*அரிபரந்தாமன் [உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி]
சனாதன நீதிபதிகள்! சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கைகள்! அரசமைப்பு சட்டமெல்லாம் படிப்புக்கும், பேச்சுக்கும் தானா? நடைமுறை யாவும் பழம் பஞ்சாங்கமும், சாஸ்திரங்களும் தாமா? இந்திய நீதித் துறையில் சில நீதிபதிகள் நமது சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கின்றனர் என்பதற்கு கீழ்க்கண்ட இரு வழக்குகளின் தீர்ப்புகளே சாட்சி!
சமீபத்தில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இருவர் வெவ்வேறு வழக்குகளில் வழங்கிய உத்தரவுகள் மிகவும் கலக்கத்தை அளிக்கிறது. காரணம், இந்த உத்தரவுகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், சனா தானத்தின் அடிப்படையிலும், மனுஸ்மிருதியின் அடிப்படையிலும் அமைந்துள்ளது தான்.
அதில் ஒன்று, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு. குற்ற வழக்கை எதிர்கொண்ட ஒருவர், பிணை கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகிய போது, அந்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு பெண்ணை நீண்ட காலம் காதலித்து, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பலமுறை உடலுறவு கொண்டுள்ள ஒருவன், பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். எனவே, அந்தப் பெண் காவல் துறையில் புகார் அளிக்கிறார். பொய்யான வாக்குறுதி அளித்து உறவு கொண்ட செயல், பாலியல் வன்புணர்வு ஆகும் என்பதால் அது குற்ற வழக்காக பதிவு செய்யப்படுகிறது. அவன் கைது செய்யப்படுகிறான்.
பிணை கேட்டு அவன் தாக்கல் செய்த வழக்கில் அவனது வழக்குரைஞர் ‘‘அந்தப் பெண்ணுக்கு ‘செவ்வாய் தோஷம்‘ உள்ளது; இந்தத் தோஷம் இருப்பவர்களைத் திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும்; அதனால் தான், அந்தப் பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை. ஆகவே, அவன் பொய்யான வாக்குறுதி அளித்து உறவு கொண்டான் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை’’ என வாதம் வைத்தார்.
இந்தச் சூழலில் தான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு உத்தரவு அளித்தார். அந்த உத்தரவில், அவனது ஜாதகத்தையும், அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் லக்னோ பல்கலைக் கழகத்தில் உள்ள ஜோதிடத் துறைக்கு அளிக்கும் படியும், அந்தத் துறை அந்த ஜாதகங்களை பரிசீலித்து அந்த பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்று கண்ட றிந்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த உத்தரவை அறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், தானாக முன் வந்து இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வை அமைத்து, அந்த வழக்கை விசாரிக்குமாறு உத்தர விட்டார்.
அதன்படி, இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பங்கஜ் மித்தல் ஆகியோரை உள்ளடக்கிய நீதிமன்ற அமர்வு, ”அந்த பெண் செவ்வாய் தோஷம் உள்ளவராக என்பதை அறிய இரு தரப்பினரும் ஜாதகத்தை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியது ஏன் என்பது புரியவில்லை…….! பிணை மனுவை விசாரிக்கும் போது ஜோதிடத்துக்குள் நுழைய முடியாது. எனவே, இது போன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கக் கூடாது. அதோடு பிணை மனுவிற்கு எதற்கு ஜோதிட அறிக்கை? இது தேவையற்றது. குற்றத்தின் தன்மை, வழக்கின் தகுதி அடிப்படையில் அணுகி இருக்க வேண்டும்” என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பிற் போக்குத்தனமான உத்தரவுக்குத் தடைவிதித்தது.
அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததை சம்பந்தப்பட்ட இளைஞன் மறுக்கவில்லை. ஆனால், திருமணம் செய்வதற்கு பெண்ணின் ஜாதகம் சரியில்லை என்பதே அவனது வாதம். அவ்வளவு ஜாதகத்தில் நம்பிக்கை உள்ள மனிதன் ஜாதகத்தை பார்த்து உறுதி செய்யாமல் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தது தவறல்லவா? இந்த வாக்குறுதி யால் தான் அவன் அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாக நம்ப வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவனை, ஜாதகத்தை காரணமாக்கி, குற்றத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பளிப்பதா..?” என பல பெண்கள் அமைப்புகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த வழக்கில் தானாகவே முன்வந்து விசாரிப் பதற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியை அவசியம் பாராட்ட வேண்டும். பொதுவாக உச்ச நீதிமன்றம் இது போன்று செயல்படுவது இல்லை. இது அபூர்வத்திலும் அபூர்வம். தலைமை நீதிபதி சந்திர சூட்டின் செயல் பாராட்டுக்குரியது.
