சென்னை, ஜூன் 24 முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என்றும், இந்த மாநாட்டில் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் மேனாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘‘முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், பெரியார், அண்ணா ஆகியோரை இழிவு படுத்தியும் காணொலி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது. இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் மேனாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது.
மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. 2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பாஜக எல்.முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே நிலை தான் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்
Leave a Comment