சுயமரியாதைச் சுடரொளிகள்!

viduthalai
3 Min Read

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

  1. ‘புலிவலம்’ அகமது

‘‘என் பயணம் கழகப் பணிகளில் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுதி மூச்சு உள்ள வரை தொடர்வேன் என உணர்ச்சி ததும்ப கூறியவர் ‘புலிவலம்’ பி.எஸ். அகமது.

இசுலாம் மார்க்கத்து குடும்பங்களில் பல பேர் திராவிடர் கழகத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இன்றும் உள்ளனர். அவர்களில் கழகத் தலைவர் ஆசிரியர் மனதில் இடம் பெற்ற பழம் பெரும் கழகத் தொண்டர் திருவாரூர் புலிவலம் பி.எஸ். அகமது. பட்டிதொட்டியெங்கும் மிதி வண்டியில் பயணித்து ஆர்வமுடன் கழகப் பணியாற்றினார். 95ஆம் ஆண்டு வரை வாழ்ந்து தூய  தொண்டாற்றியவர். இவரது அரிய சேவையினை நினைவு கூர்ந்து 17.9.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இவருக்கு ‘பெரியார் தொண்டற செம்மல்’ என்னும் வாழ் நாள் சாதனையாளர் விருதைவழங்கி மகிழ்ந்தார்.

பி.எஸ். அகமது பிறந்து வளர்ந்த ஊர் சன்னாநல்லூர் ஆகும். 1943ஆம் ஆண்டு முதல் கழகத்தில் ஈடுபாடு கொண்டார்.

இந்த ஊரில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தார். அந்தக் கடைக்காரர் ‘குடிஅரசு’ பத்திரிகை வாங்கிப் படிப்பார். ஓய்வு நேரங்களில் அகமது அதைப் படிப்பார். அதில் பிரசுரமான செய்திகளை தொடர்ந்து படித்து அறிவை வளர்ந்து கொண்டார்.

திராவிடர் கழக மாநாடு

முதன் முதலாக நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டார். பிறகு தந்தை பெரியார் பூந்தோட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த போது திருவாரூர் தோழர் ஒருவர் இவரை அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அக்காலந் தொட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து களப் பணியாற்றினார்.

புலிவலத்தில் சுயமரியாதைச் சுடரொளி
எஸ்.எஸ். மணியம் அவர்கள் இல்லத்தில் காவலராகப் பணியாற்றி அவருடன் கழகப் பணியில் ஈடுபட்டார்.

திருவாரூரில் பெரியார் புத்தக விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக பணியாற்றினார்.

பி.எஸ். அகமது தன் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம் தன்னை நெகிழ்ச்சி அடைய வைத்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவராக இருந்த காலத்திலேயே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிராமங்களுக்கு சென்று கூட்டங்களில் பேசினார்.

அப்பொழுதெல்லாம் இப்ெபாழுது இருக்கிறதைப் போல பஸ் வசதி கிடையாது. கூட்டங்களுக்கு மிதிவண்டி, மாட்டு வண்டிகளில்கூட கழக தோழர்கள் அழைத்து செல்வார்கள். ஒரு முறை பூந்தோட்டத்தில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் ஆசிரியர் பேசினார். கூட்டம் முடிந்ததும் பேரளம் சென்று புகைவண்டி மூலம் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தார். கூட்டம் முடிய இரவு வெகு நேரமாகி விட்டது. புகைவண்டி நிலையம் செல்ல வாகன வசதி இல்லை. அப்போது பி.எஸ். அகமது தனது மிதிவண்டியில்  ஆசிரியரை அழைத்துச் சென்று பேரளத்தில் புகைவண்டியில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

சில ஆண்டுகளுக்குமுன் பூந்தோட்டத்தில் கழக இளைஞர் ஒருவரின் திருமணத்தை தமிழர் தலைவர் அய்யா வீரமணி நடத்தி வைத்தபோது அவரது பழைய நினைவுகளை வெளிப்படுத்தியபோது இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

ஆசிரியர் பேச்சை திருவாரூர் கழகத் தோழர்கள் வந்து சொன்னபோது நெகிழ்ந்து மகிழ்ந்து போனேன் என்றார்.

அகமது அவர்கள் 27.12.2018 அன்று மறைந்தார்.

தொகுப்பாளர்:  தமிழ்க்கோ

(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *