முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஆப்பிரிக்க மக்கள்!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் பழங்குடி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒளிப்படத்தை வைத்து பாரம்பரிய நடனம் ஆடிய காணொலி வைரலாகி வருகிறது. பழங்குடியினருக்கு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவர்கள் இந்த நடனம் ஆடியுள்ளனர். அந்நாட்டில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் டாக்டர் சுகுமார் என்பவர் மூலம் இந்த திட்டங்கள் குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்றிய அரசு வேலை: 2,423 காலியிடங்கள்!
ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் (Staff Selection Commission (SSC) – Clerk & Publication Assistant) 2,423 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18-42 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கேற்ப 10ஆவது, பிளஸ் 2, டிகிரி என கல்வித் தகுதி மாறுபடும். கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி பெறுவோருக்கு 18,000-₹1,42,400 வழங்கப்படும்.
சேமிப்பு வட்டியை குறைத்த எஸ்பிஅய்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, பொதுமக்கள் சேமிப்புக்கான ஆண்டு வட்டியை 2.7%-லிருந்து 2.5% ஆகக் குறைத்துள்ளது (ஜூன் 16 முதல்). அதேபோல நிரந்தர வைப்புத் தொகை (FD)-க்கான வட்டி விகிதமும் பொதுமக்களுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு நாள்களுக்கு ஏற்ப வட்டியில் மாற்றமிருக்கும். அய்சிஅய்சிஅய், எச்டிஎப்சி வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன. மேலதிக விவரங்களுக்கு உங்கள் வங்கிக் கிளையை அணுகவும்.
எச்அய்வி பாதித்த குழந்தைகளுக்கு ரூ.1,000… புது திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், மாநிலம் முழுவதும் சுமார் 1.10 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையை மாநில அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எச்அய்வி பாதித்த குழந்தைகளுக்கும், இனி மாதம் ₹1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, அந்தத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மின்சார ஆட்டோ வாங்க மகளிருக்கு ரூ.3 லட்சம் கடன்
மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு தலா 3 லட்சம் 9 சதவீத வட்டியில் வழங்கப்படவுள்ளது. வாகன விலை விவரம் (Quotation) அடங்கிய அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என அரசு தெரிவித்துள்ளது.