சென்னை, ஜூன் 24– சிறைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறைச் சந்தை மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று (23.6.2023) நடைபெற்ற விழாவில், சிறைத் துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, துணைத் தலைவர்கள் இரா.கனகராஜ், ஆ.முருகேசன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சிறைச் சந்தைகளில் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை, அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி உதவும் வகையில் ‘சிறைச் சந்தை’ உருவாக் கப்பட்டுள்ளது. மத்திய சிறைச் சாலைகளில் இவை செயல் பாட்டில் இருந்தாலும்கூட, முதல்முறையாக பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் தயாரிக்கப் படும் தரமான பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு, மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்யும் திட்டமும் உள்ளது. பிரசித்தி பெற்ற மதுரை சுங்குடிச்சேலை, மதுரை மத்திய சிறையில் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, கோவை, மதுரை சிறைகளில் ஆயத்தஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. திருச்சி, சேலம் மத்திய சிறைச் சாலைகளில்
பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
புழல் மத்திய சிறையிலும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், அனைத்து சிறைச் சாலைகளிலும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு தர மான எண்ணெய் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறைச்சாலையில் தரமான தோல் காலணி கள், பெல்டுகள் தயாரிக்கப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறைவாசிகளுக்கு தர மான பொருட்களை தயார் செய்யும் பயிற்சி அளிக்கப் பட்டு, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் சிறைச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏற்கெனவே, புழல், சைதாப்பேட்டை சிறைகளில் உள்ள அங்காடிகளில் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை வளாகத்தில் அதிக அளவில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கேயே விற்பனை செய்யப்படுகின்றன. அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று 700 சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தோம். அதில் 450 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். மீதமுள்ளவர்களை நீதிபதி ஆதிநாதன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து வருகின்றனர். இது தொடர்பான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதல் பெற்று, ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டு வருகி றார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.