இனமலரின் செய்தியால் ‘வெளியே வந்த பூனைக்குட்டி!’

Viduthalai
2 Min Read

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு
அமித் ஷா வருகையால் தொய்வா?

சென்னை, ஜூன் 10- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை வருகையால், முருக பக்தர்கள் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி நடப்பதாக, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடந்த பிப்ரவரி 4ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தின.

திடீர் அறிவிப்பு

அதன் வெற்றியைத் தொடர்ந்து, முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் 22ஆம் தேதி நடக்கவுள்ளது.இந்த மாநாட்டை ஹிந்து முன்னணி நடத்துகிறது.

ஆனாலும், பா.ஜ..வி.ஹெச்.பி., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அனைத்தும் மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

பா.ஜ., நிர்வாகிகள் தங்கள் கிளை, பூத் கமிட்டியில் இருந்து, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொண்டர்கள், முருக பக்தர்களை அழைத்துச் செல்ல வாகனம், உணவு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் நடந்த, பா.ஜ., மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்நிகழ்வு நான்கு நாட்களுக்கு முன் திடீரென அறிவிக்கப்பட்டது.

ஆதங்கம்

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் பா.ஜ., வினர், அமித்ஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப் போய்விட்டனர்.

இதனால், முருக பக்தர்கள் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இனி இந்த சிக்கல் வரக்கூடாது!

இது தொடர்பாக, ஹிந்து முன்னணி அமைப்பினர் கூறியதாவது:

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வரும் 22ம் தேதி நடப்பது குறித்து, சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, அமித்ஷா நிகழ்ச்சியை கோவை, சேலம் அல்லது சென்னையில் நடத்தியிருக்கலாம். அல்லது 22க்கு பின் மதுரையில் நடத்தியிருக்கலாம்.

ஆனால், மதுரையில் மாநாடு நடப்பதற்கு 14 நாட்களுக்கு முன், பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளால், முருக பக்தர்கள் மாநாட்டில் உற்சாகத்துடன் ஈடுபட முடியவில்லை. இதனால் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், இது போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

– ‘தினமலர்’, 10.6.2025 சென்னை பதிப்பு பக். 5

இதன் அர்த்தம் என்ன என்று புரிகிறதா? கூட்டிவந்த கூட்டம்தான் எல்லாம் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தானே இது!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *