விஞ்ஞானம் என்பது படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும் – அதற்கு ஒன்றும் எல்லை கிடையாது!
திராவிடர் கழகம், தந்தை பெரியார் என்பதெல்லாம் விஞ்ஞானமே!
சென்னை, ஜூன் 25 விஞ்ஞானம் என்பது படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். அதற்கு ஒன்றும் எல்லை கிடையாது. அதேபோல, தந்தை பெரியார் நிலைத்து நிற்கிறார்; நிலைத்து நிற்பார். திராவிடர் கழகம் நிலைத்து நிற்கும்; மேலும் நிற்கும் என்று சொன்னால், திராவிடர் கழகம், தந்தை பெரியார் என்பதெல்லாம் விஞ்ஞானம் – விஞ்ஞானம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.
96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்: கருத்தரங்கம்
கடந்த 22.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ புத்தகத்தினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.
அவரது சிறப்புரை வருமாறு:
பெரியார் பதிப்பகம் தொடங்கி, 96 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஒரு நிகழ்ச்சியாக, கருத்தரங்கமாக, கண்காட்சியாக நடத்திக் கொண்டிருக்கக் கூடிய நிகழ்விற்குத் தலைமையேற்று நிறைவாக உரையாற்றவிருக்கக் கூடிய நம் அனைவருடைய நன்மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய அய்யா ஆசிரியர் அவர்கள் உள்பட அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசியாவிலிருந்து தோழர்கள் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இந்த நிகழ்வு என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாகும். கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்பாக, காலையில் கண்காட்சி ஆசிரியர் அவர்களால் தொடங்கப்பட்டு இருக்கிறது. என்னிடம், ஆசிரியர் அவர்கள், அந்தக் கண்காட்சியை பார்த்துவிட்டு வரச் சொன்னார்.
மிகச் சிறப்பான கண்காட்சி!
உண்மையிலேயே மிகச் சிறப்பான கண்காட்சியாகும். 1929, 1930 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து – மறுபதிப்பாக பல பதிப்புகள் வந்திருக்கலாம். அது முக்கியமல்ல. முதன்முதலாக வெளியிட்ட அந்த நூல்களை மிகப் பத்திரமாகப் பாதுகாத்து, வரிசையாக, மிக அழகாக, நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, உண்மையிலேயே நான் பிரமித்துப் போனேன்.
அவற்றையெல்லாம் பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல, மிகக் கடினமான பணியாகும்.
அதேபோல, ஒரு பதிப்பகம் தொடங்கி, 96 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது என்பதும் மகத்தான சாதனையாகும்.
தொடர்ந்து 96 ஆண்டுகாலமாக பெரியார் பதிப்பகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது!
ஏனென்றால், ஏராளமான பதிப்பகங்கள் திடீர் திடீரென்று தொடங்கப்படுகின்றன. பெரும்பாலானவை நிலைத்து நிற்பதில்லை. தொடங்கியவரோடு, அந்தப் பதிப்பகம் முடிந்து போய்விடலாம். அல்லது அவர் இருக்கும்போதே, அந்தப் பதிப்பகம் செயல்பட முடியாமல் போகலாம். ஆனால், அதுபோன்று இல்லாமல், தொடர்ந்து 96 ஆண்டுகாலமாக பெரியார் பதிப்பகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
என்னுடைய பெயரை இங்கே குறிப்பிடும்போதும், ‘‘நியூ செஞ்சுரி புக் அவுஸ்’’ நிறுவனத்தின் இயக்குநர் என்று நிகழ்ச்சியின் அழைப்பிதழில் அச்சிடப்பட்டு இருந்ததையும் பார்த்தும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அன்பாகவும் இருக்கும்;
ஆர்டராகவும் இருக்கும்!
இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னது போன்று, இங்கே நடைபெறக்கூடிய நிகழ்வுகளில், பெரும்பாலும் நான் கலந்துகொள்வேன். கலந்து கொள்வது என்பது மட்டுமல்ல, நம்முடைய கவிஞர் அவர்கள் தொலைப்பேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு, ‘‘இந்தத் தேதியில், இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது; ஆசிரியர் உங்களைக் கலந்துகொள்ளச் சொன்னார்’’ என்று சொல்வார். அது அன்பாகவும் இருக்கும்; ஆர்டராகவும் இருக்கும்.
உண்மையிலேயே நேற்று நான் சேலத்திற்குச் செல்வ தாக இருந்தேன். கவிஞர் அவர்கள் தொலைப்பேசி யில் தொடர்பு கொண்டு, 22 ஆம் தேதி ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ கருத்தரங்கம் இருக்கிறது; அந்நிகழ்வில் ஆசிரியர் உங்களைக் கலந்துகொள்ளச் சொன்னார் என்றார்.
நான், சேலம் போகிறேன், அன்றைக்கு என்னால் முடியாது என்றெல்லாம் நான் சொல்லாமல், சரி என்று சொல்லிவிட்டேன்.
ஓர் அர்த்தமுள்ள நிகழ்ச்சி!
ஏனென்றால், இங்கே நடக்கின்ற நிகழ்ச்சியில், எத்தனை ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள் என்ப தைக் காட்டிலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், ஓர் அர்த்தமுள்ள நிகழ்ச்சியாகத்தான் இந்தப் பெரியார் திடலில் நடைபெறும்.
அந்த அடிப்படையில் நான் சரி என்று சொல்லி விட்டேன். இன்று இரவு சேலம் புறப்பட்டுச் செல்கிறேன்.
நியூ செஞ்சுரி புக் அவுஸ் நிறுவனம் தொடங்கி 75 ஆண்டுகாலம் ஆகிறது என்பதையும் கவிஞர் அவர்கள் இங்கே சொன்னார்கள். அந்நிறுவனமும் தொடர்ச்சி யாக வெற்றிகரமான முறையில், சிறப்பான வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தமிழ்நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாக வெளியிட்டவர் தந்தை பெரியார்!
நியூ செஞ்சுரி புக் அவுஸ் நிறுவனம் தொடங்கப்படு வதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சி நூல்களை, மார்க்சிய நூல்களை, மார்க்ஸ் எழுதிய நூல்களை, லெனின் எழுதிய நூல்களை எல்லாம் வெளியிட்டது ‘குடிஅரசு’ இதழ் என்பது ஒரு சிறப்பான செய்தியாகும்.
தமிழ்நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாக வெளியிட்டது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; தந்தை பெரியார்தான்.
அதேபோல, மாவீரன் பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’’ என்கின்ற ஆங்கில நூலை, ஜீவாவை மொழி பெயர்க்கச் செய்து வெளியிட்டதும் தந்தை பெரியார்தான்.
அதேபோன்று, நம்முடைய கவிஞர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள், ஏராளமான கட்டுரைகளை, மார்க்சிய கட்டுரைகளை எழுதுவதற்கு வாய்ப்பளித்த இடமும், தந்தை பெரியாரும், குடிஅரசு இதழும்தான்.
நம்முடைய உறவு என்பது ஒரு சாதாரண உணர்வல்ல. ஒரு உணர்வுப்பூர்வமான உணர்வு.
திராவிடர் கழகத்திற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு என்பது மிக நெருக்கமான உறவாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காலூன்ற வேண்டும்; அது வளரவேண்டும் என்பதற்காக, ஒரு கட்சி வளர்வ தற்கு, இன்னொரு கட்சி உதவி செய்யாது பொதுவாக. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்குத் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், ‘குடிஅரசு’ இதழும் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்பது எதார்த்தமான உண்மை யாகும். இதை நான் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.
குறிப்பாக, நாடு விடுதலைப் பெற்ற பிறகு, பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டுதான் நடைபெற்றது.
நிறைய அரசியல் கட்சிகள் இருக்கின்றன; எண்ணி லடங்காத கட்சிகள். எண்ணிவிடலாம் என்று எண்ணி, ஆயிரம் கட்சி என்று நான் சொல்லி முடிக்கும்போது, இன்னொரு கட்சி தொடங்கப்படும். அது ஆயிரத்து ஒன்று என்றாகிவிடும்.
இந்தக் கட்சிகளில் மிக வித்தியாசமான கட்சி, வேறுபட்ட கட்சி ஒன்று இருக்கிறது என்றால், அது திராவிடர் கழகம்தான்.
அப்படி வித்தியாசமாக இருப்பதால்தான், எதையும் துணிச்சசலாக சொல்ல முடிகிறது.
இன்றைய அரசியலின் நிலை!
கட்சி தொடங்கியவுடன், அவர் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தார்? எத்தனை ஆண்டுகள் ஜெயிலுக்குப் போனார்? என்பதெல்லாம் பிரச்சினையல்ல. கட்சித் தொடங்கியவுடன், அவர்தான் முதலமைச்சர். இப்படித்தான் இன்றைய அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்
தேர்தலில் கூட நிற்க முடியாது!
திராவிடர் கழகத்தில் ஒருவர் உறுப்பினராக சேர்ந்தால், அவர் எவ்வளவு பெரிய ஆற்றல்மிக்கவராக இருந்தாலும், திறமைசாலியாக இருந்தாலும், வசதி வாய்ப்புள்ளவராக இருந்தாலும், படித்தவராக இருந்தாலும், பட்டதாரியாக இருந்தாலும், பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் தேர்தலில் கூட நிற்க முடியாது.
அதனால்தான், இந்தக் கட்சி நிலையாக இருக்கிறது, இருக்கும்.
96 ஆண்டுகள் அல்ல,
960 ஆண்டுகள்கூட நிலைத்து நிற்கும்!
96 ஆண்டுகளாக ஒரு பதிப்பகம் நிலைத்து நிற்கிறது; 96 ஆண்டுகள் மட்டுமல்ல, 960 ஆண்டுகள்கூட நிலைத்து நிற்கும்.
அதற்கு என்ன அடிப்படையான காரணம் என்றால், கவிஞர் இங்கே உரையாற்றும்போது சொன்னார், ‘‘திராவி டர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டை அணியவேண்டும்; ‘விடுதலை’ பத்திரிகையை வாங்கவேண்டும்’’ என்று.
அதேபோன்று, தோழர்கள் நிறைய புத்தகங்களை வாங்குவதையும் நான் பார்த்திருக்கின்றேன்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புத்தகங்கள் வெளியி டப்படும். சில நிகழ்ச்சியில் பல புத்தகங்கள் வெளி யிடப்படும். சில நிகழ்ச்சியில், ஓன்றிரண்டு புத்தகங்கள் வெளியிடப்படும்.
ஒவ்வொரு முறையும்
நான் பார்த்திருக்கின்றேன்!
அப்படி புத்தகங்கள் வெளியிடப்படும்போது, திராவிடர் கழகத் தோழர்கள், அந்தப் புத்தகத்தின் விலை என்ன என்பதுகுறித்து கவலைப்படாமல், வரிசையில் நின்று வாங்குகின்ற அந்த அதிசயத்தை ஒவ்வொரு முறையும் நான் பார்த்திருக்கின்றேன்.
சரி, வரிசையில் நின்று வாங்குகிறார்கள்; படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் வாங்குகிறார்கள். கவிஞருடைய, துணைவியாரும் வந்து வரிசையில் நின்று புத்தகம் வாங்கினார்.
ஏன் இதை நான் சொல்ல வருகிறேன் என்றால், எப்படியும் கவிஞர் அவர்கள், இந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். அப்போது அந்தப் புத்தகத்தை அவர் படிக்கலாம். ஆனால், அதுபோன்று இல்லாமல், இந்தப் புத்தகத்தை நாம் காசு கொடுத்து வாங்கி படிக்கவேண்டும் என்ற நோக்கில் வாங்குகிறார்.
அதேபோல, புலவர் வீரமணியும் இங்கே வந்து புத்தகம் வாங்கினார். அவர் கேட்டால், இலவசமாகவே புத்தகத்தைக் கொடுத்துவிடுவார்கள். அவரும் வரிசை யில் நின்று வாங்கினார்.
பெரியார் பதிப்பகங்கள்
நிலைத்து நிற்பதற்குக் காரணம்!
உண்மையிலேயே இவையெல்லாம் அதிச யங்கள்தான். இந்தப் பதிப்பகம் நிலைத்து நிற்பதற்கு அவையெல்லாம்தான் காரணம்.
ஏன் அப்படி நிலைத்து நிற்கிறது! வரிசையில் வந்து புத்தகங்களை வாங்குகிறார்கள் என்றால், உண்மை சொல்லப்படுகிறது; உண்மை பேசப்படுகிறது. பொய் பேசவில்லை. உண்மைப் பேசப்படுகிறது; அந்த உண்மை ஆதாரத்தோடு பேசப்படுகிறது.
எது வளர்ந்துகொண்டே இருக்கும் என்றால், விஞ்ஞா னம் வளர்ந்துகொண்டே இருக்கும். விஞ்ஞானம் அழியாது; மேலும் மேலும் அது வளரும்.
ஒரு விமானம், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பறந்து போகிறது; அது எவருடைய கண்களுக்கும் தெரியாது; அது நல்லதா, கெட்டதா? என்பது வேறு விஷயம். இன்றைக்கு அதுதானே செய்தி!
விஞ்ஞானத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்தவேண்டும்!
அமெரிக்க விமானம், ஈரானிற்குச் செல்லுகிறது; அது யார் கண்களுக்கும் தெரியாது என்றால், அது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. அந்த விஞ்ஞானத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்; அமெரிக்கா போன்று பயன்படுத்தக்கூடாது.
விஞ்ஞானம் என்பது படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். அதற்கு ஒன்றும் எல்லை கிடையாது.
அதேபோல, தந்தை பெரியார் நிலைத்து நிற்கிறார்; நிலைத்து நிற்பார். திராவிடர் கழகம் நிலைத்து நிற்கும்; மேலும் நிற்கும் என்று சொன்னால், திராவிடர் கழகம், தந்தை பெரியார் என்பதெல்லாம் விஞ்ஞானம் – விஞ்ஞானம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.
இங்கே உரையாற்றிய எழுத்தாளர் சிவகாமி அவர்கள், ‘‘பெரியார் புத்தகங்களையெல்லாம் நிறைய படித்திருக்கிறேன்’’ என்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் புத்தகங்களைப் படித்ததினால்தான், நான் இப்படி பேசுகிறேன், வளர்ந்திருக்கிறேன் என்று சொன்னார்.
ஆசிரியர் எழுதிய
‘‘கீதையின் மறுபக்கம்!’’
‘‘கீதையின் மறுபக்கம்’’ என்ற நூலை ஆசிரியர் எழுதியது. அந்தப் புத்தகத்தை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்; நானும் படித்திருக்கின்றேன்.
அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ஒரு செய்தி. கடந்த 18 ஆம் தேதி கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிட நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போதும், அந்தச் செய்தியை ஆசிரியர் குறிப்பிட்டார். நீங்கள் எல்லோரும் கவனித்திருப்பீர்கள்.
அது மிக முக்கியமான செய்தி. என்றென்றைக்கும் பொருந்தக் கூடிய செய்தி. எல்லோருக்கும் பொருந்தக் கூடிய செய்தி.
‘‘நாம் விடுதலைப் பெற்றிருக்கின்றோம். 1947 ஆம் ஆண்டில் நாடு ஓர் அரசியல் விடுதலையைப் பெற்றிருக்கின்றது. ஆனால், அதேநேரத்தில், நம்மு டைய மூளை இன்னும் விடுதலை பெறவில்லை’’ என்று அந்த முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார்கள்.
இதுதான் முக்கியமான செய்தி.
மூடநம்பிக்கை பழக்க வழக்கங்களிலிருந்து மக்கள் விடுதலை பெற்று வரவேண்டும்!
அந்த விடுதலையைப் பெறவேண்டும் என்பது தான் தந்தை பெரியாருடைய நோக்கம். தான் முதல மைச்சராக வேண்டும், பிரதமராக வேண்டும் என்பது அல்ல அவருடைய நோக்கம்.மூடநம்பிக்கை பழக்க வழக்கங்களிலிருந்து மக்கள் விடுதலை பெற்று வரவேண்டும்.
இங்கே கவிஞர் அவர்கள் உரையாற்றும்போது சொன்னார், பெரியார் அவர்கள் திருமண விழாவில் அய்ந்து மணிநேரம் உரையாற்றினார். பொதுக்கூட்டங்க ளில் நான்கு மணிநேரம் பேசினார் என்று.
நான், புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகப் பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் ஆகியோரும் என்னுடன் வந்தார்கள்.
நான் அவர்களிடம் கேட்டேன், ‘‘பெரியாருடைய பேச்சை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’’ என்று.
அப்போது பொருளாளர் சொன்னார், ‘‘நான், பெரி யாரைப் பார்த்ததே இல்லை’’ என்றார்.
பெரியாரைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!
எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. பார்த்தது மட்டுமல்ல, அவருடைய உரையைக் கேட்பதற்கான அற்புதமான வாய்ப்பு.
திருத்துறைப்பூண்டியில், ஆண்டிற்கொரு முறை நிச்சயமாக தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொள்ளும் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும். அந்தப் பொதுக்கூட்டத்திற்கு ஆசிரியரும், பொதுச்செயலாளர் என்ற முறையில் வருவார்கள்.
இரண்டு மணிநேரம், மூன்று மணிநேரம் கூட்டம் நடைபெறும்.
இன்றைக்குப் போன்று, இருக்கைகள் போட்டு, எல்லோரையும் அமர வைத்து நடைபெறும் கூட்டமாக இருக்காது.
நான் பார்த்தபோது, பெட்ரோமாக்ஸ் லைட் இல்லை; கரண்ட் வந்துவிட்டது – டியூப் லைட், மைக் செட் எல்லாம் போட்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் வருவார்கள். எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் வருவார்கள். பெரியாருடைய உரையைக் கேட்கவேண்டும் என்று ஆர்வத்தோடு வந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். இரவு 12 மணிவரையில்கூட கூட்டம் பெறும்.
(தொடரும்)