சென்னை, ஜூன் 18 திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி பவளதீஸ்வரர் கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு மரகதலிங்கம், 2 தங்க ஆபரணங்கள் கொள்ளை போனது.
இந்த சம்பவம் குறித்து கோவில் செயல் அதிகாரி கனகசபை அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார்கள். இந்த வழக்கில் அடுத்தடுத்து ரமேஷ், செந்தில், வைத்தி, மெர்லின் சகாயராஜ், அய்யப்பன், ராஜா, கருணாநிதி, விஜயன், சுதாகர் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதல் 2 நபர்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிக்கினார்கள். இதில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சமயத்தில் செந்தில், அய்யப்பன் ஆகிய 2 பேர் மரணம் அடைந்துவிட்டனர். ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ், கருணாநிதி, விஜயன், சுதாகர் ஆகிய 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கு எதிரான பிடிவாரண்டு உத்தரவு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வைத்தி, மெர்லின் சகாயராஜ், ராஜா ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.