நாகப்பட்டினம், ஜூன் 19 ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பாகோவில், குறிச்சி, பிரதாபராம புரம், திருக்குவளை உள்ளிட்ட 7 ஊராட்சிகளில், மக்க ளுடன் முதல்வர் திட்ட 3-ஆம் கட்ட முகாம் நேற்று (18.6.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் கலந்து கொண்டனர்.
குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கோவி. செழியன் பேசும்போது, ‘‘காலையில் வெங்கடேஸ்வரி என்கிற மாற்றுத் திறனாளி மனு அளித்தார். அவருக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் வலது கையில் மனு வாங்கி, இடது கையில் பரிசீலித்து, மீண்டும் வலது கையில் திட்டத்தை தீட்டி தருவதுதான் ஸ்டாலின் அரசு.
ஆமைவேகத்தில் இயங்கிய அரசாங் கத்தை ராக்கெட் வேகத்தில் இயக்குபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் சொல்வது நிதர்சனம். இது கம்பராமாயணம் போல் கட்டுக்கதை அல்ல” என்றார்.