தொடருங்கள் தோழர்களே, தொய்வின்றி – வெற்றி நமதே!

3 Min Read

எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி கண்டது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்!
ஜூலை வரை கழகத் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள்!!
கழகப் பொறுப்பாளர்கள், பிரச்சார மணிகளுக்குப் பாராட்டுகள்!!

எதிர்ப்புகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம். ஜூலை இறுதிவரை கழகத் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள் தொடரும் – தொடருவோம் நம் பணியை – வெற்றி நமதே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் நம் அறிவாசான் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற அறிவு விடுதலை இயக்கத்தினை ஆரம்பித்து நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அதன் நோக்கங்களும், அதன் செயல்திட்டத்தால் ஏற்பட்டுள்ள சமுதாய மக்களின் ஆக்கங்களும், ஆளுமைகளும் வரலாற்றின் தனிச்சிறப்புக்குரியனவாகும்.

இவ்வியக்கத்தின் தனித்தன்மைகள்

  1. மக்களில் பெரும்பாலோர் காரண காரியமின்றி நம்பும் மூடநம்பிக்கைகளை அடியோடு பெயர்த்து, புதியதோர் உலகத்தை – மானம், அறிவு, சமத்துவம், சமூகநீதி அடிப்படையிலாக்க உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
  2. என்றும் எதிர்நீச்சல்; எவ்வியக்கமும் சந்தித்திராத கடுமையான எதிர்ப்புகளும், அடக்குமுறைகளும் நம்மீது!

அவற்றைத் தாண்டி, தனி முத்திரைப் பதித்து, தன்னிகரில்லா தகைமைசால் உயரத்தை எட்டி, வெற்றி வாகை சூடி வருகிறது!

  1. பல நூறு ஆண்டுகளாக சமூகத்தில் பரவிய ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கை முதலிய கொடுமைகளும், அதன் விளைவுகளால் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுத்தல் – அரசுப் பணிகளில் வாய்ப்பின்மை – அடிமைத்தன்மையில் ஒருவகை போதையாளர்களுக்குக் கிட்டும் அற்ப மகிழ்ச்சி, அறியாமையில் சிக்கிக் கொண்டு வெளியேற மறுக்கும் ஓர் அறியாமையின் உச்சம்; இவற்றை எதிர்த்து ஒரு சமரசமில்லாத கொள்கை லட்சியப் போர் நடத்தியது நமது இயக்கம். நாட்டின் மிகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், மக்கள் எண்ணிக்கையில் சரி பகுதியாக இருக்கும் அவர்களை, மண்ணுக்கும் கேடாய் நடத்திட்ட நிலையில், அவர்தம் உரிமை இழப்புகளை மீட்டெடுத்த மகத்தான பணிகள்மூலம் மானம், நன்றி பாராத தொண்டு, அறப்போர், யோக்கியமான பிரச்சாரத்தினை, கட்டுப்பாடு மிகுந்த கடமை வீரர்களை, இயக்கத் தொண்டறத் தோழர்களால் இச்சமுதாயத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளோம்.

எதிரிகளின் பிரச்சார வியூகங்களை உடைத்து வெற்றி கண்ட இயக்கம்!

சர்வ சக்தி வாய்ந்த எதிரிகளின் பிரச்சார வியூகங்களை உடைத்தெறிந்து, வெற்றி கண்டுவரும் இயக்கம் – அதன் ஒப்பற்ற தலைவர் – தமது சுயநலமற்ற அறிவு அணுகுமுறையால், நல்லதொரு மாற்றம் அரசியலிலும் ஏற்பட்டு, பொருளாதார விதிகளிலும் மனுவழியை ஒழித்துக் கட்டி, சமநிலை, சமச்சீர், சமத்துவ சரித்திரம் படைத்த ஒரு நிலை கண்கூடு இன்று!

இளைய தலைமுறையினர், பெண்கள் போன்றோருக்கு மூளைக்குப் போடப்பட்டிருக்கும் விலங்குகளை உடைத்தெறிந்து, ஒரு புதியதோர் புரட்சி பூத்துக் குலுங்கும் வகையிலும் மாற்றங்கள் பளிச்சென்று தகத்தகாய ஒளியாய் வீசுகின்றன.

அதனை விளக்கிட, கொள்கைக் கருத்தரங்குகள் கழகப் பொறுப்பாளர்களால் வேலூர், கும்பகோணம் என்ற குடந்தை, புதுச்சேரி, கோவை போன்ற பல பெருநகரங்களில் வெகுச் சிறப்புடன், ஈரோட்டுப் பாதையில் நடைபெற்றன!

ஆயிரக்கணக்கான மகளிர், இளைஞர்கள், புதிய தலைமுறை கருத்தாளர்கள் எனக் கூடி நடத்திட்ட கொள்கை சுவாச புதிய விடியலின் பூபாள இசை அனைவரையும் கவர்ந்தது.

கழகப் பொறுப்பாளர்கள், கழகப் பிரச்சார மணிகள் அனைவருக்கும் பாராட்டு!

சுயமரியாதை உலகு அமைக்க, பாசறை, பாடி வீட்டுக்கு அழைத்து வருவதற்கு சிறப்பான பணிகளை,  வெற்றிகரமாகச் செய்தனர்.

கழகப் பொறுப்பாளர்கள், கருத்தியலை சிறப்பாக விளக்கிய நமது கழகப் பிரச்சார மணிகள் அனைவருக்கும் நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்!

இன்னும் ஜூலை மாதம் இறுதிவரையில் இத்தகைய பரப்புரை அடைமழையெனப் பெய்து, அதன் கொள்கைப் பயிர் விளைச்சலை அமோகமாகக் காணும் உழவனைப் போல, நாம் பூரிப்பும், பெருமிதமும் கொள்கிறோம்.

எத்தனை எத்தனை நூற்றாண்டு விழாக்கள் – எளியவர்களின் எக்காள முழக்கங்கள்!

தொடருங்கள் தோழர்களே, தொய்வின்றி! வெற்றி நமதே!

நன்றி! நன்றி!! உங்களின் சலிப்பற்ற உழைப்புக்கு எமது பாராட்டிற்குரிய நன்றிகள்!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
16.6.2025  

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *