1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.
-
வைக்கம் பி.கே. அய்யா (கரூர்)
(விலை மதிப்பில்லா வீரமகன்)
‘‘போராட்டக் காலத்தில் என் உயிர் போக வேண்டும்; இந்த உடல்மீது கருப்புக் கொடி, கோடியாகப் போட்டு அடக்கம் செய்ய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு!’’ என்று ஆவணம் எழுதி வைத்தவர் ‘வைக்கம்‘ பி.கே. அய்யா.
பெரியாரின் பெருந்தொண்ட ரான பி.கே. அய்யா 1891ஆம் ஆண்டு கரூரில் பிறந்தவர். பெற்றோர் பெரியசாமி – அம்மணியம்மாள், மனைவி சின்னம்மாள்.
சிறு வயது முதலே தந்தை பெரியாரின் எண்ணம், சொல், செயலால் ஈர்க்கப்பட்டார்.
பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் சந்திக்க வேண்டிய எதிர்ப்புத் தொல்லைகளில் சிக்கிக் கொள்ளாமல் பெரியார் கொள்கைகளை வென்று வாழ்ந்து வரலாறு படைத்தவர்.
அய்யாவின் பாச உணர்வு
வைக்கம் பி.கே. அய்யா கரூர் நெசவாளர் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தபோது தந்தை பெரியார் அடிக்கடி சிறைக்கு சென்று பி.கே. அய்யாவை சந்தித்து பரிவோடும், பாச உணர்வோடும் பேசினார். இதை நினைவுக் கூர்ந்த வைக்கம் அய்யா, ‘‘அப்படிப்பட்ட ஒரு தலைவரை இந்த உலகம் இனிப் பார்க்க முடியுமா? சிறையில் இருந்து விடுதலையானதும் ஈரோடு சென்று அய்யாவைப் பார்த்தேன். ‘வாங்க அய்யா! வாங்க!!’ என்று வரவேற்று சால்ைவ போர்த்தினார். அன்று முதல் கருப்பையா என்ற நான் அய்யா என்றே அழைக்கப்பட்டேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
வைக்கம் போராட்டம்
பகுத்தறிவுப் பகலவனோடு வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்றார். இதனால் வைக்கம் என்ற அடைமொழி இவரது பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டது.
பி.கே. அய்யாவின் பெற்றோர் தச்சுத் தொழில் செய்து வந்தனர். பள்ளி பருவத்தில்ஆர்வமுடன் பள்ளியில் சேர்ந்த பி.கே. அய்யா 2ஆம் வகுப்பு வரை படித்தார். குடும்ப வறுமை நிலைமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை.
பின்னர் தச்சுத் தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தார். சுயமரியாதை இயக்கம் புரட்சிகளை செய்த காலமது.
பெரியார் அவர்கள் ஜாதி, மதம், கடவுளைப்பற்றி பேசிய பேச்சுகளால் கவரப்பட்ட பலர் அய்யாவை பின் தொடர ஆரம்பித்தனர். பி.கே. அய்யாவும் அதற்கு விதி விலக்கல்ல.
சீமான் விட்டுப் பிள்ளை பெரியார் பேசிய பேச்சுகள் பி.கே. அய்யாவின் மனதில் விதையாக ஆழப் பதிந்தன.
அவை துளிர்விட்டு வளர்ந்தது. பி.கே. அய்யா தன்னை மறந்தார். தொழிலைத் துறந்தார். பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். அய்யா கூட்டம் நடைபெறும் இடங்களுக்குத் தவறாமல் சென்று வந்தார். அடிக்கடி ஈரோட்டுக்கும் போய் வந்தார்.
வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றபோது தவறாமல் அங்கு சென்று கலந்து கொண்டார். அங்கு கைதாகி மறுநாள் விடுதலை செய்யப்பட்டார்.
அய்யாவுடன் ஊர் ஊராகச் சென்றார். அப்போது பெரியார் காங்கிரசில் இருந்ததால் வைக்கம் அய்யாவும் காங்கிரசில் இருந்தார்.
கட்சியின் கட்டளைப்படி பதவிகளைத் துறந்து தென்னை மரங்களை வெட்டிய தந்தை பெரியாரை நாடே புகழ்ந்தது. 1921இல் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின்போது 30 வயதே நிரம்பிய அய்யா 5 பேருடன் கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றார். சமுதாயக் கொள்கைகளை ஏற்க மறுத்த காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய போது பி.கே. அய்யாவும் கதரை கழற்றி எறிந்து பெரியாரின் நிழலாய் அவரைத் தொடர்ந்தார்.
உள்ளூரில் அவரை ஓரம் கட்ட ஆரம்பித்தனர். ‘தச்சு வேலை செய்யாது தறுதலையாய் அலை யறான்’ என்றார்கள். எதைப் பற்றியும் அவர் கவலை கொள்ளவில்லை.
விலையில்லா வீரமகன்
துடும்பு அடித்து தெருத் தெருவாய் ஹிந்தி எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அய்யா – அண்ணா தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லாம் அப்போது சிறையில் இருந்தார்கள். 1946ஆம் ஆண்டு கரூரில் நெசவாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பி.கே. அய்யா தலைமையில் திராவிடர் கழகம் மாபெரும் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு கண்டிராத வண்ணம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர். இதைக் கண்டு அஞ்சிய பட்டறை முதலாளிகள் அய்யாவை தனியாக அழைத்து விலை பேசினர்.
விலைமதிக்க முடியாத அந்த வீரமகன் விலை போகவில்லை. மாறாக பெரும் கோபம் கொண்டார். நெஞ்சில் உரத்துடனும், நேர்மை திறத்துடனும் மார்தட்டி நின்ற அவர் பட்டறை முதலாளிகளின் கபட வேடத்தை அம்பலப்படுத்தினார். இதனால் நெசவாளர் போராட்டம் வீறு கொண்டது.
தங்கள் முயற்சி தோல்வியை கண்டதை சகிக்க முடியாத ஆதிக்க வர்க்கத்தினர் சமூக விரோதிகளை தூண்டி விட்டு கலவரத்தில் இறங்கினர்.
கருரே பற்றி எரிந்தது. நகரெங்கும் கரும்படை; வானமெங்கும் கரும்புகை. ஊரே அல்லோல கல்லோலப்பட்டது.
ஹாரிசன் என்ற மாவட்ட காவல்துறை அதிகாரி குதிரைப் படையுடன் வந்து குண்டு மழை பொழிந்தான். நெசவாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.
பட்டறை முதலாளிகள் (காங்கிரஸ்காரர்கள்) பணிந்தனர். ஆனாலும் நூற்றுக்கணக்கான இயக்கத் தோழர்கள் மீதும், பி.கே. அய்யாமீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. அய்யாவுக்கு 24 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் ஏக காலத்தில் அய்ந்தாண்டாக குறைக்கப்பட்டது.
சொந்த செலவில் வழக்கை நடத்தியவாறு சிறையில் இருந்த வைக்கம் அய்யாவை விடுவிக்க தந்தை பெரியார் அவர்கள் கரூர் சென்று கயிலை அனந்தன் என்ற பிரபல வழக்குரைஞரை வைத்துத் தன் செலவில் வழக்கை நடத்தினார். அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைக் கண்டு பேசி மூன்றாண்டில் விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
மூன்று முறை கரூர் நகரத் திராவிடர் கழகத் தலைவராக பணியாற்றிய பி.கே. அய்யா குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்து அழிப்பு, ராமன் பட எரிப்பு, ஈழத் தமிழருக்கான ரயில் மறியல் போராட்டம், மண்டல் பரிந்துரையை செயல்படுத்தக் கோரி அஞ்சலகம் முன்பு மறியல் ஆக கழகம் கண்ட பெரும்பாலான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
தொகுப்பாளர்: தமிழ்க்கோ
(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)