சென்னை, ஜூன் 21– தி.மு.க. கூட்டணி இரும்புக் கோட்டை போன்றது, அதில் ஓட்டை விழாது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
ராகுல்காந்தியின் 55ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று (20.6.2025) சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தையல் எந்திரங்கள், துணிமணிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும், இலவச செவிப் புலன் விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், ரத்ததான முகாம் ஆகியவை காங்கிரஸ் மருத்துவர் அணி நிர்வாகி மருத்துவர் நிர்மல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வழக்குரைஞர் கீ.சு.குமார் தயாரித்து இயக்கிய ‘அவர் பெயர் ராகுல் காந்தி’ என்னும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
மேலும், ‘சமூகநீதிக்கான ஒரே தீர்வு நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என ஓங்கி குரல் கொடுக்கும் ராகுல் காந்தி’ என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஓட்டை விழாது
பின்னர், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓட்டை விழாது. இது இரும்புக் கோட்டை போன்ற கூட்டணி. இது இந்த தலைமுறை மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கான கூட்டணி.எனவே எந்த ஓட்டையும் விழாது. உறுதியான கூட்டணியாக இருக்கும்.
மதுரையில் 11 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக ஏமாற்றி வருகிறார்கள். அதற்கு எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது, எப்போது நிதி ஒதுக்கப்பட்டது?
வடமாநிலங்களில் உள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்பட்டது. மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானிடம் இருந்து கடன் வாங்கி கட்டுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு ஓரவஞ்சனையோடு பா.ஜனதா அரசு பார்க்கிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.
காமராசர் காலத்தில்
மருத்துவ கட்டமைப்பு
மருத்துவ கட்டமைப்பு
ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். எய்ம்ஸ் உருவாவதற்கு முன் தமிழ்நாட்டில் காமராசர் காலத்தில் வலிமையான மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இவற்றை யெல்லாம் கட்டியது யார்? இந்தியாவிலேயே இல்லாத வலிமையான மருத்துவ கட்டமைப்பை பெருந்தலைவர் காமராசர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.வி.தங்கபாலு, கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், விஜயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.