ஒற்றைப்பத்தி

2 Min Read

Dr.முருகன்?

முருக பெருமானின் மந்திரம்:

ஓம் பாலசுப்ரமணிய

மஹா தேவி புத்ரா

சுவாமி வரவர சுவாஹா!

இந்த மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ சொல்லுங்கள். முடிந்த அளவுக்கு மந்திரத்தைச் சொல்லுங்கள். முருக பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்துங்கள்.

மேலும் இந்த மந்திரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லலாம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கார்த்திகை நட்சத்திர தினம் என்று இந்த நாட்களில் சொல்வது இன்னும் வலிமையாக்கும்.

தொடர்ந்து இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபித்து வந்தால், தீராத நோயும் தீரும். சகல தோஷங்களும் விலகும். எதிர்ப்புகளெல்லாம் தவிடுபொடியாகும். வீடு, மனை யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

‘தினமலர்’ சிறப்பு மலர், 9.6.2025, பக்கம் 7

‘மந்திரத்தால் மாங்காய் விழுமா?’ என்பது சாதாரணமாகப் பொது மக்கள் மத்தியில் புழங்கும் பழமொழி!

இந்த 2025 ஆம் ஆண்டிலும் யாரோ ஒரு முருகனாம் – அவன் பெயரில் மூன்று வரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தால், தீராத நோய் தீருமாம்; சகல தோஷங்களும் விலகுமாம். எதிர்ப்புகள் எல்லாம் தவிடு பொடியாகுமாம். வீடு, மனை யோகம் கிடைக்கப் பெறுமாம்.

கடைசியில் எப்படி முடிகிறது? என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

யார் அந்த ஆச்சார்யப் பெருமக்கள்? சொல்கிறவர்க்குத்தான் வெளிச்சம்!

ஒரு மூன்று வரி மந்திரத்தை உச்சரித்தாலே எல்லாம் நடக்கும் என்றால், அரசாங்கம் எதற்கு? மருத்துவமனைகள் எதற்கு? காவல் நிலையங்கள் எதற்கு? எதற்கு? ‘ஆபரேசன் சிந்தூர்’ எதற்கு? என்று கேட்டுக்கொண்டே போகலாம்தான்.

இவ்வளவு சக்தியுள்ள முருக பெருமாை(ள) கோவில் கட்டி, கர்ப்பக் கிரகத்துக்குள் சிறை வைத்து, பெரிய பூட்டை எல்லாம் போட்டு, பூட்டி வைப்பானேன்?

இவ்வளவுக் காபந்து செய்து வைத்தாலும், அந்த முருகப் பெருமான் அய்ம்பொன்னால் ஆகியிருந்தால், அல்லது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன பூணூலை அணிவித்திருந்தால் (‘மாலைமலர்’, 16.3.2012) ஆசாமிகள் பூட்டை உடைத்து அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்களே!

கடவுள் சிலை திருட்டைக் கண்டுபிடிப்பதற்கென்றே தனித் துறை செயல்படுகிறதே, ஏன்? ஏன்? ஏன்?

கடலைத் தாண்டி வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில், இப்படி கடத்தப்பட்ட கடவுள் சிலைகள் காட்சிப் பொருளாகக் குந்த வைக்கப்பட்டு இருப்பது ஏன்? ஏன்? ஏன்?

– மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *