சென்னை, ஜூன் 25– ‘சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி; மற்ற மொழிகளுக்கு அநீதி’ என்று சொல்லத்தக்க வகையில், தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. அதே சமயம் மற்ற மொழிகளின் மேம் பாட்டிற்கு சொற்பத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சமூக வலை தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘போலிப் பாசம் தமிழ் மீது; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு’’ என்று பதி விட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:–
பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி,வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான நிதிகளைகூட வழங்காமல் ஏதோ தமிழ்நாட்டினர் அந்நியர்கள் என்ற அளவில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறந்தள்ளி வைத்திருப்பதால்தான். எதிர்க் கட்சியினர் ஆளும் மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
திருக்குறள் சொல்லி ஏமாற்றும் மோடி!
நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர் போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைகூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளை சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை கொண்டும் தமிழ் மொழிக்காக அத்தனையும் செய்பவர்போல காட்டிக்கொண்டார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது அந்த தமிழ்மொழிக்கு குறைந்த அளவில்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த மாநிலத்தின் மொழியும் அல்ல. ஆனால் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.2532,59 கோடி. இதன்மூலம் மொழிகள் வளர்ச்சிக்காக ஒன்றியஅரசுஒதுக்கும் நிதி பாரபட்சமாக உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
பன்முகத்தன்மையை சிதைப்பதாகும்!
இந்திய அரசு அனைத்துஇந்திய மொழிகளுக்கும் செலவிடுகின்ற தொகையில் 61 சதவீதம் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே செலவிடுகிறது என்பதை இந்த தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் நீண்ட நெடுங்காலமாக வசித்து வருகிறார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழையும், தமிழ் மொழியின் தொன்மைகளையும், தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கணங்களையும் கொண்டு சேர்ப்பது ஒன்றிய அரசின் கடமையாகும். ஆனால் இந்தியாவை சமஸ்கிருத நாடாக உருவாக்குகின்ற வகையில் ஒரு மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்ப தாகும்.
ஓரவஞ்சணை
2014 முதல் 2025 வரையில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்திற்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் தமிழ்மொழிக்கு ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு சேர்த்து ரூ.34.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே பேசப்படும் சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்கு 17 மடங்கு அதிகம் ஒதுக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.
போலிப்பாசம் தமிழுக்கு
இதுபற்றி குறிப்பிடும் கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘போலிப்பாசம் தமிழுக்கு; பணமெல்லாம்சமஸ்கிருதத்துக்கு என்றும் ‘சமஸ்கிருதத்துக்குகோடிக் கணக்கிலும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.