கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரை

viduthalai
12 Min Read
*கீழடி ஆய்வின் உண்மைகளை ஆய்வாளர்கள் கூற்றை ஏற்காமல், 
புராணங்கள் என்ன சொல்லுகின்றன என்பதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிலைப்பாடு!
* பண்பாட்டுப் படையெடுப்பே ஆபத்தானது, ஆபத்தானது!
வேதகால ஆரிய நாகரிகத்தை நிலை நிறுத்தும் முயற்சியை முறியடிக்க, மக்கள் சக்தியைத் திரட்டி முறியடிப்போம், வாரீர்!

சென்னை, ஜூன் 19 ‘‘கீழடி ஆய்வு முடிவுகள் – அதனைப் புராண சிந்தனையோடு தடுத்திட முடியாது. ஆரிய கலாச்சாரத்தை நிலை நிறுத்த ஒன்றிய பி.ஜே.பி. அரசு திட்டமிடுகிறது. இந்த ஆபத்தான பண்பாட்டுப் படையெடுப்பை ஒன்றிணைந்து முறியடிப்போம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில்
தமிழர் தலைவர்!

நேற்று (18.6.2025) காலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா வளைவு (பனகால் மாளிகை)   அருகே  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

தமிழர்களுடைய தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து மிகுந்த எழுச்சியோடு மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் – இது முதல் தொடக்கம்!

‘‘இளைதாக முள்மரம் கொள்க!’’

தீப்பொறி ஒரு சிறிய தீப்பொறியாகத்தான் கிளம்பும். புத்திசாலிகளாக இருந்தால், சிறு பொறியாக இருக்கும்போதே அதனை அணைப்பதுதான் சரியானது. ‘‘இளைதாக முள்மரம் கொள்க’’ என்று ஒரு பழமொழியை வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு வாழவேண்டும்; தமிழ் மக்கள் வாழவேண்டும்; தமிழ் மக்களுடைய உரிமை, திராவிட சமுதாயத்தினுடைய நன்மைகள், கல்வித் துறையில், சமூகநீதித் துறையில், சமத்துவத்தில், பெண்ணடிமை நீக்குவதில், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதில், எல்லாருக்கும் எல்லாமாக இருக்கும் என்பதில் யார், யார் அக்கறை காட்டுகிறார்களோ, அதற்குரிய அத்துணைக் கட்சிகளும், அமைப்புகளும் இங்கே இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு என்னுடைய முதற்கண் தலைதாழ்ந்த நன்றி!

மிகக் குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டினை செய்தி ருந்தாலும், நிறைய தோழர்கள் திரண்டிருக்கிறார்கள். இது ஓர் அடையாளம்தான். தோழர் அதியமான் நன்றாகச் சொன்னார்.

உரிமைக்காக ஒன்றுபட்டு இருக்கின்றோம்!

ஓர் அடையாளத்திற்கு நாம் எல்லோரும் ஒன்று பட்டு நிற்கின்றோம். உரிமைக்காக ஒன்றுபட்டு இருக்கின்றோம்.

நம்முடைய அருமைத் தோழர் சி.பி.எம். கனராஜ் அவர்கள், சுருக்கமாக ஒரு கருத்தைச் சொன்னார். அதை எத்தனை பேர் ஈர்த்து மனதில் பதித்துக் கொண்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை!

வழக்கமாக ஒன்றாக இருப்பவர்கள், ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள். இது தமிழ்நாட்டிற்குரிய பிரச்சினை மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை.

கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, அடிக்கட்டுமானம்.

அரசமைப்புச் சட்டத்தின் 29 ஆவது பிரிவில் மிகத் தெளிவாக, ‘‘அவரவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தைப் பாதுகாக்க உரிமை உண்டு’’ என்று உள்ளது.

இரண்டாவது, அந்தக் கலாச்சாரத்தைப் பிரதி பலிக்கின்ற ஓர் ஆய்வும் வந்துவிட்டது.

அதுவும் யாருடைய ஆசையினாலும் அல்ல; விருப்பத்தினால் அல்ல; திணிப்பினால் அல்ல; ஆய்வினால்.

இந்த ஆய்வை யார் செய்ய வேண்டும்?

ஆய்வுக்குரிய அறிவாளர்கள்தான் செய்யவேண்டும். நீங்களோ, நாங்களோ இதைப்பற்றி ஒரு பொது மேடை யில் பேசலாம்.

