கரோனா: தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் தொற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 12- தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கருத்தரங்கம்

மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று (11.6.2025) தொடங்கியது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நடவடிக்கைகள்

பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு கடந்த 2021-2022இல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 90.5 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 39.4 ஆக குறைந்துள்ளது. அதேபோல, பேறு கால சிசு உயிரிழப்பு 2021-2022ஆம் ஆண்டு 1,000 பிரசவங்களுக்கு 10.2 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 7.7 ஆக குறைந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை பூஜ்ஜிய அளவுக்கு கொண்டு செல்ல பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஒமைக்ரான் வகை

கடந்த ஒரு மாதமாக நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 19 மாதிரிகளை புனே வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அது ஒமைக்ரான் வகை என்று கண்டறியப்பட்டது. அது வீரியமற்றது. பெரிய அளவில் உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று அறிவியல் ரீதியாக தெரியவந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு 3 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர்.

மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், இதுபோன்ற வீரியமற்ற கரோனா வைரஸ் பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது. எனவே, மக்கள் பதற்றப்பட வேண்டாம். அதேநேரம், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *