திருப்பத்தூர், ஜூன் 22- திருப்பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் வி.ஜி.இளங் கோவின் தாயாரும், பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற துணைத் தலைவர்
மா.கவிதாவின் மாமியாருமான சார தாம்மாளின் இறுதி நிகழ்வு 19.6.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் வெப்பாலம்பட்டி கிராமத்தில் நடை பெற்றது. முழுக்க முழுக்க கருஞ்சட்டை தோழர்களே தோளில் சுமந்து சென்றனர்.
நகரங்களில் ஓரளவுக்கு அமைதியாக நடக்கும் இந்த நிகழ்வுகள் கிராமங்களில் அப்படி நடக்கும் வாய்ப்பு பெரும் பாலும் இல்லை.
பட்டாசு வெடிச்சத்தமும், மேளச் சத்தமும் காது கிழிபடும். எப்படி மறைந்தார் என்று கூட ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளவோ ஆறுதல்படுத்திக் கொள்ளவோ முடியாது.
ஆனால் மிக இயல்பாக, மிக எளிமையாக, பயனற்ற நம்பிக்கைகளை வலிமையாக மறுத்து, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்
கே. சி.எழிலரசன் அவர்களின் சீரிய வழி காட்டுதலில் கருஞ்சட்டைத் தோழர் கள் ஒரு நிமிடம் மவுனம் கடைபிடித்து, வீரவணக்கம் சொல்லி, எந்தவிதமான மூடச் சடங்குகளும் இல்லாமல் பூவிதழ் சிந்திய சாலைத் தடயங்களும் இல் லாமல் 15 நிமிடத்திற்குள் உடலடக்கம் செய்து முடித்தனர். இந்து மதச் சடங்கு களில் இடுகாடு வரை பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை.
ஆனால் இந்த நிகழ்வில் முதல் முறையாக எந்த விதமான தடையுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் மண் போட்டு மறையும் வரை உடன் வந்து பார்த்தனர்.
இப்படியும் எளிமையாக எடுத்து வந்து அடக்கம் செய்ய முடியுமா என்று வியப்போடு வீடு திரும்பினர்.
தமிழர் தலைவர் ஆறுதல்
எந்த இழப்பையும் துணிவோடு இயல்பாக எதிர்கொள்ள பக்குவம் பெறுவது பெரியாரியல் வாழ்வு தந்த பெரும் கொடையாகும். பெரியாரியவாதிகளால் மட்டும்தான் இறப்பு நிகழ்வையும் கொள்கை பரப்பு நிகழ்வாக ஆக்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்தது. இரவு எட்டு மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், வி.ஜி.இளங்கோ _ கவிதா இருவரையும் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.