கவின் மிக்க நிலாவின், மேற்பரப்பில் ஆழமாகத் தோண்டித் தொழில் செய்யவிருக்கிறது, அமெரிக்காவின் ‘இன்டர்லுான்’ என்ற புத்திளம் நிறுவனம். இது இயந்திர தயாரிப்பாளரான வெர்மீர் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு துரப்பணக் கருவியை வடிவமைத்துள்ளது. அது எதற்குத் தெரியுமா?, நிலாவில் புதைந்துகிடக்கும் ஹீலியம்-3 அய்சோடோப்பை அகழ்ந்தெடுக்கத்தான்.
பூமியில் அரிதாகக் கிடைக்கும் ஹீலியம்-3, சூரியப் புயல் தொடர்ந்து படுவதால், நிலவின் மண்ணில் அதிகளவில் கலந்துள்ளது. இது எதிர்காலத்தில் மாசில்லாத ஆற்றல் உற்பத்திக்கும், வேறு பல அறிவியல் பயன்பாடுகளுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இன்டர்லுான் நிறுவனத்தின் இந்த தோண்டும் இயந்திரம், நிலவில் தொடர்ந்து இயங்கும் திறன்கொண்டது. மணிக்கு 100 மெட்ரிக் டன் நிலவு மண்ணை இந்த இயந்திரம் அகழ்ந்தெடுக்கும். அகழ்வு, தரம் பிரித்தல், ஹீலியம்-3அய்ப் பிரித்தெடுத்தல், பின் மீதமுள்ள மண்ணை நிலவின் மேற்பரப்பில் திரும்பவும் இட்டு நிரப்புதல் ஆகிய பணிகளை இந்த இயந்திரம் செய்யும்.
அமெரிக்க எரிசக்தித் துறை, நாசா, மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன், இன்டர்லுான் நிறுவனம் 2027-ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஹீலியம்-3 செறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உறுதி செய்யவிருக்கிறது. அதையடுத்து, 2029-ஆம் ஆண்டுக்குள் ஒரு முன்னோடி அறுவடை ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், பூமியின் வருங்கால துாய ஆற்றல் தேவைகளுக்கு ஹீலியம்-3 ஒரு முக்கியமான மாற்றுத் தீர்வாக அமையும்.