1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.
-
பட்டீசுவரம் அய்யாசாமி
( கதர்ச்சட்டைக்காரர், கருஞ்சட்டைக்காரர் ஆனார் )
‘‘ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே தலைமை என்கிற கோட்பாட்டில் கட்டுப் பாடு காத்து கண்ணியமாக வாழ்வது என்பது கருஞ் சட்டைக் குடும்பத்தின் இலக்கணம். அதில் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று நினைக்கிறேன். இதைவிட வேறு எனக்கு என்ன பெருமை வேண்டும்?’’ என்று மனம் நெகிழ்ந்து கூறியவர் பெரியார் பெருந்தொண்டர் பட்டீசுவரம் அய்யாசாமி.
தஞ்சை மாவட்டம் பட்டீசுவரத்தில் கஞ்சமலை – இலட்சுமி ஆகியோரின் மகனாக 20.4.1928இல் பிறந்தார். குடும்பச் சூழலில் அய்ந்தாம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது.
அய்யாசாமி துவக்கத்தில் காங்கிரஸ்வாதி. தந்தை பெரியார் கூட்டத்தில் பேசுவதற்காக பட்டீசுவரம் வந்தார். அப்பொழுதெல்லாம் ஒலி பெருக்கியே கிடையாது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரியார் உரத்தக் குரலில் பேசிக் கொண்டு இருந்தார். கூட்டத்தில் கலாட்டா செய்து கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
பெரியார் பேசிக் கொண்டு இருந்தபோதே அவரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கல்லெறிந்தவர்களில் காங்கிரஸ்காரரான இளைஞர் அய்யாசாமியும் ஒருவர். கூட்டத்தில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.
பெரியார் பதற்றப்படவில்லை. கல்லெறிந்தவர் களுக்கு பதிலடி கொடுக்க ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்த இளைஞர்களை கட்டுப்படுத்தினார். பின்னர் நிதானத்துடன் அவர் செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
தன்மீது வீசப்பட்ட கற்களை குனிந்து பொறுக்கிய பகுத்தறிவுப் பகலவன் அவற்றை மேடையிலேயே ஏலம் போட்டார். கலவரம் ஏற்படும் என நினைத்த எதிராளிகள் திகைத்துப் போய் நிற்க பெரியார் தொடர்ந்து பேசினார். அப்போது அவர் பேச்சில் அனல் பறந்தது. அடுக்கடுக்காக ஆணித்தரமாக பேசினார்.
அவரது சொல்லம்புகள் அய்யாசாமியின் மனதை ஆழமாக தைத்தன.
பெரியார் பேச, பேச அறியாமை காரணமாக அய்யாசாமியின் இதயத்தில் தோன்றிய சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.
பெரியார் சொல்வதெல்லாம் நியாயமாகத்தான் இருக்கிறது. கல்லெறிந்தவர் சிந்திக்க ஆரம்பித்தார். அதுதான் தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்த தனித் தன்மை என்பது அவருக்கு அப்பொழுது எப்படி தெரியும்? பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்ட கதர்ச்சட்டை அய்யாசாமி கொஞ்சம் கொஞ்சமாகக் கருப்புச் சட்டைக்காரர் ஆனார். பட்டீசுவரத்தில் அறிவு வளர்ச்சி மன்றத்தைத் தொடங்கி அதன் செயலாளராகவும் ஆனார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர நாளின் போது நடந்த நிகழ்வு அய்யாசாமி வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
‘விட்ட குறை தொட்ட குறை’யாக இருந்த அய்யாசாமி சுதந்திர நாளில் காங்கிரஸ் கொடி ஏற்ற ஆசைப்பட்டார். காங்கிரஸ்காரர்களோ ‘நீ கருப்பு சட்டைக்காரன், நீ ஏற்றக் கூடாது’ என்றனர். இதை எதிர்பார்க்காத அய்யாசாமிக்கு மனக் குழப்பம் ஏற்பட்டது. அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய ஆசிரியர் கோவிந்தராசன் என்பவர் தனது கருப்புச் சட்டையை அய்யாசாமியிடம் கொடுத்து அணியச் செய்தார்.
ஏற்கெனவே தந்தை பெரியாரின் கருத்துகளை உள்வாங்கி கொண்டு இருந்த அய்யாசாமி அன்று முதல் அதிகாரப் பூர்வமான திராவிடர் கழகத்துக்காரராகி விட்டார்.
கழகப் பணி – களப்பணி உயிர் மூச்சு
அய்யாசாமி என்னும் இளங்காளை கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டதும் பட்டீசுவரத்திலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கழக பிரச்சார அலை அடிக்க ஆரம்பித்து விட்டது. கழகப் பணி களப் பணி என்பது அவரின் உயிர் மூச்சாகி விட்டது.
