வறுமைக் கோடு : புள்ளி விவர மோசடியின் புதிய முகம்

viduthalai
2 Min Read

உலக வங்கி சமீபத்தில் அறிவித்துள்ள “புதிய வறுமைக் கோடு” பற்றிய விவரம், புள்ளி விவர மோசடியின் புதிய முகம் ஆகும். அதன்படி, இந்தி யாவில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் வீதம் 27.1 சதவீதத்திலிருந்து 5.5 சதவீத மாக குறைந்துவிட்டதாம்!

உலக வங்கியின் புதிய வறுமைக் கோடு நாள் ஒன்றுக்கு 2.15 டாலர் அதாவது 179 ரூபாய். பழைய வறுமைக் கோடு நாள் ஒன்றுக்கு 1.90 டாலர் அதாவது 158 ரூபாய். இந்த 21 ரூபாயை அதிகரித்துக் காட்டி, “மாயாஜாலமாக” 22 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். காகிதத்தில் மட்டும் தான்.

நாள் ஒன்றுக்கு 179 ரூபாய் என்றால் நடை முறையில் என்ன அர்த்தம்? காலை சாப்பாட்டுக்கு 25 முதல் 30 ரூபாய், மதிய சாப்பாட்டுக்கு 40 முதல் 50 ரூபாய், இரவு சாப்பாட்டுக்கு 35 முதல் 45 ரூபாய். மொத்தம் உணவுக்கு மட்டுமே 100 முதல் 125 ரூபாய் தேவைப்படுகிறது. மீதமுள்ள 54 முதல் 79 ரூபாயில் குடிக்கும் தண்ணீர், உடை, மருத்துவம், போக்குவரத்து, வீட்டு வாடகை அல்லது பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி ஆகிய அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இது சாத்தியமா?

இந்திய அரசின் சொந்த தரவுகளின்படியே 68 சதவீத மக்கள் மாதம் 10,000 ரூபாய்க்கு கீழ் வரு மானம் பெறுகின்றனர். கிராமப்புறங்களில் 50 சதவீத குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளன. 20 கோடி மக்கள் இன்னும் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். கண்ணியமான வாழ்க்கைக்கு ஒரு குடும்பத்திற்கு மாதம் குறைந்தது 25,000 முதல் 30,000 ரூபாய் தேவை.

இந்த நிலையில் வறுமைக்கோட்டிற்கான அளவை மாற்றி அமைத்திருப்பது முதலாளித்துவ பொருளாதாரம் உருவாக்கியுள்ள குரூரமான வரையறையே ஆகும்.

வறுமை இயற்கையாக வந்த பிரச்சினையல்ல. இது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவு. செல்வ குவிப்பு காரணமாக மேல் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 40 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். தொழிலாளர் சுரண்டல் மூலம் குறைந்த கூலி, நீண்ட நேர வேலை, சமூக பாது காப்பு இல்லாமை ஆகியவை நிலவுகின்றன. விவசாய அழிப்பின் மூலம் கார்ப்பரேட் விவசாயம், குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, விவசாயிகள் தற்கொலை ஆகியவை நடக்கின்றன. பொதுத்துறை தனியார்மயத்தின் மூலம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து எல்லாம் லாபத்துக் காக மாற்றப்படுகின்றன.

இத்தகைய நிலையில், உலக வங்கியின் இந்த புள்ளிவிவர மோசடி நம்மை ஏமாற்ற முயற்சிக் கிறது.

வறுமை ஒழிப்பு என்பது தர்மம் அல்ல, அது நீதி! மக்கள் அணிவகுத்து எழ வேண்டும். ஏழை-பணக்காரன் இடைவெளியை குறைக்க வேண்டும். செல்வத்தை மறுபங்கீடு செய்ய வேண்டும். அதுவரை இந்த மாதிரி புள்ளிவிவர மோசடிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நன்றி: ‘தீக்கதிர்’ தலையங்கம் 10.6.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *