கீழடி தமிழர் தாய்மடி

viduthalai
2 Min Read

மதுரை கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணியினை மேற்கொண்டது. இதனை தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். அப்போது ஒரு நகரமே பூமிக்கு அடியில் புதையுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செங்கலால் வீடுகள் நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தன. பெரும்பாலான வீடுகள் கிழக்கு திசை நோக்கி இருந்தது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தண்ணீர் வெளியேற வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு இருந்தன. வீட்டின் பின்புறம் குளியலறைகளும், உறை கிணறுகளும் இருந்தன. இதுதவிர அந்த மக்கள் பயன்படுத்திய மண்பானைகள், இரும்பிலான ஆயுதங்கள், அணிகலன்கள் மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தப் பொருட்களை அமெரிக்காவில் உள்ள கார்பன் பகுப்பாய்வு மய்யத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இவை, 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் வைகைக்கரை கீழடி நாகரிகம், கங்கைக் கரை நாகரிகத்திற்கு முற்பட்டது என இந்த உலகத்திற்கு பறைசாற்றப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக கீழடி ஆய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்க மறுத்துவிட்டது. அதனால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை தொடங்கியது.2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் இதில் தீவிர ஆர்வம் காட்டினார்.

இந்தச் சூழ்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வு குறித்த தனது 982 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை கடந்த 2023-ஆம் ஆண்டு ஒன்றிய அரசாங்கத்துக்கு சமர்ப்பித்தார். ஆனால் அந்த அறிக்கையை ஒன்றிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு திருப்பி அனுப்பியது.

ஆனால் அவர், தன்னுடைய ஆய்வறிக்கை அறிவியல் பூர்வமானது.  எனவே அதனை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக கூறி ஒன்றிய அரசுக்கே அதனை திருப்பி அனுப்பிவிட்டார். இந்த அறிக்கையில், ஒன்றிய அரசு திருத்தம் செய்ய கோரியதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அ.தி.மு.க.வும் அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தால் களத்தில் இறங்குவோம் என்று அறிவித்து இருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கீழடி நாகரிகம் தொடங்கியது 2,800  ஆண்டுக்கு முன்பு என்று கூறியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு அதனை 2,300-ம் ஆண்டு என திருத்தச் சொல்வதாகத் தெரிகிறது. அதாவது சிந்து சமவெளி நாகரிகம் முடிவுற்றதும், கீழடி நாகரிகம் தொடங்குவதும் 2,800 ஆண்டு என்ற ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறது. இந்த கால ஒற்றுமை சிந்துசமவெளிக்கும்,கீழடிக்கும் தொடர்பு இருக்கிறது என்பதனை சுட்டிக் காட்டுகிறது.

அதற்கிடையில் கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இந்த ஆதாரங்கள் போதாது என்றும், இன்னும் கூடுதல் ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள் தேவை என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சரி.. அந்த ஆய்வுகளை ஒன்றிய அரசு விரைந்து முடித்து கீழடி ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும். அதன் உண்மையான வரலாறும் மக்களுக்கு தெரியவேண்டும். ‘கீழடி தமிழ்நாட்டின் தாய் மடி என்பது ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும் துடிப்புடன் ஓடுகிறது. இந்த ஆய்வறிக்கை விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வந்து, கீழடியின் பழைமை வரலாறு உலகுக்கு பறைசாற்றப்படவேண்டும் என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் 23.6.2025

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *