சுயமரியாதைச் சுடரொளிகள்!

5 Min Read

எந்த ஓர் இயக்கத்திற்கும் அதன் தொண்டர்கள்தான் இரத்த ஓட்டம். அவர்களின்றி இயக்கம் ஏறு நடை போட முடியாது.

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதி, சுயமரியாதை வாழ்வின் தேவை, ஸநாதனத்தைக் குழி தோண்டிப் புதைத்தல், சமத்துவ சுயமரியாதை சுகவாழ்வு, சுதந்திர சிந்தனை இவற்றை இலக்காக்கிய  மானுட நேயமும், மானமும், அறிவும் இணைந்த மகத்தான மனித வாழ்வுத் தேடல் இவற்றைத் தம் தோளில் போட்டு நடந்தார், சென்றார், வென்றார், இனியும் வெல்வார்.

தந்தை பெரியார் ஒரு கொள்கை இராணுவத்தை உருவாக்கி, கட்டுப்பாடு மிக்க அந்த இராணுவம் பதவி நாடாத –  பகட்டு தேடாத, பணம் வசதி கண்டு  ஓடாத கடமைக் கண்கொண்ட கடமை வீரர்களின் கட்டுப்பாடான அணியாக்கினார்.

‘‘எனது தொண்டர்கள், தோழர்கள் துறவியிலும் மேம்பட்ட தூயர்கள்’’ என்று பெருமிதம் கொண்டார். அதுவே அவரது சாதனைக்கு வழி வகுத்தது –  துணை நின்றது!

சுயமரியாதை வீரர்கள் கொள்கைக்காக எதனையும் இழக்கத் தயாராய் நின்றனர். அவ்வாறே செயல்பட்டனர் உடல், உயிர், பொருள், சுகவாழ்வு, எதனையும் இழந்து இவர் பின்னால் அவர் தந்த சுயமரியாதைச் சுடரை ஏந்திச் சென்று மகிழ்ந்த மான மறவர்கள்! அவர்கள் பெருமைக்காகவோ, புகழுக்காகவோ இக்கொள்கையை தமது மூச்சாகக் கொள்ளவில்லை.

மாறாக, புது உலகம் பேசு சுயமரியாதை உலகமாக்கவே  தங்களையே எரித்துக் கொண்ட கருப்பு மெழுகுவர்த்திகளாகி இருளைப் போக்கி வெளிச்சம் தந்து கரைந்து போன மாண்பாளர்கள்! அதில்தான் அவர்கள் மன நிறைவைக் காண்பவர்கள்.

அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக  அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

1.குடந்தை அப்பர்
(தந்தை பெரியாருடன் சிறையில் இருந்தவர் )

மற்றவை

குடந்தை அப்பர் பழம் பெரும் சுயமரியாதை வீரர். 1915ஆம் ஆண்டு நாகூரில்  பிறந்தார். தந்தையார் வெள்ளை வாரணம் நீதிக்கட்சி யில் இருந்தார். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதனுடன் தொடர்பு கொண்டு இருந்தார். எனவே அப்பர் சிறுவயது முதலே பெரியார் கொள்கையை பின்பற்றி வந்தார். தனது 25ஆவது வயதில் குடந்தைக்கு வந்தார்.

தமிழரின் நலனுக்காகவும்,  உரிமைக்காகவும் கழகம் நடத்திய பல போரட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது 1938இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார். அப்போது தந்தை பெரியாருடன் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபோது நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறித்து குடந்தை அப்பர் தனது மலரும் நினைவுகளை படம் பிடித்து காட்டி இருக்கிறார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை பெரியாரிடம்
பொப்பிலி அரசர் வேண்டுகோள்

‘‘அய்யா அப்பொழுதுதான் நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அய்யாவிடம் அதனைத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற அப்பொழுது நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பொப்பிலி அரசரே சிறைச்சாலைக்கு வந்து அய்யாவைச் சந்தித்தார். அய்யா பொப்பிலி அரசரிடம் ‘தாங்களோ அரசர்; நானோ ஒரு ஆண்டி. தாங்களே ஒரு கட்சியை தலைமை தாங்கி நடத்த முடியாதபோது என்னால் எப்படி முடியும்’ எனக் கூறி தலைவர் பதவியை மறுத்தார். ஆனால் பொப்பிலி அரசர் விடாது வற்புறுத்தி இணங்க வைத்தார். அய்யா சிறையி லிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவரானார்.’’

இவ்வாறு வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் குடந்தை அப்பர் அய்யாவின் ஆணையை ஏற்று ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய தகவலையும் சுவைபட கூறியுள்ளார்.

இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டபோது அனைவரையும் சமமாக நடத்தினர். பார்ப்பனர் களுக்கு தனிச்சலுகை எதுவும் அளிப்பது கிடையாது. எனவே பார்ப்பனர்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காது. எனவே ஆரிய இனம் என்ற அடிப்படையில் இந்தியாவை ஜெர்மனியர்கள் ஆளுவதையே பார்ப்பனர்கள் விரும்பினார்கள்.

முதல் உலக யுத்தத்தின்போதே பார்ப்பனர்கள் ஜெர்மனியுடன்    ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் களுக்கு உதவி செய்தனர். போரில் ஜெர்மனியர்கள் வெற்றி பெற்று இந்தியாவையும் கைப்பற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பார்ப்பனர் அவசர அவசரமாக ஜெர்மன் மொழியையும் கற்றனர். பார்ப்பனரின் விருப்பப்படியே காங்கிரஸ் கட்சியும் ஆங்கிலேயரை எதிர்த்தே வேலை செய்தது.

பெரியாரின் விருப்பம்

தந்தை பெரியார் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருக்கும் இந்தியா மீண்டும் ஜெர்மனி யரிடமும் அடிமைப்படுவதை விரும்பவில்லை.

எனவே பார்ப்பனரின் சூழ்ச்சிக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு உதவி செய்தார். யுத்த நிதியும் திரட்டிக் கொடுத்தார். அத்தோடு இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து தொண்டாற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அய்யாவின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம், நாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து பல பேர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினோம்.  நான் 1941இல் ராணுவத்தில் சேர்ந்தேன். பின்னர்  1948 ஆரம்பத்தில் ராணுவத்திலிருந்து வந்துவிட்டேன் என்ற போது தலைமைக்கு கட்டுப்படும் ஒரு ராணுவ வீரரின் மன நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

குடந்தை அப்பர் தொடருகிறார்.

‘‘அய்யாவுக்குப் பிறகு தொடர்ந்து மணியம் மையார் கழகத்தை வெகு சிறப்போடு நடத்திச் சென்றார். இந்திரா காந்தி அம்மையாரால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அம்மா இயக்கத்தை நடத்தியதையே பெருமையாகக் கருதுகிறேன்.

நெருக்கடி நிலை காலத்தின்போது மத்திய அரசு சுயரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு ஏராளமான வரி விதித்து திராவிடர் கழகத்தின் சொத்துகள் அனைத்தையும் முடக்கி விட்ட நிலையிலும் அம்மா அவர்கள் மனந்தளராது சந்தித்ததையும், அதுபோலவே ‘இராவண லீலா’ வழக்கில் எதிர்த்து வழக்காடி வென்றதையும் அம்மாவின் தலைமைச் சிறப்பிற்கும், பெருமைக்கும் உதாரணமாகச் சொல்லலாம். அம்மா இராவண லீலா கொண்டாடியதன் மூலம் திராவிடர் கழகத்தை பிற மாநிலத்தவரும் உணரச் செய்தார்கள். அம்மாவை பிற மாநில தலைவர்கள் பலரும் வந்து சந்தித்துச் சென்று அய்யாவின் கொள்கைகளை தங்கள் மாநிலங்களிலும் பரவச் செய்தார்கள்.  அம்மா அவர்கள் பிற மாநிலங்களிலும் கழகத்தை அறிய செய்தார்கள்.

தரணி போற்றும் தளபதியின் சேவை

தளபதி வீரமணி அவர்களோ மண்டல் அறிக்கை, ஈழத் தமிழர் பிரச்சினை போன்றவற்றில்தன் செயல்பாட்டின் மூலம் பிற நாட்டவரும் கழகத்தை அறியச்செய்துள்ளார்கள்.

இன்று பல நாட்டவரும் தளபதி வீரமணியார் அவர்களைச் சந்தித்து உரையாடி அய்யாவின் கொள் கைகளை அறிந்து செல்லுகின்றனர். அய்யாவுக்கு பிறகும் கழகம், மிகச் சிறப்பாக வளர்ந்து வருகிறது.’’

தொகுப்பாளர்:  தமிழ்க்கோ

(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *