உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

viduthalai
6 Min Read

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்
சில பாடங்கள் (20)

மற்றவை

வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்

பாடம் –20

ஆசிரியர் இருக்குமிடம் யாவும் வகுப்பறையே! 

மெல்பேர்னை சுற்றிப் பார்த்ததை சொல்வதற்கு முன்னால் முதல்நாள் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட மறந்து விட்டேன் என்பது நினைவிற்கு வந்தது. மார்ச் 22 மெல்பேர்னில் பெரியார் –அம்பேத்கர் சிந்தனை வட்டம் நடத்திய உலக மகளிர் நாள் நிகழ்ச்சியின் சிறப்புகளைக் கூறினேன். அந்த நிகழ்ச்சி முடிந்து மூர்த்தி அவர்களின் வீட்டிற்குத் திரும்பிய உடன் தோழர் கபிலன் ஆசிரியரிடம் ,’ அய்யா அந்த வீடியோ பதிவை காலையில் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். மறுநாள் மேற்கு வங்கத்தில் சாந்திநிகேதன் கல்வி நிறுவனத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்விற்கு ஆசிரியர் வாழ்த்துரை வழங்கி அதனை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். அதற்காக கபிலன் நினைவூட்டினார். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆசிரியர் ‘நாளைக்கு வேண்டாம் ; இப்போதே பதிவு செய்து விடலாம்’ என்றார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான்கு மணி நேரம் நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உரை நிகழ்த்தினார். ஒளிப்படங்கள், சால்வை அணிவித்தல், சிறப்பு செய்தல் என எத்தனை முறை எழுந்து எழுந்து அமர்ந்தார். எவ்வளவு களைப்பு இருக்கும். ஆனால் ஆசிரியர் அப்படி எதையும் நினைக்கவில்லை. உடனே அமர்ந்து இருபது நிமிட காணொலி உரையாற்றிய பிறகுதான் உறங்கச் சென்றார்.

மற்றவை

விமான நிலையத்தில் புத்தகக் கடையில் ஆசிரியர்

இவற்றுக்கிடையில் மெல்பேர்னில் கணக்கியல் துறை நிறுவனத்தை நடத்தி வரும் திரு. சுரேஷ் மரு ஆசிரியரை சந்தித்தார். மெல்பேர்ன் நகரில் 25 ஆண்டுகளாக இயந்திர பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு. பழனிசாமி அவர்கள் தன் இணையருடன் வந்து ஆசிரியரை சந்தித்தார். மீண்டும் மெல்பேர்ன் நிகழ்ச்சியிலும் ஆசிரியரை சந்தித்தனர். திருமதி லஷ்மி ஆசிரியரிடம்’’ சமுதாயத்துக்கு நீங்க ரொம்ப முக்கியம், உடம்ப பத்திரமா பாத்துக்கனும், ரொம்ப அலையாதிங்க’’  என்று உரிமையுடன் அறிவுரை கூறினார். அவரது பாசமான மிரட்டலைக் கேட்டு ஆசிரியர் சிரித்து விட்டார் . இத்தகைய பல நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை.

மற்றவை

வாசகர் வட்ட சந்திப்பில் சிவாவின் தாயார் கந்தமாலி,
சாந்தி, ஆசிரியர், அருள்மொழி, சிவா

மற்றவை

ஷான் தினகரன், ஆசிரியர், அருள்மொழி, சுந்தரி

மற்றவை

விக்டோரியா மாநிலத்தின் நாடாளுமன்றம் முன்னால் அண்ணாமலை, மகிழ்நன், அருள்மொழி, ஆசிரியர் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்

மற்றவை

மெல்பேர்ன் அடையார் ஆனந்தபவன் உணவகத்தில்

மற்றவை

மெல்ேபர்னில் உள்ள குசாமா..நூற்றாண்டு காணும் கலைக்கூடம் / காட்சியகம்.
பிரின்சஸ் தியேட்டர் – பிரமாண்ட நாடக/ திரை அரங்கம்

மற்றவை

மெல்பேர்ன் விமான நிலையத்தில் வழியனுப்பிய தோழர்களுடன் .. இடமிருந்து திருமலை நம்பி, அண்ணாமலை மகிழ்நன், முத்துகிருஷ்ணன், வசந்தன், ஆசிரியர், மூர்த்தி அருள்மொழி, கபிலன், சுரேஷ், 

மற்றவை

தோழர் சுரேஷ் ஆசிரியரை சந்தித்து நூல் பரிசளித்தார்

மற்றவை

ஆசிரியரிடம் உரிமையுடன் “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறிய திருமதி லஷ்மி பழனிசாமி இணையர் 

மற்றவை

மார்ச் 23 ராதிகா எடுத்த தொலைக்காட்சிப் பேட்டி

மற்றவை

அருள்மொழியை நேர்காணல் கண்ட எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்

மற்றவை

ஆசிரியருக்கு பழங்குடி மக்கள் தயாரித்த தொப்பியை அணிவித்து மகிழும் தோழர் மூர்த்தி

மற்றவை

தனியே ஒலிக்கும் மனிதத்தின் நிழல்

அதன் பிறகுதான் மறுநாள் 23 மார்ச் காலையில் நூலக சந்திப்பு, தொலைக்காட்சிப் பேட்டி. அதற்கு பின்பு,

மெல்ேபர்னில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்திற்குச் சென்றோம்.  உணவகத்தின் நிர்வாகி திரு. தண்ணீர்மலை அவர்கள் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அங்கு தலைமைச் சமையலராக இருந்த திரு.வேல்முருகன் அவர்கள் தோழர் நந்தகுமாரின் உறவினர். அவரும் எங்களை அன்புடன் உபசரித்தார். உணவருந்தி முடித்தவுடன்  தோழர் நந்தகுமார் ஆசிரியருக்கும் எனக்கும் ஆஸ்திரேலியாவின் வரலாறு
‘A brief history of Australia’ என்ற நூலை  வேல்முருகன் மூலம் அன்பளிப்பாக வழங்கினார். ஆசிரியர் அவர்கள் அந்த நூலை கோல்டு கோஸ்டில் குடும்ப சந்திப்பு நடந்த அரங்கில் பார்த்து, எடுத்துப் படித்துப் பார்த்து இந்த நூலை வாங்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அதனை நினைவில் வைத்து தோழர் நந்தகுமார் அந்த நூலை வாங்கி வந்து பரிசளித்ததற்காக ஆசிரியர் மகிழ்ந்து அவருக்கு நன்றி கூறினார். ஆசிரியருடன் மெல்பேர்ன் தோழர்களின் இறுதி நிகழ்வு என்பதால்  தோழர்களின் கேள்வி – பதில் சிரிப்பு என உற்சாகமாக கழிந்தது.

மதிய உணவுக்குப் பின் கொஞ்சம் ஓய்வு. இதோ.. மெல்பேர்னை சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டோம். தோழர்கள் மூர்த்தி மற்றும் சுரேஷ் இருவரும் மெல்ேபர்ன் நகரத்தின் மய்யப் பகுதிக்கு காரில் எங்களை அழைத்துச் சென்றார்கள். விக்டோரியா மாநிலத்தின் நாடாளுமன்றம் மெல்பேர்னில் அமைந்துள்ளது. அதன் உள்ளே செல்ல நேரம் இல்லை. வெளிப்புற அமைப்பை மட்டும் பார்த்தோம். இந்தியாவில் மாநில அரசமைப்பை நடத்தும் அவையை நாம் சட்டசபை என்றும் ஒன்றிய அரசின் அரசியல் அவையை நாடாளுமன்றம் என்றும் சொல்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் மாநில சட்டசபைகளும் நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகின்றன. கூட்டாட்சி அரசின் Federal Government சட்ட சபையும் நாடாளுமன்றம் என்றே அழைக்கப்படுகின்றது. நாங்கள் பார்த்த மெல்பேர்ன் நாடாளுமன்றக் கட்டடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காசா மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரத் தாக்குதலை கண்டித்து அச்சடித்த முழக்கங்களை ஏந்தியபடி ஒரே ஒருவர் தனியாக மனித உரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். கண்காண முடியாத தொலைவில் அழிக்கப்படும் ஒரு மனிதக் கூட்டத்திற்காக எங்கோ இருந்து  தனியே ஒலிக்கும் மனிதத்தின் நிழலைக் கண்டோம்.

பின்பு நகரத்தின் முக்கிய வீதிகள், வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டடங்கள், நகரத்தின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும் பூங்காக்கள், நெடிதுயர்ந்த சாலையோர மரங்கள் ஆகியவற்றை காரில் அமர்ந்தபடியே பார்த்துக்கொண்டு சென்றோம். மெல்பேர்னின் தலைமை ரயில் நிலையத்தின் அருகில் வரும்போது இருட்டி விட்டது. ஒளி விளக்குகள் பளிச்சிடும் மெல்ேபர்னையும் பார்த்து விட்டோம்.

இப்படியாக நாங்கள் மெல்ேபர்ன் நகரை சுற்றிப் பார்த்து விட்டு  தோழர் மூர்த்தி அவர்களின் இல்லம் திரும்பி இரவு உணவிற்குப் பிறகு, உறங்கச் செல்லும் முன்பு மூன்று நாள்களும் நடந்த நிகழ்வுகளைப் பாராட்டி ஆசிரியர் தோழர்களிடம் உரையாடினார். அப்போது தோழர் தாயுமானவன் அவர்கள் ஆசிரியருக்கு அந்நாட்டுப் பழங்குடி மக்களின் தயாரிப்பான தொப்பி ஒன்றைப் பரிசளித்தார். நான் இதையெல்லாம் எங்கே பயன்படுத்தப்  போகிறேன் ? என்று ஆசிரியர் கேட்க, சென்னையில் வெயில் அதிகம் அய்யா, அதனால் இந்தத் தொப்பி வெயிலில் இருந்து பாதுகாக்கும் என்று சொல்லி  தோழர் மூர்த்தி அவர்கள் ஆசிரியருக்கு அணிவித்தார். கொள்கைக் குடும்பங்களின் இனிய கூடலாக அமைந்த அன்றைய இரவுடன் மெல்பேர்ன் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

வகுப்பறையாக மாறிய விமான நிலையம்

மறுநாள் காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி விமான நிலையம் சென்றோம். தோழர்கள் அரங்க.மூர்த்தி, சுரேஷ், சரவணன் இளங்கோவன்,வசந்தன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்திற்கு எங்களை அழைத்துச் சென்று சிட்னிக்கு வழியனுப்பி வைத்தனர். நாங்கள் செல்ல வேண்டிய விமானம் வருவதற்கு சற்றுத் தாமதமாகியது. அந்த நேரத்தில் அங்கிருந்த புத்தகக் கடையில் சில நூல்களைப் படித்துப் பார்த்து அதைப் பற்றி ஆசிரியர் கூறிய சில செய்திகள் விமான நிலையத்தையும் வகுப்பறையாக மாற்றியது. ஆசிரியர் படிக்க விரும்பிய நூல் ஒன்றை தோழர்கள் வாங்கி ஆசிரியரிடம் அளித்தனர். அந்த நூலின் தலைப்பு “ Courage to be disliked’’ (விரும்பப்படாமல் இருப்பதற்கான துணிவு) என்பதாகும். ஆசிரியர் அவர்கள் தோழர் மூர்த்திக்கு வாழ்த்து கூறி தன் கையெழுத்திட்ட ஒரு நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

எங்கள் விமானம் வந்து சேர்ந்தது. ஆசிரியர்,கபிலன், அண்ணாமலை மகிழ்நன் மற்றும் நான் மெல்பேர்ன் தோழர்களிடம் விடைபெற்று சிட்னி வந்து சேர்ந்தோம்.

மீண்டும் ஏன் சிட்னி வந்தோம்?

தொடரும்.. 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *