தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னையில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

viduthalai
4 Min Read

தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்து

சென்னை, ஜூன் 18- தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி -ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்தும், ‘கீழடி அகழாய்வு அறிக்கையை அங்கீகரிக்க முடியாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளதைக் கண்டித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (18.6.2025) காலை சென்னையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ஜ.க.வின் மனநிலை

“தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்கு வதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்” என்று 10.6.2025 அன்று செய்தியாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் இந்நாள், மேனாள் பா.ஜ.க. தலைவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான மனநிலை!

அறிவியல் சான்றுகள்

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முன்வைத்து, அறிக்கையை ஆய்வா ளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பி வைத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மன மில்லாமல், எப்படியாவது, எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் தானே தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து வெளிப்படுகிறது.

முதுமக்கள் தமிழர்கள்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் “5,350 ஆண்டுகள் பழைமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் தமிழர்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?” என்று சரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

என்ன ஆதாரம் இல்லை கீழடி அகழாய்வில்? கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருள்களிலிருந்து, அதன் காலத்தைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகம் உள்பட பல ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் வந்திருக்கின்றன. வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்கிறார்கள்?

பொருந்தாத சாக்குப்போக்கு

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முன்கூட்டியே திட்டமிட்ட முடிவுதான். அம்முடிவுக்கேற்ப, ஏதோ ஒரு பொருந்தாத சாக்குப்போக்கு, இது நியாயமானதல்ல!

கீழடியை ஏற்றால், திராவிட நாகரிகம் வேதகால நாகரிம் என்று இவர்கள் சொல்லி வருகின்ற கூற்றின் பொய் முகம் கிழிந்து திராவிட நாகரிகமே காலத்திற்கும் முந்தையது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள நேருமே என்ற காரணத்தால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலைநிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன எனகிறார் ஒன்றிய அமைச்சர்.

மறுப்பதை ஏற்க முடியாது

பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக, கீழடி அகழாய்வை, தமிழ்நாட்டின் தொன்மையை நிறுவும் பல்வேறு அகழாய்வுகளைப் பலி கொடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளை மறைத்து, இந்திய வரலாற்றினைப் பொய்யான தகவல்கள், அனுமானங்கள், இதிகாசங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு முடிவை அங்கீகரிக்க மறுப்பதையும் ஏற்க முடியாது.

சான்றுகள்

இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புகளை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும், காலத்தால் மூத்த தமிழி எழுத்து வடிவத்திற்குக் கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து இன்று (18.6.2025) காலை 10.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா நுழைவு வாயில் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைவர்கள் கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு ரையாற்றினார்.

‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழ்நாடு விவசாயிகள் -தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குனங்குடி ஹனீபா,  ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் கே.வி.தங்கபாலு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆர்ப்பாட்ட தலைமை  – கண்டன உரையாற்றினார்.

பங்கேற்றோர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் மாநில கழக இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரபாண்டியன், திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் சிவகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் பாஸ்கர், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் வேணு கோபால் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *