தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
அய்.அய்.டி., அய்.அய்.எம்., என்.அய்.டி. போன்ற அதிஉயர் கல்வி நிறுவனங்களுக்கு நம் பிள்ளைகள் தலைநிமிர்ந்து நுழையும் போது ஒட்டுமொத்த தமிழ்நாடுமே பெருமைப் படவேண்டிய அழகிய தருணம் இது.
கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ஆங்கில நாளிதழ்களில் வந்த செய்திகள் சமூகநீதிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கும் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்திருக்கும்.
அச்செய்திகளில் சில:
பழங்குடியின மாணவிகளின்
மாபெரும் சாதனை
மாபெரும் சாதனை
60 ஆண்டுகளில் இல்லாத அளவில் பழங்குடி இன சமுதாயத்தைச் சேர்ந்த ரோகிணி, சுகன்யா என்னும் 2 மாணவியர் 2024 ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்.அய்.டியில் சேர்ந்து மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இந்த இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள் ஆவர். “ஜே.இ.இ. தேர்ச்சி பெற்று திருச்சி என்.அய்.டி. நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு எங்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம்தான் உதவியது” என முதலமைச்சருக்கு இந்த இரு மாணவிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.
வானூர்தி வடிவமைப்புப் படிப்பில் சேர்ந்த விருதுநகர் மாணவன்
விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவன் சி.பார்த்தசாரதி, சென்னை அய்.அய்.டி.யில் வானூர்தி வடிவமைப்புப் பிரிவில் சேர்ந்து, தனது கனவு நிறைவேறியது என பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஆதிதிராவிட நலத்துறை நடத்தும் பள்ளிகளில் படித்து முதன்முதலில்
அய்.அய்.டி. நிறுவனத்தில் சேர்ந்த அந்த மாணவன், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம்தான் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு JEE, NEET, CLUT, NIFT மற்றும் CUET போன்ற உயர்கல்வி தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்களும், திருச்சி NIT கல்லூரியில் மூன்று மாணவர்களும், திருச்சி தேசியச் சட்டக் கல்லூரியில் ஒரு மாணவரும், சென்னை தரமணி NIFT-ல் நான்கு மாணவர்களும் திண்டுக்கல் காந்தி கிராம் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆறு மாணவர்களும், ஆக 16 மாணவர்கள் சேர்ந்து அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சாமானிய மக்களின் உயர்கல்வித்தேர்ச்சி விகிதம் 70 விழுக்காட்டில் இருந்து 90 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
பொறியியல் துறையை நமது பிள்ளைகள் ஆளும் சூழல் கனிந்துவிட்டது.
ஆனால், மலைக் கிராமங்கள் மற்றும் குக்கிரா மத்தில் இருந்து செல்லும் நம் பிள்ளை களுக்குப் பாடத் திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பெரும் சவாலாக இருக்கும். அதைவிட இந்தப் பயணத்தில் வெற்றி பெற, ஒரு வழிகாட்டி (Mentor) இருப்பது மிகவும் முக்கியம். மென்டர்ஷிப் என்பது அனுபவமிக்க ஒருவர் தனது அறிவு, ஆலோசனைகள் மற்றும் ஆதரவைப் பகிர்ந்து, மாணவர்களை அவர்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைய உதவும் ஓர் உறவு.
சென்னை மாம்பலத்தில் ஒன்றிய அரசின் எரிசக்தி, துறை அமைச்சரகத்தின் சட்ட ஆலோசனைப்பிரிவு வழக்குரைஞராக பிரபல பெண் வழக்குரைஞர் உள்ளார்.
அவரிடம் பேசும் போது பெருமையோடு ஒரு பட்டியலைக் காண்பித்தார்.
அதில் சோழர் காலத்தில் இருந்து இன்றுவரை அந்த வழக்குரைஞரின் மூதாதையர் பட்டியல் இருந்தது. அனைவரும் பண்டிட்டுகளாம், அரசுச் சபையில் ஆலோசகர்களாக இருந்தார்களாம்
சோழர் காலத்தின் முடிவிற்குப் பிறகு மராட்டிய மன்னரின் ஆட்சியிலும் அவர்களின் மூதாதையர்கள் தொடர்ந்து கி.பி.1500களின் டச்சுக்காரர்கள், பிறகு போர்த்துகீசீயர்கள், அதன் பிறகு ஆங்கிலேயர்கள் என அய்ரோப்பியர்கள் காலத்திலும் உயர்பதவி, கி.பி.1822ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் படிப்பு விபரம் தெரியவருகிறது.
பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிபதி, அய்சிஎஸ், வழக்குரைஞர் சுதந்திரத்திற்குப் பிறகு
அய்.ஏ.எஸ். வழக்குரைஞர்கள் என நீண்ட பட்டியல், இதுபோல் பலரிடம் உள்ளது என்கிறார். அதைப் படமெடுக்க அனுமதிக்கவில்லை.
அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் வழிகாட்டிகளாக இருந்துகொண்டே வந்துள்ளனர். இன்று பார்ப்பனர்கள் கிட்டத்தட்ட அனைவருமே எளிமையாக உயர்கல்விக்குச் செல்ல இத்தகைய வழிக்காட்டல் அவர்களுக்கு ஆணிவேராக உள்ளது.
புதிய கல்லூரி அல்லது பல்கலைக்கழகச் சூழலில், மாணவர்கள் பெரும்பாலும் குழப்பமடையலாம். பாடத் தேர்வு, நேர மேலாண்மை மற்றும் கல்வி உத்திகள் குறித்து ஒரு வழிகாட்டி, தெளிவான வழிகாட்டுதலை வழங்குவார்.
தன்னம்பிக்கையை உருவாக்குதல்: வழிகாட்டிகள் மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றனர். ஒரு மாணவர் தனது ஆராய்ச்சித் திறனில் நம்பிக்கையின்மை கொண்டிருந்தால், அவருக்கு உரிய பயிற்சி மற்றும் ஆதரவை வழங்கி, தன்னம்பிக்கையை வளர்க்க வழிகாட்டி உதவுவார்.
தொழில்முறை வாய்ப்புகள்: வழிகாட்டி தங்கள் தொழில்முறை தொடர்புகள் மூலமாக இடைநிலைப் பயிற்சி, ஆராய்ச்சி அல்லது வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
உயர்கல்வியில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் போது, வழிகாட்டி ஒரு நம்பகமான ஆலோசகராக இருந்து மன அழுத்தத்தைக் கையாள உதவி செய்வார்.
சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது:
பொறியியல் மாணவர் ஒருவர் தனது புரோகிராமிங் திறனை மேம்படுத்த விரும்பினால், அந்தத் துறையில் அனுபவமுள்ள ஒரு பேராசிரியரையோ அல்லது தொழில் முறை வல்லுநரையோ தேர்ந்தெடுத்து கல்வி மற்றும் தொழில் இலக்குகளைப் பகிர்ந்து, அவற்றை அடைய ஆலோசனையைப் பெறுவார்.
மென்டர்ஷிப், உயர்கல்வி மாணவர்களுக்கு வெற்றிகரமான கல்வி மற்றும் தொழில் முறைப் பயணத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியான தொடர்பு மற்றும் உணர்வுடன் ஆலோசனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மாணவர்கள் தங்கள் இலக்குகளை எளிதாக அடைய முடியும். உயர்கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவரும் (வழிகாட்டி) மென்டர்ஷிப்பின் மதிப்பை உணர்ந்து, அதைத் தங்கள், தங்களுக்கு ஒரு வெற்றி வழியாக மாற்றிக்கொள்வார்கள்.
ஆனால் இந்தியா போன்ற ஜாதி மற்றும் மத உணர்வுகள் ஆழமாக ஊறிப்போன சமூகத்தில் இந்த மென்டர்ஷிப் கேள்விக்குறியாகி விட்டது.
16.06.2025 அன்று எனது நண்பர் அனில் கவுளேகர் என்பவரைச் சந்திப்பதற்காக மும்பை அய்.அய்.டி. சென்றிருந்தேன்.
அதையொட்டி அங்கு பயிலும் சாமானிய மாணவர்களுக்கு வழிகாட்டி தொடர்பான கள ஆய்வைச் செய்தேன். பொதுவாக தற்போது உயர்கல்வி நிலையங்களில் வெளிநபர்களுடன் அரசியல் அல்லது இதர ஆழமான பொருட்கள் குறித்த கலந்துரையாடல், படம் எடுத்தல், ஒன்றாக வைத்து உரையாடுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் நீண்ட ஆண்டுகளாக எனது மராட்டிய நண்பர் மும்பை அய்.அய்.டி.யில் நிர்வாக அலுவலகத்தில் பணியில் உள்ளதால் அவரைச் சந்திக்கும் சாக்கில் தமிழ் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்காலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அங்கே ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் குழு அமைத்து அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர். பிற மாநில மாணவர்கள் என்றால் நலம் விசாரிப்பதுடன் முடிந்துவிடுகிறது.
தமிழ் மாணவர்களை எடுத்துக்கொண்டால் அங்கே கடுமையான ஜாதிவெறி உள்ளுக்குள் புரையோடிக் கொண்டு இருக்கிறது. இதை வெளியில் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால், உண்மை இதுதான். மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பிறந்து வளர்ந்து
அய்.அய்.டி. வரும் உயர்ஜாதி தமிழ் மாணவர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதை முதலில் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனால், அவர்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களோடு ஒன்றுகூடிக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வழிகாட்டிகள் அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.
அவர்கள் முதல் முதலாக பள்ளி செல்வது முதல் உயர்கல்வி முடிக்கும் வரை அவர்களுக்கு பெரிய சுமை என்பது ஒன்றுமே இல்லை. அப்படியே அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு நகர்ந்து விடுகின்றனர்.
நான் சந்தித்த உயர்ஜாதியைச் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் டென்மார்க்கில் உள்ள பிரபல பால்பொருள் ஏற்றுமதி நிறுவன ஆய்வு மாணவராக உள்ளார். அவருக்கு இப்போதே அந்த நிறுவனம் இந்தியப் பண மதிப்பில் மதிப்பில் ஆண்டுக்கு 17 லட்சம் தருகிறது என்று கூறுகிறார்.
அதாவது அவர் முடித்த உடனேயே எந்தச் சிரமும் இல்லாமல் நேராக விமானம் ஏறி அவருக்கான ஒதுக்கப்பட்ட சீட்டில் உட்கார்ந்து ஆண்டுக்கு 2 கோடி வரை வாங்குவார்.
இங்கு நம் மாணவர்களின் நிலை என்ன? கரிம எரிபொருள் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்கும் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் வீட்டின் முதல் தலைமுறைப் பொறியியலாளர், அவர்கள் வீட்டில் சகோதரி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார், அவ்வளவே! ஆனால் அவரால் தனது சகோதரனுக்கு எந்த வகையிலும் வழிகாட்ட முடியவில்லை.
அம் மாணவன் வந்தது சிறு நகரத்தில் இருந்து! ஆகவே முழுக்க முழுக்க அவரின் முழுமையான ஆற்றலுமே செலவழிக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வுகளில் வழிகாட்டுதல் இல்லாமல் பல நாட்களாக இணையத்தில் ஏற்கெனவே எழுதிய ஆய்வாளர்களின் தகவல்களைத் தேடித்தேடி சோர்ந்துவிடுகிறார்.
எளிமையாகச் சொல்லப்போனால் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை. சரியான உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டோடு வளருவது போன்றேதான் நம் பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டு உயர்கல்வி நிலையங்களை அடைகின்றனர். அங்கு பல இடர்ப்பாடுகள், ஜாதிய நெருக்கடிகள், வழிகாட்டிகள் இன்றி அல்லது வழிகாட்டியைத் தேர்ந்தெடுக்க தடுமாற்றத்தில் அவர்களது ஆரம்ப ஆண்டு முடிந்துவிடுகிறது. இதனால் அவர்களால் பெரு நிறுவனங்களுக்கான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்து அங்கிருந்து நிதி பெறமுடியாமல் போகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில்
ஜாதி அடிப்படையிலான வழிகாட்டுதலில் பாகுபாடு: ஒரு சமூகப் பிரச்சினை
ஜாதி அடிப்படையிலான வழிகாட்டுதலில் பாகுபாடு: ஒரு சமூகப் பிரச்சினை
உயர்கல்வி நிறுவனங்கள் அறிவு, வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கான கலங்கரை விளக்கங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால், இந்தக் களங்களில் வழிகாட்டுதலில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு (Caste-based discrimination in mentorship)** சமத்துவத்திற்கான அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. புதியதாக உயர்கல்விக்கு வரும் மாணவர்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து வருபவர்கள், வழிகாட்டுதலுக்காக ஏங்கும் சூழலில், இந்தப் பாகுபாடு அவர்களின் எதிர்காலத்தையும், மனநிலையையும் கடுமையாகப் பாதிக்கிறது.
வழிகாட்டிகள் தங்கள் வழிகாட்டுதலை வழங்கும் போதும், வழிகாட்டுதலைப் பெறுபவர்கள் வழிகாட்டிகளை அணுகும் போதும், வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜாதியை ஒரு காரணியாகப் பயன்படுத்துகிறார்கள்.
இது ஒரு மாணவரின் திறமையையோ, தேவையையோ கருத்தில் கொள்ளாமல், அவரது ஜாதி அடையாளத்தின் அடிப்படையில் வழிகாட்டுதல் மறுக்கப்படுவதையோ, குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையோ அல்லது பாரபட்சமாக நடத்தப்படுவதையோ குறிக்கிறது.
சில வழிகாட்டிகள், உயர்ஜாதி அல்லாத மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வெளிப்படையாக மறுக்கின்றனர்.
வழிகாட்டுதல் வழங்கப்படும் போதும், சில வழிகாட்டிகள் தங்கள் ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் சிறந்த ஆலோசனை, ஆராய்ச்சி வாய்ப்புகள் அல்லது தொழில் தொடர்புகளை வழங்குகின்றனர்.
மாணவர்கள் எந்தக் குழுவில் சேர வேண்டும், எந்த ஆசிரியரிடம் பணியாற்ற வேண்டும், அல்லது என்னென்ன வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதில், ஜாதி அடிப்படையிலான மறைமுகமான ஒதுக்குதல் அப்பட்டமாக நடக்கிறது. இதனால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. இது அவர்களின் கல்வி செயல்திறனையும், சமூகப் பங்களிப்பையும் பாதிக்கிறது.
உயர்கல்வி என்பது சமூக நீதியையும், சமத்துவத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக இருக்க வேண்டும். ஆனால், ஜாதி அடிப்படையிலான வழிகாட்டுதல் பாகுபாடு இந்த அடிப்படைக் கொள்கைகளை அசைத்துப் பார்க்கிறது. இது தகுதி அடிப்படையிலான வாய்ப்புகளை மறுத்து, மாணவர்களின் திறமைகளை முடக்குகிறது. மேலும், இது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை உயர்கல்வி நிறுவனங்களுக்குள்ளும் நீட்டிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் பிள்ளைகள் உயர்கல்வியை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றனர். ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் ஜாதி அடிப்படையிலான வழிகாட்டுதல் பாகுபாட்டை கடுமையாக எதிர்கொள்கின்றனர்.
இது தனிப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக அமைகிறது. இந்தப் பாகுபாட்டை நீக்கி, அனைவருக்கும் சமத்துவமான வாய்ப்புகளை வழங்கும் உண்மையான அறிவுசார் சூழலை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் வெளிமாநிலத்தில் படிக்கும் நம் பிள்ளைகளோடு தொடர்புவைத்து ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கி அவர்களைத் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்ற மனநிலையில் இருந்து மீட்டு நமக்குப் பின்னால் நல்ல வழிகாட்டிகள் உள்ளனர் என்ற மனநிலையை உருவாக்கிவிட்டால் உயர்கல்வி நிறுவனங்கள் நம் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும்.