மற்றொரு உத்தரவு குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவாகும். பாலியல் வன் கொடுமை யால் கருவுற்ற 18 வயது நிரம்பாத பெண் கருக் கலைப்பு செய்ய வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுகிய போது ,அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு சிவில் சமூகத்தால் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கருக் கலைப்புக்கு அனுமதி கோரி, சிறுமியின் தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் ஜே தேவ் பேசியதாவது,
“நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கி றோம். ஆனால், உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அவர் களுக்குத் தெரியும். திரு மணம் செய்ய அதிகபட்சம் 14 முதல் 15 வயதுதான். அதன் பிறகு 17 வயதுக்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். நீங்கள் மனுஸ் மிருதியைப் படித்திருக்க மாட்டீர்கள். ஆனால், இதைத் தெரிந்துகொள்ள மனுஸ்மிருதியை ஒரு முறை படியுங்கள். நமது சமூகத்தில் 17 வயதுக்குள் பிள்ளை பெற்றுக் கொள்வது தான் பெண்களின் வழக்கம்’’ என்று அவர் கூறியுள்ளார்.
மேற்சொன்ன குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது. அரசமைப்புச் சட்டத்திற்கு மிகுந்த அவமதிப்பை தருவது.18 வயதிற்குள்ளான ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு கொள்வது போக்சோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15, பெண் களுக்கு என்று தனியான திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தலாம் என்று கூறுகிறது. அந்த அடிப் படையில் தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு என்று பல திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் கோட் பாடுகளுக்கு விரோதமானதாகும்
கருக் கலைப்புக்கான மருத்துவச் சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவு 3-இன்படி, கருக் கலைப் புக்கான உச்சவரம்பு 24 வாரங்களே! அதாவது அதிகபட்சம் அய்ந்தரை மாதங்கள் தான்! அதே சமயம் கருவுற்ற தாயின் மனநிலை மற்றும் உடல் நிலையைக் கருதியோ அல்லது பிரசவத்தின் போதோ, அதன் பிறகோ தாய்க்கு ஆபத்து நேரும் என்றாலோ கருவைக் கலைக்க அனுமதி உண்டு. அதிலும் கருவைக் கலைப்பதால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என உறுதியாகும் பட்சத்தில் தான்!
அந்தப் பெண்ணும், அவள் வயிற்றில் சுமக்கும் கருவும் நல்ல நிலையில் இருப்பார்களேயானால் கருக்கலைப்புக்கு உத்தரவு இட இயலாது என்றும், அந்தப் பெண்ணின் மற்றும் கருவின் நிலை பற்றி அறிக்கை தருமாறும் நீதிபதி கூறியுள்ளார். இப் படியாக இந்த வழக்கை அந்த நீதிபதி அணுகியுள்ள விதம் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த மனுவில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தனது கடுமையான ஆட்சேபனையை பதிவு செய்த மக்கள் சிவில் உரிமை கழகம் மனுஸ்மிருதி போன்ற ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கோட்பாடுகளை சார்ந்து நீதிமன்றம் உத்தரவளிப்பது, மதச்சார் பின்மைக்கு விரோதமானது என்றும் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்ற 2014க்கு பிறகு, உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நியமனம் செய்யப்படும் நீதிபதிகளில் சிலர் சனாதானம், மனுஸ்மிருதி, ஹிந்து மத சாஸ்திரங்கள் போன்ற வற்றில் மிக ஆழமாக நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று சட்ட வல்லுநர் பேராசிரியர் மோகன் கோபால் டில்லியில் பேசியது குறிப்பிடத் தக்கது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத் தானது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது தான் எல்லா நீதிபதிகளும் பதவிப் பிரமாணம் எடுக்கின் றனர். அதில் ‘‘அடிப்படைக் கடமைகள்” அதாவது Fundamental Duties என்ற தலைப்பில் 51-ஏ (எச்) பிரிவு உள்ளது!
“அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்த்திருத்த உணர்வுடன் கூடிய விசாரணை ஒவ் வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்” என் பதையே நமது அரசியல் சட்டம் வலி யுறுத்துகிறது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட்டது போன்று, குஜராத் நீதிமன்ற உத்தரவிலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு, இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதியை வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி: ‘அறம்’ இணையதளம்