தஞ்சை, ஜூன் 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களின் வகுப்புகள் துவக்க விழா 16.06.2025 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா முதலாமாண்டு மாணவர்களிடையே உரையாற்றும்போது பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வரலாறு, கல்லூரியின் 45 ஆண்டு கால சாதனைகள் மற்றும் பெருமைமிகு விருதுகளைப் பற்றி கூறினார்.
மாணவர்கள் பெற வேண்டிய உயர்ந்த பண்புகளில் முதலிடம் பெறும் ஒழுக்கம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கூறிய அவர் “சிறந்த தொழில்நுட்பக் கல்வியோடு மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை வளர்க்க உதவும் விளையாட்டுகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவற்றில் இணைந்து மாணவர் களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் பெற்றோர்களும், ஆசிரியர்களோடு இணைந்து மாணவர்களின் எதிர் காலத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
துணை முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி வாழ்த்துரை வழங்கி பேசும்போது, டிப்ளமோ படித்த மாணவர்கள் தொழில்நுட்பத்தை நன்கு கற்று வாழ்க்கையில் சிறந்து விளங்குகிறார்கள் என்று குறிப் பிட்டார்.
முதலாமாண்டு துறைத்தலைவர் ப.சாந்தி வரவேற்புரை வழங்கினார். மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் பண்பாடுகள் பற்றி மாணவ ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் உரையாற்றினார்.
வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு பற்றி முதலாமாண்டு பேராசிரியர்
ஆர்.அய்யநாதன் உரையாற்றினார். முதலாமாண்டு பேராசிரியை கே.நீலாவதி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.