திருப்பதி, ஜூன் 17- ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (16.6.2025) காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்திற்கு செல்வதற்கு தயாரானார்.
அப்போது அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது குடும்பத்தாருடன் விமானத்தில் டில்லி புறப்பட்டுச் சென்றார்.
தகவல் அறிந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அதிர்ச்சியுற்று, அந்த ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதை அறிய வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ஹரீஷ்குமார் குப்தாவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமை கண்காணிப்பு பிரிவு அதிகாரிக்கு காவல்துறை தலைமை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், “முதலமைச்சர் உள்ளிட்ட விவிஅய்பிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது குறித்தும் ஆராய வேண்டும். இனி இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.