பள்ளிகள் துவங்கிவிட்டது, அவசர அவசரமாக அனுப்பி வைப்பதை தவிர்த்து முன்னேற்பாடோடு குழந்தைகள் செல்ல நாம் செய்யவேண்டியது

2 Min Read

குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து, அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும். இந்தப் பயிற்சி, குழந்தைகள் புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவிட்டது. தாமதமாக எழுந்து, பொறுமையாக சாப்பிட்டு, பிடித்த விளையாட்டுகளை விளையாடி தங்கள் விருப்பப்படி குழந்தைகள் விடுமுறையை கழித்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி திறந்ததும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது, அவர்களுக்கு சில வாரங்கள் வரை சற்று சிரமமாகவே இருக்கும். இதனால் குழந்தைகளைவிட அவர்களின் பெற்றோர் அதிக சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

மேலே சொன்னபடி, காலையில் எழுந்திருப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை விடுமுறை நாட்களில் குழந்தைகளின் வழக்கங்கள் மாறுபட்டு இருக்கும். அதை மாற்றி, மீண்டும் அவர்களின் வழக்கத்தை ஒழுங்குபடுத்துவது பெற்றோருக்கு சவாலானது. எனவே பள்ளி திறப்பதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே, இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும்.காலையில் கண்விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, தங்களுக்கான வேலைகளை செய்வது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வது என குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து, அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும். இந்த பயிற்சி, குழந்தைகள் புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும். அதுமட்டுமில்லாமல் இதன்மூலம் எதிர்காலத்தில் நேரத்தை சரியாக நிர்வகிப்பதற்கும் கற்றுக்கொள்ள முடியும்.

பள்ளி திறக்கும்போது பெற்றோர் குழந்தைகளிடம், செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு சரிபார்ப்பு பட்டியலை உருவாக்கச் சொல்வது அவசியம். அதில் புத்தகங்கள், குறிப்பேடுகள் என தினமும் அவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்தையும் பட்டியலிடச் சொல்லலாம். பள்ளி திறக்கும் நாளில், தேவையான அனைத்தையும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த இந்த பட்டியல் உதவும். இப்பழக்கம், எதிர்காலத்தில் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்.பேனா, பென்சில் போன்ற பொருட்களில் ஏதாவது உடைந்தாலோ, காணாமற்போனாலோ உடனடியாக மாற்று பொருள் கொடுக்கும் வகையில், முன்கூட்டியே கூடுதலாக வாங்கி வைத்திருப்பதும் சிறந்தது.

குழந்தைகளுக்கு ஏற்படும் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்க யோகா, தியானம் போன்ற செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். குழந்தைகளிடம் உள்ள மற்ற திறமைகளையும் ஊக்குவிக்க வேண்டும். பாட்டு, நடனம், விளையாட்டு, இசைக்கருவி வாசிப்பது போன்றவற்றில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தால், அதற்கான வகுப்புகளில் சேர்க்கலாம். இதன்மூலம், குழந்தைகளின் தனித் திறமைகளை வளர்க்க முடியும். குழந்தைகள் கல்வியிலும், மற்றத் திறமைகளிலும் சிறந்து விளங்குவதற்கு அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். அதற்கு சத்தான உணவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். காலை மற்றும் மதிய உணவுகளை, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் ஆரோக்கியம் நிறைந்ததாக தயாரித்துக் கொடுத்தால், அதை மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதற்கான பட்டியலை குழந்தைகளுடன் ஆலோசித்து தயார் செய்யலாம்.

சரியான திட்டமிடல், ஒழுங்கமைப்பு ஆகியவை இருந்தால் குழந்தைகளுக்கு வெற்றிகரமான கல்வியாண்டை பெற்றோர் உருவாக்கித்தர முடியும். முதல்வாரம் பள்ளிசெல்லும் குழந்தைகளின் நடைமுறைகளை கவனித்து அதில் மாற்றம் கொண்டுவர பெற்றோர்கள் முயன்றால் அது மிகவும் சிறப்பான ஒன்றாக மாணவர்களுக்கு அமைந்துவிடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *