சென்னை, ஜூன் 24- மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கைபேசி செயலியை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே 21.6.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட் டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை tnsocial welfare.tn.gov.in (கைப்பேசி) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் செப்டம்பர் 2023இல் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருந்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட் டுள்ளது.
இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடி மக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மக்களும் இந்த கைப்பேசி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருநங்கையர் பராமரிப்பு குறித்து பயிற்சியாளர்களுக்கான பல்துறை பயிற்சி
சென்னை, ஜூன் 24- “அனைத்து தனிநபர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்வதற்காக, அனைவரையும் உள்ளடக்கிய மருத்துவப் பராமரிப்புக்கு பரிவுணர்ச்சி, அறிவு மற்றும் அர்ப்பணிப்புமிக்க பயிற்சி தேவை” என்று சென்னை பாலியல் – மருத்துவ ஆராய்ச்சி, கொள்கை மய்யத்தின் தலைவர் டாக்டர் வெங்கடேசன் சக்கரபாணி, திருநங்கையர் பராமரிப்பு குறித்த தேசிய அளவிலான பயிற்சியாளர்களுக்கான பல்துறை பயிற்சியின் தொடக்க விழாவில் கூறினார்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம். எஸ்.ஆர்.எம். நர்சிங் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த இரண்டு நாள் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தன. மருத்துவ கல்வி அமைப்புகளில் திருநங்கைகள், பாலின பன்முகத்தன்மை கொண்ட நபர்களுக்கு கண்ணியமான, மேம்பட்ட பராமரிப்பை வழங்குவதற்குத் தேவையான அத்தியாவசிய அறிவு, நடைமுறை திறன்கள் மற்றும் விழிப்புணர்வை சுகாதார நிபுணர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டத்திற்கு, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவி செய்தது.
எஸ்.ஆர்.எம். நர்சிங் கல்லூரியின் டீன் டாக்டர் ஹெலன் ஷாஜி ஜே.சி. பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசுகையில், “இந்தப் பயிற்சிக்கான பரந்த இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். இது வெறும் பயிற்சி மட்டுமல்ல. ஒவ்வொரு தனிநபரையும் கண்ணியத்துடன் ஆதரிக்கும் வகையில், சேவை அமைப்புகளை வடிவமைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது” என்றார்.