அறிஞர் அண்ணா, சி.பி. சிற்றரசு என்று கழகப் பேச்சாளர்களை அழைத்துக் கூட்டம் போட்டார். சுற்று வட்டாரப் பகுதிகளுக்கெல்லாம் சென்று தோழர்களை சந்தித்து கூட்டம் போடுவது என பம்பரமாக சுழன்று கழக பணியாற்றினார்.
புதுப்படையூர், நாதன்கோயில், மணப்படையூர், தென்னூர் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவரது ஏற்பாட்டில் எப்பொழுதும் இயக்க நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும். அங்கு நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் எல்லாம் அனேகமாக அவர் தலைமையில் தான் நடக்கும்.
1949 மார்ச் 19ஆம் நாள் டாக்டர் ஜானகிராமன் தலைமையில் முருகேசன் – சிவகாமி ஆகியோரின் மகள் சவுந்தரவல்லியை வாழ்க்கைத் துணைவியராக ஏற்றுக் கொண்டார்.
தீவிரமான சுயமரியாதைக் கொள்கை உடைய வராக இவர் நடந்து கொண்டதால் துவக்கத்தில் மாமனார் வீட்டு உறவே முறிந்து விட்டது. படிப்படியாக அது சரியாகி விட்டது. துணைவியாரையும் கழக நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார்.
அய்யாசாமிக்கு இளவழகன், இராவணன் என்று இரண்டு மகன்கள்.
கொள்கையில் உறுதி
இராவணனை குடந்ைத நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கட்ராமன் என்ற பார்ப்பனர், இராவணன் என்கிற பெயரை மாற்றிட வேண்டும் என்றார். கொள்கையில் உறுதியாக இருந்த அய்யாசாமி பிடிவாதமாக பெயரை மாற்ற மறுத்து விட்டார். தனது மருமகள்கூட துவக்கத்தில் ஆத்திகவாதியாக இருந்தார். இப்பொழுது தீவிரப் பெரியாரிஸ்டாக மாறி இருக்கிறார் என்று பூரிப்போடு கூறினார் மாமனார் அய்யாசாமி.
இது பெரியார் தொண்டர்களுக்கே உரிய மாற்றுக் கருத்தாளர்களையும் மாற்றும் அருங்குணம்.
10.2.1976 அன்று தனது மகன், மகள், அண்ணன் மகன், மகள் ஆகிய நான்கு பேர்களுக்கும் அன்ைனமணியம்மையார் தலைமையில் ஒரே நேரத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நடத்தி வைத்தார்.
ஆசிரியர் நடத்தி வைத்த ஜாதி மறுப்பு திருமணம்
3.3.1985 அன்று அய்யாசாமி மகன் இராவணனுக்கு ஜாதி மறுப்புத் திருமணத்தை இராகு கால நேரத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையி்ல நடந்தேறச் செய்தார். 1988இல் இவரின் மணிவிழாவும் தமிழர் தலைவர் தலைமையில் வெகு சிறப்புடன் நடத்தப்பட்டது.
பட்டீசுவரம் திராவிடர் கழகச் செயலாளர் (1948), நெசவாளர் சங்க செயலாளர், குடந்தை வட்ட திராவிடர் கழக துணைச் ெசயலாளர் (1952), குடந்தை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் (1974,1978), குடந்தை நகரக் கழகச் செயலாளர் (1986) என கழகத்திலும், பொதுக் காரியத்திலும் பல பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.
பெரியார் சிலை திறப்பு
குடந்தையில் நடைபெற்ற பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாட்டின்போது அதன் செயலாளர். 1988இல் இவரின் முயற்சியால் பட்டீசுவரத்தில் தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.
1948 குடந்தையில் அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு அறப்போரில் பங்கேற்றது முதல் கழகம் நடத்திய அனைத்து போரட்டங்களிலும் அனேகமாகக் கலந்து கொண்டு சிறை சென்று இருக்கிறார்.
1965இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மறக்க முடியாதது. குடந்தை வட்டம் தென்னூரில் இடுகாட்டுக்குச் செல்லும் வழி தாழ்த்தப்பட்டவருக்கு மறுக்கப்பட்டது. வேறு வழியில் கொண்டு போக முடியாது என்று இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மூன்று நாள் பிணத்தை பாதையில் வைத்து உயர் மட்ட அலுவலர்களை அழைத்து முத்தரப்புப் பேச்சு நடத்தி கடைசியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின்போது ஜாதி வெறியர்கள் கல் வீச்சுக்கு தோழர் அய்யாசாமி ஆளாகி காயப்பட்டார்.
மண்டல் குழு பரிந்துரைகளை அமைக்கக் கோரி டில்லி நாடாளுமன்றம் முன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு கைதாகி விடுதலையானார். அய்யாசாமி இலங்கையில் நடைபெற்ற பெரியார் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தம் வாழ்நாளில் என்ெறன்றும் மறக்க முடியாது என்றார்.
தொகுப்பாளர்: தமிழ்க்கோ
(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)