பி பிரிவு பதவிகளையும் எழுத்துத் தோ்வு மூலமாக நிரப்புவதாக அறிவிப்பு வெளியானது.
ஒப்பந்தத்திற்கு எதிரானது
இந்த அறிவிப்பை அடுத்து 2.3.2024இல் பேச்சுவார்த்தையில் எழுத்துத் தோ்வு ரத்து செய்யப்பட் டாக அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து தற்போது குறிப்பிட்ட கால பணிக்கான 64 தொழில்நுட்பப் பணி யாளா்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தோ்ந் தெடுப்பதற்கான அறிவிப்பு அணுமின் நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தோ்ந்தெடுக்கும் முறை என்பது 1999இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. அது மட்டுமன்றி அணுமின்நிலையத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவா்கள், அவா்களது உறவினா்கள் கூடங் குளத்தைச் சுற்றியுள்ள 16 கி.மீ. தொலைவுக்குள் வசிப்பவா்களாக போலி இருப்பிடச்சான்றிதழ் அளித்து வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக கருதுகிறேன்.
முன்னுரிமை
எனவே, தற்போது இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காலபணியாகிய 64 தொழில்நுட்ப பணியாளா்கள் பணிக்கும் அணுமின்நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்களின் வாரிசுகளுக்கும் உள்ளூா் இளைஞா்க ளுக்கும் 1999 ஒப்பந்ததின்படி முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட 117 சி பிரிவு பணியிடங்களையும் முன்னா் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்த்தின் அடிப்படையில் நிரப்பவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.