மதுரை, ஜூன்.26- திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடமுழுக்கு
தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது தமிழ் திருமறைகளை பாடி, வேத மந்திரங்களை ஓதுவ தற்கு தமிழ் ஓதுவார்களை அனுமதிக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்தேன். இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்கள் மூலம் தமிழ் மந்திரங்களை உச்சரித்து, விழாவை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தமிழில் நிகழ்ச்சிகள்
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிர மணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு 24.6.2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்றார். திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், குடமுழுக்கு விழாவை யொட்டி யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவதில் இருந்து திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது என அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழில்தான் நடக்கின்றன என்றார்.
அறிக்கையாக
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் இந்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தாக்க லாகி நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டனர்.