பணியாளர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒரு டீக்கடை, சுமார் 100 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றால் நம்புவீர்களா?
இந்த டீக்கடை, மேற்கு வங்காள மாநிலம் சீராம்பூரில் இருக்கிறது.
இந்த டீக்கடையின் தற்போதைய உரிமையாளர் அசோக் சக்ரவர்த்தி. இவர் காலை 7 மணிக்கு டீக்கடையை திறந்துவிட்டு, தனது வேலைக்குச் சென்று விடுவார். மீண்டும் இரவு 7 மணிக்கு திரும்பி வந்து டீக்கடையை மூடுவார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் அசோக் சக்ரவர்த்தி டீக்கடைக்கு தேவையான பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவற்றை கொண்டு வந்து வைத்துப் போவார். மாலையில் கடையை மூடிவிட்டு, விற்பனை பணத்தை எடுத்துச் செல்வார்.
இந்த கடையில் அசோக் எந்த பணியாளர் களையும் வைத்துக் கொள்ளவில்லை. அவரது நண்பர்களோ, குடும்பத்தினரோ இந்த டீக்கடையை நடத்துவதில்லை.
அவர்கள் மக்கள்!!!
மாறாக, ஓய்வு பெற்றோர், மூத்த குடிமக்கள் தான் இந்த டீக்கடையை கவனிக்கிறார்கள்.
தங்களுக்குள் கலந்துரையாடியபடி, வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு கொடுக்கிறார்கள். வாடிக்கையாளர்களும் அவர்களாகவே டீ போட்டு பருகிச் செல்வதும் உண்டு. பணத்தை கல்லாவில் போட்டு விடுவார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திர ஷோம் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தக் கடை, சுதந்திரப் போராளிகளின் சந்திப்பு மய்யமாக திகழ்ந்திருக்கிறது.
அதன் பின் தலைமுறை தலைமுறையாக இக்கடை கை மாறி வந்துள்ளது. ஆனால் இந்த அதிசய டீக் கடை செயல்படும் முறையில் மட்டும் இன்று வரை மாற்றமில்லை. எல்லா இடங்களிலும் ஏமாற்றும் மக்கள் உள்ள நிலையில் இந்த மாதிரியான மக்கள் இருப்பது வியப்புதான்!