கொடி, செடி, படி எனும் சொற்றொடர் மூலம் நயத்தக்க, ரசிக்கத்தக்க கொள்கை வழிமுறையை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் 18.06.2023 அன்று நடைபெற்றது.
அதில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடி, செடி, படி என அழகிய வாக்கியம் ஒன்றைத் தெரிவித்தார். தோழர்களும் எழுந்து நின்று, கொள்கை உறுதிமொழியாய் உரக்கக் கூறி, நெகிழ்ந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த ஆசிரியர் அவர்கள், “நமது கழகக் கொடி என்பது வர லாற்றுச் சிறப்புமிக்கது. தமிழர்களுக்குப் பலப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்து, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருப்பது! அந்தக் கொடி நமது இல்லங்கள் தோறும் பறந்திட வேண்டும்!
அதேபோல அந்தக் கொடிக்கு அருகாமையிலே செடியும் நடப்பட வேண்டும்! சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டும், மரங்களின் தேவையை மனதில் கொண்டும் செடி நட்டு வளர்க்க வேண்டும்!
மூன்றாவது படி! இயக்கத்தின் சிறப்பே சிந்தனை தான்! அதை மேலும் வலுவாக்குவது வாசிப்பு! விடுதலை நாளிதழை தவறாமல் வாசிக்க வேண்டும்! நாம் மட்டுமின்றி பிறரும் படிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். பெரியளவில் இல்லையேல் சிறிய அளவாவது படிப்பகம் தொடங்க வேண்டும்!
கொடி – அது இயக்கத்தைக் வளர்க்கும்! செடி – சுற்றுச் சூழலைக் காக்கும்!
படி – அது அறிவைத் தூண்டும்!
ஆக கொடி, செடி, படி என்கிற மூன்றுமே சமூகத்திற்குப் பயன்படும் முத்தான சொற்கள் என ஆசிரியர் அவர்கள் விளக்கமளித்தார்கள். தோழர்கள் பெரியளவு வரவேற்று உற்சாகம் பெற்றனர்!
– வி.சி.வில்வம்