புகை மூட்டமாக மாறிய சென்னை காற்று மாசு அதிகரிப்பு
சென்னை,நவ.13- சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு அதிகரித்தது. பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதி அளித்தது. இதனால் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசுகளை வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. மேலும் வாணவேடிக்கைகள், இரவில் ஒளிரும் பட்டாசுகளுக்காக மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் பட்டாசு வெடித்த காரணத்தால் காற்று மாசு மோசமாகி உள்ளது. எல்லா ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கும். இந்த ஆண்டும் அதேபோல் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 250க்கு மேல் உள்ளது. இது மிக மோசமான நிலைமை ஆகும். நீண்ட காலத்திற்கு வெளிப்படும் போது மக்கள் இதை சுவாசிக்கும் போது ஆரோக்கிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும். வேளச்சேரியில் தரக்குறியீடு 301அய் தொட்டுள்ளது: இது மிக மோசமான ஆரோக்கியமற்ற நிலை ஆகும். இதில் நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடியில் தரக்குறியீடு 231அய் தொட்டுள்ளது: இதுவும் ஆரோக்கியமற்ற நிலையாகும். செங்கல்பட்டில் தரக்குறியீடு 242அய் தொட்டுள்ளது. ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். மதுரையில் தரக்குறியீடு 132அய் தாண்டியுள்ளது.
சென்னையில் 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
தீபாவளியின் பெயரால் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் தமிழ்நாடு முழுவதும் டன் கணக்கில் குவிந்துள்ளன என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மட்டும் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுகளை கொண்டு செல்வதற்காக மண்டலத்திற்கு 2 வாகனங்கள் என மொத்தம் 30 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று (12.11.2023) காலை முதலே பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் – அஸ்வினி ஆகியோரின் மகள் நவிஷ்கா(வயது 4) பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டது. இதனால், சிறுமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத் துவமனைக்கு கொண்டு சென்றபோது, அச்சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், சிறுமியின் உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டாசு விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ராக்கெட் பட்டாசு வெடித்து கடையில் தீ விபத்து
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில், தார்ப்பாய் கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருக்கும் கடைகளுக்கும் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக ராக்கெட் வெடி ஒன்று கடையின் மீது விழுந்ததாகவும், அதிலிருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ராக்கெட் ஏவிய சிறுவர்கள்.. மொத்தமாக எரிந்து கருகிய குடிசை…!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் அனிதா என்பவர் வாடகை வீட்டில் (குடிசை வீடு) வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ராக்கெட் வெடி வெடித்துள்ளனர்.
அப்போது ராக்கெட் நேராக குடிசை வீட்டின் மேல் விழுந்து வெடித்து சிதறியதில் குடிசை வீடு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதுவமாக எரிந்து போனது.
இதில் வீட்டில் இருந்த குளிர் சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, நகைகள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் போன்றவை எரிந்து விட்டன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.