அறிவியல் ரீதியாகக் கண்டுபிடித்ததுதான் கீழடி நாகரிகம்!

எங்களுடைய நாகரிகம் மூத்தது என்று சொல்லிவிட்டு, வாயை மூடிக்கொண்டிருக்கக் கூடாது. அதற்கு ஆதாரம் என்ன? ஆய்வாளர்கள் பாடுபட்டு, உழைத்து அறிவியல் ரீதியாகக் கண்டார்கள். அப்படிப்பட்ட அறிவியல் ரீதியாகக் கண்டுபிடித்ததுதான் கீழடி நாகரிகம்.

இன்றைக்குக் கீழடி ஆய்வை ஏன் மறுக்கிறார்கள்? நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள் சொன்னது போன்று, அது ஒன்றிய அமைச்சருடைய கருத்து அல்ல. ஒன்றிய ஆட்சியினுடைய எஜமானரின் கருத்து. அதுதான் ஆர்.எஸ்.எஸ். வற்புறுத்துகின்ற கொள்கை.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினுடைய நோக்கம் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கருத்தை நிலை நாட்டுவதுதான்!

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினுடைய நோக்கம் என்ன வென்று கேட்டால்,  முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கருத்தை நிலை நாட்டுவதுதான். அதை மட்டுமே அடிப்படையாக வைத்து தொடக்கத்திலிருந்து கீழடி ஆய்விற்கு முட்டுக்கட்டைப் போட்டு வந்தார்கள்.

1976 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் படிப்படியாக பல ஆய்வுகள் – பல இடங்களில் நடந்திருக்கின்றன கீழடி என்பது ஆய்வினுடைய ஒரு பகுதி.

அறிவியலைப்பற்றி பேசுவதற்கு அவர்களுக்குத் தகுதி உண்டா?

மேலே ஏழு லோகம்; கீழே ஏழு லோகம் அது நம்பிக்கை என்று சொல்பவர்களுக்கு, அறிவியலைப்பற்றி பேசு வதற்குத் தகுதி உண்டா? என்று கேட்கிறோம்.

14 லோகம் இருக்கிறது என்று சொன்னவர்கள் – அதுதான் எங்களுடைய வேதம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிரான அறிவியலைப்பற்றி கேள்வி கேட்பதற்கு அவர்களுக்குத் தகுதி உண்டா?

அறிவியல் என்றால் என்ன?

கேள்வி கேள் – ஆய்வு செய் இதுதான்!

கேட்காதே, நம்பு. நம்பாவிட்டால், நரகத்திற்குப் போவாய் என்று சொல்வதற்குப் பெயர் அறிவியலா?

‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ – ஆய்வுக்கட்டுரை

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ பத்திரிகையில் வந்துள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை. கடந்த 13.6.2025 அன்று வெளி வந்தது. அதில்,

Who‘s working on keeladi

Agharkar Research Institute Pune – Diatem study to understand if terracotta pipes were used for potable water or industrial waste.

Field Museum, Chicago, and IIT Gandhi Nagar – Glass analysis.

University of Pisa, Italy – Ceramic studies.

French Institute of Pondicherry – Phytolith studies (minute minerals inside plants).

Deccan College – Palaeobotanical, animal bones.

Liverpool University – Facial reconstruction.

Madurai Kamaraj University – Ancient human and plant DNA.

National Institute of Advanced Studies, Bengaluru – Beads.

Indira Gandhi Centre for Atomic Research  Kalpakkam – Lithic, stone tools.

இதன் தமிழாக்கம் வருமாறு:

கீழடியில் யார் வேலை செய்கிறார்கள்?

அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் புனே – டெரகோட்டா குழாய்கள் குடிநீருக்காகவோ அல்லது தொழிற்சாலை கழிவுகளுக்காகவோ பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளவே டயட்டம் ஆய்வு.

சிகாகோவில் உள்ள கள அருங்காட்சியகம் மற்றும் அய்.அய்.டி. காந்தி நகர் – கண்ணாடி பகுப்பாய்வு.

இத்தாலியின் பிசா பல்கலைக்கழகம் – பீங்கான் ஆய்வுகள்.

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் – பைட்டோலித் ஆய்வுகள் (தாவரங்களில் உள்ள நுண்ணிய தாதுக்கள்).

டெக்கான் கல்லூரி – பழங்கால தாவரவியல், விலங்கு எலும்புகள்.

லிவர்பூல் பல்கலைக்கழகம் – முக மறுசீரமைப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – பண்டைய மனித மற்றும் தாவர டி.என்.ஏ.

தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், பெங்களூரு – மணிகள்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யம் – லித்திக், கல் கருவிகள்.

இப்படி வரிசையாக 1976 இல் தொடங்கி, 2025 ஆம் ஆண்டு வரையில் ஆய்வு நிறுவனங்கள் பட்டியல் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, இதைவிட ஆதாரம் வேறு என்ன வேண்டும்?

ஆய்வு செய்யவேண்டியது யார்?

அதிகாரியோ, அமைச்சரோ அல்ல. ஆய்வு செய்ய வேண்டியது தொல்லியல் துறை அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணா போன்றவர்கள் அதற்குரிய தகுதி படைத்திருக்கிறார்கள்.

நீங்களோ, நானோ அவரது கருத்தைத்தான் எடுத்துச் சொல்கிறோம். ஆதாரம் வேண்டும் என்கிறபோது,  அவரைப் போன்றோரது ஆய்வு முடிவுகளைத்தான் சான்றாகக் காட்டுவோம்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் – திராவிட நாகரிகம்!

ஃபாதர் ஹீராஸ் அவர்களைப்பற்றிச் சொன்னார்கள்.

மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் நடைபெற்ற நாகரிகம் திராவிட நாகரிகம் என்று ஆய்ந்தறிந்து சொன்னார்.

வேத கலாச்சாரம், சரசுவதி நாகரிகம் என்றெல்லாம் சொல்லி, இவற்றிற்கு முற்பட்டதாக, திராவிட நாகரிகம் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுடைய ஒரே ஒரு நோக்கம்.

எனவே, அந்த நோக்கம் ஆய்வின் அடிப்படையானதும் அல்ல; அறிவியல் நோக்கமும் அல்ல – அந்த நோக்கம், ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு, ஆரியப் பண்பாட்டிற்கு அதன் உயர்விற்காக மட்டுமே உரியதாகும்.

இங்கே வந்து முருகன் மாநாடு போடுகிறவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.

வடநாட்டில் எத்தனை முருகன் கோவில் கட்டி யிருக்கிறீர்கள்?

ஒன்றுகூட இல்லையே! தப்பித்தவறி இருந்தாலும், அங்கே முருகன் கிடையாது; ஸ்கந்தன், சுப்பிரமணிய சுவாமி என்றுதான்.

தமிழ்நாட்டு முருகனுக்கு எப்படி காவி அடித்தார்கள்? அவர் எப்படி ஸ்கந்தன் ஆனார்? சுப்பிரமணிய சுவாமி ஆனார்?

‘சிகரம்’ செந்தில்நாதன்

ஆய்வாளர் ‘சிகரம்’ செந்தில்நாதன் அவர்கள், சமயத்தைப்பற்றி ஆய்வு செய்து, ஒரு புதிய நூலை எழுதியுள்ளார்.

அதை நான் படித்தேன். அதில், ஸ்கந்தன், சுப்பிர மணியன் இவர்களையெல்லாம் எப்படி முருகனாக மாற்றினார்கள்? ஏழு படை வீடுகளில் ஒரே மாதிரி இருக்கிறதா? என்பதைப்பற்றியெல்லாம் விரிவாக உள்ளது.

இராமனை அங்கே, பால ராமர் – குழந்தை ராமர் என்று சொன்னீர்களே, எந்த அறிவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்து சொன்னீர்கள்?

இராமன் ‘அவதாரம்’ எடுத்தார்; பிறகு அதே  இராமன் குழந்தையாகப் பிறந்தார்.

‘அவதாரம்’ என்றாலே, மேலே இருந்து கீழே இறங்குவது என்று அர்த்தம் – சமஸ்கிருத சொல்.

56 இராமாயணங்கள்
வெவ்வேறு விதமாக வந்திருக்கின்றன

இராமரை, யாரும் கருவில் சுமந்து அவர் பிறக்க வில்லை. வால்மீகி இராமாயணத்தில் வேறு விதமாக இருக்கிறது. 56 இராமாயணங்கள் வெவ்வேறு விதமாக வந்திருக்கின்றன.

அவர்களெல்லாம் இதுவரையில் புராணத்தைத்தான் வரலாக ஆக்கியவர்கள்; மதத்தை தத்துவமாக்கினார்கள்.

சிக்கலே இனிமேல்தான்
ஆரம்பிக்கப் போகிறது!

இவர்கள் கூறும் அறிவியல் என்பது சூடோ சயின்ஸ்.

அஸ்ட்ரானமி என்பது வானவியல்.

அஸ்ட்ராலஜி என்கிற ஜோதிடம் என்பது உண்மை யல்ல.

திடீரென்று முதலமைச்சராக வேண்டும் என்று வந்தவர், இப்போது சிவப்பு சந்தன மாலையைப் போட்டால், சிக்கல் எல்லாம் தீருமாம். அவருக்கு சிக்கலே இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறது. இயக்கம் நடத்துகின்றவர்களுக்குத்தான் இவைபற்றி மிகத் தெளிவாகத் தெரியும்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான், இராமர் கோவில் இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்கும்போது, ‘‘அது மக்கள் நம்பிக்கை’’ என்றார்கள்.

இதுவரையில், நம்பிக்கைப்பற்றியே பேசி, வழக்கு நடத்துகின்றவர்கள், ஏன் அறிவியலை எதிர்த்துக் கேள்வி கேட்கிறீர்கள்?

இராமர் கோவில் கட்டுவதற்கு
எந்த அறிவியலைச் சொன்னீர்கள்?

நீங்கள், இராமர் கோவில் கட்டுவதற்கு எந்த அறிவி யலைச் சொன்னீர்களோ, அதைச் சொன்ன அந்த அறிவியல்வாதியைக் காட்டுங்கள்.

அதற்கு மட்டும் நம்பிக்கை அடிப்படையில் என்று கூறியவர்கள்; இதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், முரண்பாடாகச் செய்வது ஏன்?

ஃபுளோரிடாவில் இருக்கக்கூடிய பீட்டா அமைப்பிற்கு அனுப்பி, ஆய்வு முடிவுகளின் காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டிருக்கிறார்கள். உலகத்தில் பல நாடுகளில் கேட்டிருக்கிறார்கள்.

இதைச் சொல்வது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ பத்தி ரிகை, ‘விடுதலை’யோ, ‘முரசொலி’யோ, ‘தீக்கதிரோ’, ‘ஜனசக்தியோ’ அல்ல.

பெரியார் என்ற சம்மட்டியால்தான் உடைக்க முடியும்!

தந்தை பெரியார் சொன்னார்,

அரசியல் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது கால்களில் போட்ட விலங்கு. அது நடக்கும்போது பளிச்சென்று தெரியும்.

பொருளாதாரப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது கைகளில் போட்ட விலங்கு. அதுவும் பளிச்சென்று தெரியும்.

ஆனால், கலாச்சாரப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மூளைக்குப் போட்ட விலங்காகும். அது கண்களுக்குத் தெரியாது!

கால்களுக்கு விலங்கு போட்டாலும், கைகளுக்கு  விலங்கு போட்டாலும், அதனை எளிமையாக உடைத்து விடலாம்.

ஆனால், மூளைக்குப் போடப்பட்ட விலங்கை உடைக்கவேண்டும் என்றால், ஒரே சம்மட்டி பெரியார் சம்மட்டியால்தான், மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற அறிவாளிகளின் சம்மட்டியால்தான் உடைக்க முடியும்!

இரண்டு வெவ்வேறு தத்துவங்கள்!

எனவேதான், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள் என்று சொல்வது ஒரு தத்துவம்.

நம்பு, நம்பு, நம்பு என்று சொல்வது இன்னொரு தத்துவம். இரண்டு வெவ்வேறு தத்துவங்கள்.

நம்பு, நம்பு என்று சொல்லிவிட்டு, அறிவியல் ஆதாரம் கேட்கின்றீர்களே, அப்படிக் கேட்பதற்கு உங்களுக்கு ஏதாவது அடிப்படை உண்டா?

ஆகவேதான் தோழர்களே, இந்தப் போராட்டம் என்பது தொடக்கம்தான்.

கடைசியில் வெற்றியில்தான் முடியும்!

இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சொன்னார், ‘‘தமிழ்நாடு எதைத் தொடங்கினாலும், அது கடைசியில் வெற்றியில்தான் முடியும்’’ என்று அருமையாகச் சொன்னார்.

ஆனால், நீரோட்டமாகப் போய்க் கொண்டிருப்பதில், சுழலை உண்டாக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது யாருக்கு நல்லது? தமிழ்நாட்டினுடைய உரிமைக்கு  நல்லது.

குழப்பத்தை உண்டாக்கச் சொல்கிறார்கள்!

சில பேர், ‘‘அவர் அங்கே போய்விட்டார்; இங்கே போய்விட்டார்’’ என்று குழப்பத்தை உண்டாக்கச் சொல்கி றார்கள்.

யாரும், எங்கும் போகவில்லை; எல்லோரும் ஒரே இடத்தில்தான் இங்கே இருக்கிறார்கள் என்பதுதான் இந்த மேடை.

செய்தியாளர்கள் செய்தியை இவ்விதமாகப் போடு வார்கள், ‘‘அவர் பேசிவிட்டு, உடனே போய்விட்டார்’’ என்று.

அவரவர்களுக்குத் தனித்தனி வேலை இருக்கிறது. ஆகவே, ஏதாவது கிடைக்காதா என்று தேட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.

துண்டு எப்போதுமே எங்களிடம் இருக்கும்!

தோழர் முத்தரசனும், மற்ற நண்பர்களும் சொன்னார்கள், ‘‘உண்டியல்’’ எங்களிடம் இருக்கிறது என்று. நான் சொல்கிறேன், துண்டு எங்களிடமும் இருக்கிறது; அவர்களிடமும் இருக்கிறது. உண்டியலைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்; ஆனால், துண்டு எப்போதுமே எங்களிடம் இருக்கும்.

நமக்கு வந்திருக்கின்ற ஆபத்து மிகப்பெரிய ஆபத்தாகும். பண்பாட்டுப் படையெடுப்பை நாம் எதிர்த்து அழிக்கவேண்டும். தடுத்து நிறுத்தவேண்டும்.

ஆகவேதான், இந்தப் பிரச்சினையை மக்கள் பிரச்சி னையாகக் கருதவேண்டும்.

உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இந்தப் பிரச்சினை அறிவுப்பூர்வ மானது, ஆதாரப்பூர்வமானது – எல்லா வகையிலும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இது மக்கள் இயக்கமாக மாறி, எல்லா இடங்களிலும் நம் பண்பாட்டைக் காப்போம்.

நம் உரிமையை நிலைநாட்டிட– உறுதியேற்க தமிழ்நாடு திரண்டிருக்கிறது!

இது சலுகையோ, பிச்சையோ அல்ல – நமது உரிமை! அந்த உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்று உறுதியேற்கத்தான் தமிழ்நாடு திரண்டிருக்கிறது.

இதில், யார் எந்தப் பக்கம்? என்பது மிக முக்கியமாகும்.

இங்கே சகோதரர் தங்கபாலு சொன்னார் அல்லவா – வருகின்ற தேர்தலில், மீண்டு வரவேண்டும் என்று தானே செய்கிறார்கள் – நிச்சயமாக அவர்களால் மீண்டு வர முடியாது – மீண்டும் வர முடியாது.

இல்லை, இல்லை இந்தப் பிரச்சினையில் நாங்கள் பிடிவாதமாக இருப்போம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொன்னால், நாங்கள் தொடர்ந்து அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்துகொண்டேயிருப்போம் என்பதுதான் எங்கள் பதில்!

2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டப்பேர வைத் தேர்தலுக்கான பிரச்சார சரக்காக, நல்ல சரக்கைக் கொடுத்திருக்கிறார்கள்.

இதுபோன்று நிறைய அதிகாரிகளை மாற்றுங்கள்; இதுபோன்ற பிரச்சினைகளை நிறைய உண்டாக்குங்கள். எங்களுக்கு வேலை மிச்சம்!

234 தொகுதிகளிலும்
தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்!

234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நீங்கள் நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறீர்கள்.

எனவே, நீங்கள் காட்டுகின்ற எதிர்ப்பெல்லாம், இந்த வயலிலே, இந்தக் கொள்கைக் கூட்டணி வயலிலே  வீசப்படுகின்ற உரங்கள்!

எவ்வளவுதான் எதிர்ப்புகளாக இருந்தாலும், எச்சங்களாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அவை இந்த வயலில் வீசப்படுகின்ற உரங்கள்.

எங்களுக்கு வரவு – எங்களுக்கு வரவு!

உங்களுக்கு அசிங்கத்தில் கை வைக்கின்றோமே என்கின்ற புத்திகூட கிடையாது. ஆனால், அது எங்க ளுக்கு அசிங்கமல்ல; எங்களுக்கு வரவு – எங்களுக்கு வரவு!

எனவே, செழுமையான நல்ல விளைச்சல் வரும். வெற்றி வரும்! உரிமை நமக்கு! உரிமைக் குரல் எழுப்பி வெற்றி பெறுவோம்! நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *