கும்பகோணம் மாவட்டத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ”குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள்!

Viduthalai
6 Min Read

கும்பகோணம், ஜூன் 21- கும்பகோணத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

கும்பகோணம் மாவட்டம் சார்பாக சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு – ”குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம் 7.6.2025, சனிக்கிழமை அன்று, மகாமகம் குளம் எதிரில் உள்ள ”ராயா கிராண்ட்” தங்கும் விடுதி நான்காம் மாடியில் உள்ள அரங்கத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

இராசகிரி கோ. தங்கராசு, சாக்கோட்டை கே.கணபதி, தாராசுரன் ஜி.என்.சாமி ஆகி யோரின் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. சுயமரியாதைச் சுடரொளிகள் 100க்கும் மேற்பட்டோரின் பெயர்களை மேடையின் இரண்டு பக்கங்களிலும் தனித்தனி பதாகைகளாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் நிறுவியிருந்தனர். நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நட்சத்திர தங்கும் விடுதியைச் சுற்றி உள்ள முக்கியமான சாலைகளில் கண்களை கவரும் வண்ணம் கழகக் கொடிகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. அத்துடன் ஆங்காங்கே பதாகைகள் நிகழ்வையும், தலைமையேற்று சிறப்பிக்க வரவிருக்கும் கழகத் தலைவரை வரவேற்கும் வண்ணம் காணப்பட்டன. முன்னதாக பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல் உள்ளிட்ட தோழர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இனமான பாடல்களை பாடினர்.

சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அடுத்து கும்பகோணம் மாநக ராட்சியின் துணை மேயர் சுப.தமிழழகன், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் ஆகியோர் உரையாற்றினர்.

அதைத் தொடர்ந்து கருத்தரங்கம் தொடங்கியது. ’பண்பாட்டு படையெடுப்பு தகர்ப்பு’ எனும் தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழிலரசன், இதழ்களின் வழிகாட்டி குடிஅரசு’ எனும் தலைப்பில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன், ‘சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்’ எனும் தலைப்பில் கழக கிராமப் பிரச்சாரக் குழுத் தலைவர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் உரையாற்றினார். அடுத்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேந்திரன் உரையாற்றினார். இணைப்புரை மற்றும் மேடை ஒருங்கிணைப்புப் பணிகளை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மேற்கொண்டார். மயிலாடுதுறை, நாகை மாவட்ட கழகத் தோழர்கள் உண்மை, விடு தலை சந்தாக்களை வழங்கினர்.

சோழபுரம் கலியனை சிறப்பித்த கழகத் தலைவர்!

முன்னதாக 550 ரூபாய் மதிப்புள்ள 5 புத்தகங்களின் தொகுப்பு 400 ரூபாய்க்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். தோழர்கள் வரிசையாக வந்து உரிய தொகையைக் கொடுத்து, கழகத்தலைவரிடம் புத்தகங்களை பெற்றுக் கொண்டு சென்றனர். அத்துடன், பெரியார் உலகம் பணிகளை விரைவுபடுத்த நன்கொடை வழங்க கழகத் தலைவர் விடுத்த அறிக்கையை வாசித்தார். உடனடியாக சாக்கோட்டை க.அன்பழகன் 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார். அடுத்து, சோழபுரம் கலியன் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவருக்கு சிறப்பு செய்தார்.

சாக்கோட்டை சுயமரியாதைக் கோட்டை!

இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், அரங்கம் நிறைந்து காணப்படும் மக்கள் திரளில் ஏராளமான பெண்கள் குழுமி இருப்பதைக் கண்டு மிகுந்த உற்சாகத்துடன், சுயமரியாதை இயக்கத்தின் சாதனையாகவே, ”மகளிர் திரண்டு வந்திருப்பதே சுயமரியாதை இயக்கத்தின் முதல் புரட்சி” என்று உற்சாகத் துடன் தொடங்கினார். அருகில் அமர்ந்திருக்கும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் சுட்டிக்காட்டி, “சாக்கோட்டை சுயமரியாதைக் கோட்டை” என்றும், அவரது தந்தையார் கணபதி மற்றும் ஆர்.பி.எஸ். ஆகியோர் 1932 லேயே ஜாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள்” என்றொரு வியப்பான தகவலைச் சொல்லி, “இந்தத் தேர் எங்கு சென்றாலும் இந்த நிலைக்குத்தான் திரும்ப வேண்டும்” என்று சாக்கோட்டை அன்பழகனை சுட்டிக்காட்டி கலகலப்புடனும் உரையைத் தொடர்ந்தார். கும்பகோணத்தை சுற்றியே இயக்கம் சார்பாக நடைபெற்ற பல்வேறு வரலாற்று சம்பவங்கள் அவருக்குள் எழுந்து, நிகழ்காலத்திலிருந்து 80 ஆண்டுகளுக்கு முன் சென்று, மேடையின் இரண்டு பக்கமும் வைக்கப்பட்டுள்ள சுயமரியாதைச் சுடரொளிகளின் பதாகைகளை சுட்டிக்காட்டியபடி, “இவர்களின் தியாகத்தால் அமைக்கப்பட்ட மேடையில் தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். ”சுனா மானாக்காரங்க கூட்டமா? ஏதோ புதுசா பேசப்போறாங்களாமே! ஜாதி இல்லேன்னு சொல்லப் போறாங்களாமே! என்றுதான் மக்கள் பேசிக்கொள்வார்கள்” என்று அன்றைக்கு நடந்த சுயமரியாதை பிரச்சாரத்தை நினைவூட்டினார்.

படிக்கட்டும்; ஏணியும்; சுயமரியாதை இயக்கமும்!

மேலும் அவர், “இங்கே இருக்கிற காங்கேயன் பார்க் தெரியும், உப்புக்காரத் தெரு, மானாதுறை தெரியும் என்று வரிசையாக கும்பகோணத்தில் அன்றைய காலத்தில் கூட்டங்கள் நடந்த இடங்களை அடுக்கினார். அன்றைக்கு அய்யா நடத்திய குடிஅரசு, அண்ணா நடத்திய திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளில் ஒரேயொரு விளம்பரம் தான் வரும். நமக்கு விளம்பரமே கொடுக்கமாட்டாங்க. ஆனால், ’ஜெயராம் காயசுத்தி லேகியம்’ என்று ஒரேயொரு விளம்பரம் வரும். மானா துறையில்தான் சிறீராமுலு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவர் மட்டும்தான் அந்த விளம்பரத்தைக் கொடுத் தார். அந்தக்காலத்திலேயே சாக்கோட்டையில் பகுத்தறிவு விதை வளரத்தொடங்கிவிட்டது. அப்படி இருந்த நிலையில் கும்ப கோணத்தில் தெருத்தெருவாக கூட்டம் நடத்தியிருக்கிறோம். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது, “எப்படி ஆட்டுக்கார அலமேலு படத்தில் ஆடு வருதுன்னு சொன்னா கூட்டம் வருமோ அதுபோல, 10 வயது பகுத்தறிவுச் சிறுவன் என்று விளம்பரம் செய்வார்கள்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி, மக்களையும் சிரிக்கச் செய்தார்.  அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி கொண்டிருக்கிறோம். என்று பழைய நினைவுகளுக்கு முத்தாய்ப்பு வைத்து பலத்த கைதட்டல்களுடன் முடித்தார். சுயமரியாதை இயக்கம் பற்றி சுருக்கமாகச் சொல்ல ஒரு அருமையான உவமையைச் சொன்னார். அதாவது, “படிக் கட்டு படிக்கட்டாகவேதான் இருக்கும். படிக்கட்டு இல்லையென்றால் மேலே ஏறமுடியாது. அதுபோலவே ஏணி ஏணியாகவே இருக்கும். ஏணி இல்லையென்றால் மேலே ஏறமுடியாது. அதுபோலத்தான் சுயமரியாதை இயக்கமும். தான் படிக்காட்டாகவும், ஏணியாகவும் இருந்து மக்களின் உயர்வுக்கு அடித்தளமாக இருந்தது. அந்த சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர் தான் தந்தை பெரியார்” என்றார். அடுத்து இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் தமிழ்நாட்டுக்காரரிடம் பேசும் போது நடந்த ஒரு அரிய கருத்தை சுட்டிக்காட்டினார். அந்த நீதிபதி தமிழ்நாட்டுக்காரரிடம், “அதெப்படி நாடாளுமன்ற தேர்தலில் வென்ற 40 பேரில் ஒருவர்கூட பார்ப்பனர் இல்லை. அதுபோலவே சட்டமன்ற தேர்தலிலும் வென்றவர்கள் 234 பேர், அதில் திராவிட இயக்கம் அல்லாத கட்சிகளும், ஏன் பி.ஜே.பியும் இருக்கின்றனவே அவர்களிலும் ஒரு பார்ப்பனர் கூட இல்லையே ஏன்?” என்று வியந்து கேட்டதாகக் கூறி விட்டு, ”அதுதான் பெரியார் மண்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, சுயமரியாதை இயக்கம் போட்ட அடித்தளம் இது என்பதை நினைவூட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

நிகழ்வில், சோழபுரம் கலியன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனை செல்வன், மாவட்டக் காப்பாளர்கள் அய்யனார், இளங்கோ, வீர. கோவிந்தராசு, பொன்.பன்னீர்செல்வம், சு.மணிவண்ணன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சி.அமர்சிங், செயலாளர் அ.அருணகிரி, மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் கோ.கணேசன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அ.ச.குணசேகரன், திருவாரூர் மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சுரேஷ், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், செயலாளர் பூபேஷ் குப்தா, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் திருவாரூர் மோகன், அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கு.இளமாறன், அரியலூர் மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், கும்பகோணம் மாநகரத் தலைவர் பீ.இரமேஷ், மாநகரச் செயலாளர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.  அத்துடன் அரியலூர், மயிலாடுதுறை, மன்னார்குடி தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அரங்கம் நிறையும் அளவுக்கு வருகை தந்திருந்து திராவிட இயக்கத்தின் அடி நாள் வரலாற்றை உள்வாங்கி விடைபெற்றுச் சென்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *