பா.ஜ.க.-வில் இணைந்துவிட்டால் பயமில்லை!
வலைவிரிக்கும் விசாரணை அமைப்புகள்?
ரா.அரவிந்தராஜ்
“ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்த பின்னர் ‘புனிதர்கள்’ ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ‘புனிதர்கள்’ மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன” என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் பட்டியல் போட்டிருந்தார். இதை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இப்போது வழிமொழிந்து கொண்டிருக்கின்றனர்.
“தங்கள் கட்சியில் இணைந்தால் சி.பி.அய்., அமலாக் கத்துறை வழக்குகளை முடித்து வைத்து விடுவதாக பா.ஜ.க. பேரம் பேசியது. அந்தச் சதிகாரர்கள் முன் தலைகுனிய மறுத்து, ‘நீங்கள் என்ன செய்ய வேண் டுமோ செய்துகொள்ளுங்கள்’ எனச் சொல்லி விட்டேன்” என்று ஏற்கெனவே, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சொல்லியிருந்தார். இந்தக் குற்றச் சாட்டுகள் உண்மையா… பா.ஜ.க-வில் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் ‘செல்லக்குட்டி’யாக மாறியவர் கள்மீதான வழக்குகளின் நிலை என்னஞ் பார்க்கலாம்!
சுவேந்து அதிகாரி,
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்
மேற்கு வங்க திரிணா முல் காங்கிரஸில் எம்.பி., அமைச்சர் எனப் பெரிய பொறுப்புகளை வகித்து, முதலமைச்சர் மம்தாவின் தளபதியாக வலம்வந்தவர் சுவேந்து அதிகாரி. அவர் மீது ‘நாரதா ஸ்டிங் ஆப ரேஷன்’ மூலம் லஞ்சக் குற்றச்சாட்டு வைக்கப்பட் டதைத் தொடர்ந்து, பா.ஜ.க வைத்த கோரிக்கையால் வழக்கைக் கையிலெடுத்தது சி.பி.அய். ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாமல், திரிணாமுல் காங்கிரஸின் அமைச்சர் பொறுப்பு, கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியிலிருந்து விலகிய சுவேந்து அதிகாரி 2020-இல் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் (அதேசமயம் ‘நாரதா வழக்கு’க்கு பயந்து கொண்டு முகுல் ராய், சோவன் சாட்டர்ஜி, அர்ஜுன் சிங் போன்ற பல தலைவர்களும் திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்குத் தாவினர்). அதன் பிறகு நாரதா வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்ட போதும்கூட சுவேந்து அதிகாரியை சி.பி.அய். சீண்ட வில்லை. பிரதிபலனாக 2021 தேர்தலில் மம்தாவையே நந்தி கிராம் தொகுதியில் தோற்கடித்த சுவேந்து, தற்போது மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
ஹிமந்த பிஸ்வா,
அசாம் முதலமைச்சர்
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக நீண்டகாலம் கோலோச்சிய ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது, சாரதா சிட்ஃபண்ட்ஸ் ஊழல் குற்றச்சாட்டின்கீழ் விசாரணையைத் தொடங்கியது சி.பி.அய். அவர் அமைச்சராக இருந்தபோது குடிநீர் விநியோகத் திட்டத்தில் முறைகேடு செய்ததாக அடுத்தடுத்து ஊழல் புகாரை வாசித்து நெருக்கடி கொடுத்தது பா.ஜ.க. அந்த நிலையில், 2015-இல் காங்கிரஸிலி ருந்து விலகிய ஹிமந்தா பிஸ்வாஸ், பா.ஜ.க-வில் சேர்ந்தார். ‘சாரதா சிட்ஃ பண்ட்ஸ் ஊழல் வழக்கில் பிஸ்வாஸ் பெயர் இருந்தபோதும்கூட சி.பி.அய். ஏன் விசாரிக்கவில்லை?’ என ஊழல் வழக்கில் சிக்கிய மற்ற தலைவர்களெல்லாம் பொங்கியும் எந்தப் பயனு மில்லை. கடைசியில், 2021 அசாம் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற, அசாம் முதலமைச்சராக்கப் பட்டார் ஹிமந்தா பிஸ்வா.
நாராயண் ராணே,
மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர்
மகாராட்டிரா மாநில மேனாள் முதலமைச்சராக இருந்த நாராயண் ராணே மீது, அவிக்னா குழுமம் சம்பந்தப்பட்ட வழக்கில் ரூ.300 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து 2017-இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, விலகி `மகாராட்டிரா ஸ்வாபிமான்’ என்ற கட்சியைத் தொடங்கினார். அமலாக்கத் துறையின் பிடி இறுக இறுக, 2019-இல் அந்தக் கட்சி யையே கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் அய்க்கியமானார். அதன் பிறகு அவர்மீதான வழக்கு விசாரணை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பதவியும் நாராயண் ராணேவுக்குக் கொடுக்கப்பட்டது.
பாவனா கவாலி,
மகாராட்டிரா நாடாளுமன்ற உறுப்பினர்
சிவசேனா கட்சியில் அய்ந்து முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந் ததோடு, அந்தக் கட்சியின் டில்லி முகமாகவும் அறி யப்பட்டவர் பாவனா கவாலி. பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாகவும், அரசுத் திட்டங் களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகவும் அவர்மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை, அடுத் தடுத்து சம்மன் அனுப்பியது. மேலும், 2021-ஆம் ஆண்டு அவரின் உதவியாளர் சயீத் கானைக் கைது செய்து கிலி மூட்டியது. அந்த நேரத்தில், சிவசேனா கட்சி பிளவுபட, பா.ஜ.க., ஆதரவுபெற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்குத் தாவினார் பாவனா கவாலி. அமலாக்கத்துறை விசாரணையும் வந்த வேகத்தில் நின்றுபோனது.
பிரதாப் சர்நாயக்,
சிவசேனா எம்.எல்.ஏ
மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்துடன் (MMRDA) ரூ.175 கோடிக் கான ஒப்பந்தத்தை, ஒரு தனியார் நிறுவனத்துக்குப் பெற்றுத் தந்து, ரூ.7 கோடி முறைகேடாகப் பணம் பெற்றதாக சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. அதேபோல, நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) நிறுவனத்தில் ரூ.5,600 கோடி அள வுக்கு மோசடி நடந்த வழக்கிலும் பிரதாப் சர்நாயக் மீது குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அவரின் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தது. புத்திசாலித்தனமாக, பா.ஜ.க ஆதரவு பெற்ற ஷிண்டே அணி சிவசேனா பக்கம் சாய்ந்தார் பிரதாப் சர்நாயக். அதன் பின்னர் அமலாக்கத்துறையின் வழக்கு, கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது.
யஷ்வந்த் ஜாதவ் – யாமினி ஜாதவ்,
சிவசேனா
சிவசேனா பிரமுகர் யஷ்வந்த் ஜாதவ், அவரின் மனைவியும் எம்.எல்.ஏ-வுமான யாமினி ஜாதவ் ஆகியோர் வரி ஏய்ப்பு, வெளிநாட்டுச் செலாவணி மோசடி போன்ற புகார்களின்கீழ் வருமான வரித்துறை சோதனைக்கும், அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளானார்கள். அடுத்தடுத்து ஜாதவ் குடும்பத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 41 சொத்துகளைப் பறிமுதல் செய்தது வருமான வரித்துறை. அந்த நிலையில், பா.ஜ.க ஆதரவு, ஷிண்டே அணியின் சிவசேனா கூடாரத்தில் ஜாதவ் தம்பதி அடைக்கலம் ஆக, வழக்கு விசாரணையும் வாசலோடு சென்றது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குட்டிக் குட்டி எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே போன்ற நடவடிக்கைக்கு ஆளாவதாகவும், ஒன்று பா.ஜ.க-வில் சேர்ந்து ‘தப்பிப்பது அல்லது சிறைக்குச் செல்வது’ என்ற இரண்டு ஆப்ஷன்களே அவர்களுக்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந் திருக்கின்றன. “குற்றவாளிகளைக் கட்சியில் சேர்க்க மாட்டோம்” அப்படியே சேர்ந்தாலும் அவர்கள்மீதான வழக்கு விசாரணையில் குறுக்கிட மாட்டோம்” என்று கறாரான முடிவெடுக்காவிட்டால், ‘ஊழலுக்கு எதிரான கட்சி’ என்று பா.ஜ.க சொல்லிவருவது முற்றிலும் பொய் என்றாகிவிடும்!
நன்றி: ஜூனியர் விகடன் 25.6.2023