சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (21)

Viduthalai
6 Min Read

கி.வீரமணி

மீண்டும் ‘குடிஅரசு’

தொடர்ந்த அடக்குமுறை

‘‘அனைவரும் அன்பின் மயமாக வேண்டும்’’ என்னும் உயரிய நோக்குடன் 02.05.1925 அன்று தந்தை பெரியாரால்  நிறுவப்பட்ட ‘குடிஅரசு’ தம் தீவிர களப்பணியில், பிரச்சாரத்தால் சமூகத்தில் வியக்கத்தக்க மாற்றுச் சிந்தனையை விதைத்து மறுமலர்ச்சியை உண்டாக்கயது. அதற்கு விலையாக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டது.

19.11.1933 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ என்னும் பெயர்களில் புதிய இதழ்கள் வெளியாயின. பின்னர் மீண்டும் ‘குடிஅரசு’ 13.1.1935 முதல் வெளியாயின. அதாவது ‘குடிஅரசு’ தொடங்கப்பட்டு 10ஆம் ஆண்டில் மீண்டும் வெளி யானது. ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ இதழ்களின் ஆசிரியராக விளங்கிய ஈ.வெ.கிருஷ்ணசாமியே தொடர்ந்தார். அதே தேதியில் வெளியான துணைத் தலையங்கம் கீழ்க்கண்டவாறு அதன் நிலையை விளக்கியது.

குடிஅரசு பத்திரிகை துவக்கப்பட்டு இன்றைக்கு 11ஆவது வருஷம் நடக்கின்றது. மத்தியில் ஒரு வருஷ காலம் அது அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டி ஏற்பட்டு அதன் கொள்கைகள் ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ என்னும் பெயரால் வெளியிடப்பட்டு வந்து இப்போது மறுபடியும் 1935ஆவது வருஷம் ஜனவரி மாதம் முதல் பழையபடி குடிஅரசு என்னும் பெயராலேயே அது வெளியாக்கப்பட்டு முன் நிறுத்தப்பட்டதிலிருந்தே தொடர்ந்து 9ஆம் மாலை 23ஆவது மலராய் வெளி வருகிறது. ஆதியில் “குடிஅரசு” மனித சமுகத்துக்கு என்ன தொண்டு செய்ய முன் வந்ததோ, அதே தொண்டை எப்படிப்பட்ட கஷ்டமான காலத்திலும், நெருக்கடியான காலத்திலும் பின்னடையாமல் செய்து வந்திருப்பதோடு இப்போதும் அதையே கடைப்பிடித்து தன்னாலான தொண்டாற்ற துணிவுடன் முன் வந்திருக்கிறது. (‘குடிஅரசு’ – 13.01.1935)

இரண்டாம் முறை வெளியான ‘குடிஅரசு’ பல்வேறு மாற்றங்களை கொண்டதாக வெளியானது. தமிழ் மொழி வரலாற்றில் புதிய புரட்சியாக தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன் முதல் பக்கம் முதல் 20 பக்கங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டன. அடுத்த வாரத்தில் இதன் தேவை குறித்த விளக்கம் இடம்பெற்றது.

இம்முறை வெளியான இதழ்களின் முகப்பில் திருக்குறள்கள் இடம்பெற்றன.

ஆனாலும் இரண்டாம் முறை வந்த சில நாட்களில் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

‘‘‘குடிஅரசு’ ஆபீஸ் சோதனை’’ என்று தலைப் பிட்டு வெளியான கீழ்க்காணும் செய்தி அதனை விளக்குகிறது.

‘20-.01-.1935ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி சுமாருக்கு சென்னை அரசாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒரு C.I.D. போலீஸ் அதிகாரி, உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்,

சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு, மூன்று ஹெட் கான்ஸ்டேபிள்கள் பத்துப் பன்னிரண்டு கான்ஸ் டேபிள்களுடன் ‘குடிஅரசு’ ஆபீசுக்குள் புகுந்து ஆபீசைச் சுற்றியும், ஆபீசுக்குள் இருந்த ஆட்களுக்கும் காவல் போட்டுவிட்டு ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு ரிகார்டுகளையும் பரிசோதித்தார்கள். அங்கு ஒன்றும் அவர்கள் இஷ்டப்படி கிடைக்காததால் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக நிலையத்துக்குள் புகுந்து அங்கும் அதுபோலவே பதினாயிரக்கணக்கான புத்தகங்களையும், புத்தகக் கட்டுகளையும் கலைத்து விட்டார்கள். அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை.

பிறகு தோழர் ஈ. வெ.கி. அவர்கள் வீட்டிற்குச் சென்று அங்கும் பல புத்தக அலமாரிகளைத் திறந்தும் மற்ற இடங்களையும் சுற்றிச் சுற்றி சோதனை போட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை.

சிறப்புக் கட்டுரை

கடைசியாக பகத்சிங்கைப் பாராட்டி தோழர்
ஈ.வெ.ராவால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை அடங்கிய ‘குடிஅரசு’ மலர் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள், 1 மணி முதல் 4 மணி வரை சோதனைகள் நடந்தன. “நீ செய்திருக்காவிட்டாலும் உன் பாட்டனார் செய்திருப்பார்” என்கின்ற நீதி கொண்டாவது தோழர் ஈ. வெ. ராவையும் ‘குடிஅரசு’ பத்திரிகையையும் ஒழிக்க வேண்டியது நமது அரசாங்கத்துக்கு அவசியமேற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. நடக்கிறபடி நடக்கட்டும் எல்லாம் அ… செயல். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

(‘குடிஅரசு’ – 27.01.1935)

தந்தை பெரியார் ‘குடிஅரசு’ பதிப்பத்தின் சார்பில் பகத்சிங் எழுதிய ‘‘நான் நாத்திகன் ஏன்?’’ என்னும் புத்தகத்தை ஜீவானந்தம் அவர்களைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நூல் தடை செய்யப் பட்டடிருந்ததாகவும், அதனை மொழிபெயர்த்தது குற்றம் என்றும் வறி மொழிபெயர்ப்பாளர்கள் ஜீவானந்தம், பதிப்பாளர் ஈ.வெ.கி.கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தியை 14.04.1935 தேதியிட்ட ‘குடிஅரசு’ விளக்கியது.

நமது ஆசிரியர் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மீதும் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் தொடரப்பட்டு இருந்த ராஜத் துவேஷ வழக்கு முன் குறிப்பிட்டிருந்தபடி 18.3.1935ஆம் தேதியில் விசாரணை நடைபெறவில்லை. அன்று ஜில்லா மேஜிஸ்திரேட் அவர்கள் தான் இன்னும் வழக்கு சம்பந்தமான ரிக்கார்டுகள் முழுவதையும் படித்துப் பார்க்கவில்லை என்று கூறி 23.3.1935ஆம் தேதிக்கு வாய்தா போட்டிருந்தார்.

23.3.1935ஆம் தேதியில் தோழர்கள்
ஈ.வெ.கிருஷ்ணசாமியும் ஜீவானந்தமும் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததனால் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த ஸ்டேட்மெண்டில்,

“நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும், இராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல என்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

‘குடிஅரசு’ – 24.03.1935

தொடர்ந்து ‘1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன’’

‘குடிஅரசு’ ஆபீசு உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட “பாதிரிகளின் பிரம்மச்சரிய லட்சணம்” என்னும் புத்தகங்கள் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டு 1550 புத்தகங்கள் போலீசாரால் கைப்பற்றி இரசீது கொடுக்கப்பட்டது.

இனி அப்புத்தகம் ‘குடிஅரசு’ பதிப்பகத்திலோ, பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகத்திலோ கிடைக்காது.

குடிஅரசு – பெட்டிச் செய்தி
அறிவிப்பு 14.04.1935

இரண்டு மாதம் கழித்து, ‘‘மற்றொரு புத்தகம் பறிமுதல்’’ என்னும் தலைப்பில் செய்தி.

‘‘பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடப் பட்டிருக்கும் “குடிஅரசுக் கலம்பகம்” என்ற புத்தகம் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பபட்டிருக்கிறதாக செய்தி கிடைத்திருக்கிறது. இதற்கு முன் மூன்று புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் விஷயம் நேயர்கள் அறிந்ததே. இது நான்காவது புத்தகமாகும். இனியும் பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப் படலாம் என்று கருதினால் அது முற்றிலும் ஆதாரமற்றதாகாது.

– ‘குடிஅரசு’ – 23.06.1935

இந்த நிலையில் தந்தை பெரியார் ஒரு நீண்ட விளக்கத்தை அறிக்கயாக வெளியிட்டார்.

உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற் காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பீனல் கோர்ட் 124ஏ செக் ஷன்படி ராஜத்துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும்.

அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜத் துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரச்சாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜத்துவேஷம் என்று கருதத் தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.

இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும், பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த மன்னிப்புக் கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *