சென்னை, ஜூன் 22- தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள், உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு, ஒருங்கிணைப்பு ஆசிரியா்களை நியமிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கற்றல் – கற்பித்தல்
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் அமைக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
வழிகாட்டுதல்
அதன் விவரம்- பள்ளிகளில் உள்ள டேப்லெட்டுகள், திறன்மிகு வகுப்பறைகள், உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள், இணைய வசதி ஆகியவை சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். திறன்மிகு வகுப்பறை, ஆய்வகம் ஆகியவற்றை தொடக்கக் கல்வி இயக்ககம் வழங்கியுள்ள அட்டவணை அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.
இவற்றை ஆசிரியா்கள், மாணவா்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், வழிகாட்டு தல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவற்றில் தொழில்நுட்பப் பிரச்சினைகள், பழுதுகள் ஏற்பட்டால் 044-40116100 என்ற உதவி மய்யத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும்.
திறன்மிகு வகுப்பறை, ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலராக ஆசிரியா் ஒருவரை பரிந்துரைக்க வேண்டும்.
மேலும், இது தொடா்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பொறுப்பு அலுவலராக செயல்படும் ஆசிரியா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் கெலட்ரான் நிறுவனம் சாா்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.