பாளை, ஜூன் 26 பாளையங் கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப் புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி, பாளையஞ்செட்டி குளம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குடிநீா் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா.சுகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 41 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரவருணி ஆற்றை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீா் திட்டமானது ரூ.45.10 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நபா் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டா் குடிநீா் வழங்கப்படும்.
இக்கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் அடிப்படை ஆண்டு மக்கள் தொகை 33,240 (இடைநிலை ஆண்டு மக்கள் தொகை (2039) 40,887 மற்றும் உச்சகட்ட ஆண்டு மக்கள் தொகை (2054) 50856 ஆகியவற்றின் அடிப்படையில் முறையே நாள்தோறும் குடிநீா் தேவை 260 மில்லியன் லிட்டா், 3.26 மில்லியன் லிட்டா், 4.06 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளா் கென்னடி, துணை மேற்பார்வையாளா் பொறியாளா் வெங்கடேஷ், நிர்வாக பொறியாளா் தனராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.