சென்னை, ஜூன் 22 பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 65,980 வண்டல் வடிகட்டி தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது, என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் 3,041 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வ தற்கும், சாலைகளில் மிதக்கும் கழிவுகள் வடிகால்களில் நுழைவதை தடுப்பதற்கும், வண்டல் மண் சேகரிக் கவும், 5 மீ. இடைவெளியில் வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வண்டல் வடிகட்டி தொட்டிகளின் மூடி பெரிய குப்பைகளை தொட்டியில் செல்வதை தடுத்து மழைநீர் மட்டும் தொட்டியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேகரிப்பு குழிகளில் வண்டல் மண் சேகரிக்கப்படுகிறது. வண்டல் வடிகட்டி தொட்டிகளிலிருந்து 2 குழாய்கள் மூலம் மழைநீர் தங்குதடையின்றி மழைநீர் வடிகால்களில் சீராகச் செல்லும்.
மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால்களில் 5 மீ. இடை வெளியில் இதுவரை சுமார் 1,07,677 வண்டல் வடிகட்டி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 65,980 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் குப்பை அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகளில் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.