கீதைபற்றிப் பட்டப் படிப்பாம்!

Viduthalai
3 Min Read

கீதைபற்றிப் பட்டப் படிப்பாம்!

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறிய போதனைகளை உள்ளடக்கிய 5 ஆண்டு ஒருங் கிணைந்த மேலாண்மைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஆதித்யநாத் ஆட்சியில் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ. பட்டப்படிப்பு பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய போதனைகளை உள்ளடக்கிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த  பி.பி.ஏ. எம்.பி.ஏ. படிப்புகள் தொடங்கப் பட்டுள்ளன.

அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறை தொடங்கியுள்ள அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த பி.பி.ஏ. எம்.பி.ஏ படிப்பான இதில் பகவத் கீதை, ராமாயணம், உபநிடதங்கள் மற்றும் சாணக்கியரின் போதனைகளும் வெற்றிக்கான மந்திரங்களாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுமாம். இந்தப் பிரிவில்   படிக்கும் மாணவர்கள் ஜேஆர்டி டாடா, அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் உள்ளிட்ட  வணிக உலகின் பெரிய ஆளுமைகளின் நிர்வாக முடிவுகளை அறிந்து புரிந்துகொள்வதோடு அஷ்டாங்க யோகா பயிற்சியும் இடம் பெறும்   எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டப்படிப்பில் 10 செமஸ்டர் தேர்வுகள் இருக்கும் என்றும், இந்திய மேலாண்மை சிந்தனை, ஆன்மிகம், கிருஷ்ணரின் பகவத் கீதை, ராமாயணம், வேத உபநிடதம் ஆகியவற்றில் கூறப்பட்ட மேலாண்மைக் கருத்தியல்கள், கலாச்சார நெறிமுறைகள், செயற்கை நுண்ணறிவு போன்ற தலைப்புகளில் பாடங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர் முதல் ஆண்டோடு படிப்பை நிறுத்திவிட்டால் அவருக்கு ஒரு ஆண்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இரண்டாம் ஆண்டு முடித்த வர்கள் டிப்ளமோ பட்டயமும், மூன்றாம் ஆண்டில் பி.பி.ஏ. பட்டமும், அய்ந்தாம் ஆண்டில் எம்.பி.ஏ. பட்டமும் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஸ்டார்ட்அப் மேனேஜ்மென்ட்டுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட் டுள்ளதாகவும் இந்தப் பாடத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷெபாலி நந்தன் தெரிவித்துள்ளார்.   “மேலாண்மைப் பாடத்தில் பகவான் கிருஷ்ணரின் நிர்வாகத்தைக் கற்பிப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்; கிருஷ்ணர் 16 கலைகள் நிறைந்தவர். தனது திறமையான நிர்வாகத்தால், மதத்திற்காகவும், உண்மைக்காகவும் போராடிய பாண்டவர்களை வளங்கள் இல்லாத நிலையிலும் வெற்றி பெறச் செய்தார்; மேலாண்மை மாணவர்கள் இந்தப் படிப்பை மேற்கொண்டால், வாழ்க்கையில் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெறுவது அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்றும் அந்த ஒருங் கிணைப்பாளர் கூறுகிறார்.

மேலும், அவர் “போட்டிகள் நிறைந்த இந்த உலகில், பகவத் கீதையைப் படிக்க எந்த மாணவருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இப்படியான சூழ்நிலையில், இந்தப் படிப்பை கல்லூரி படிப்பில் சேர்க்கும்போது, மாணவர்கள் ஆழ்ந்த பலன்களைப் பெறு வார்கள். இந்தப் பயிற்சியில், பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் வழங்கிய போதனைகளும் மாணவர்களுக்கு விளக்கப்படும். எனவே, இந்தப் படிப்பு வேலை பெறுவதற்கு மட்டும் உதவியாக இல்லாமல் எதிர்காலத்தில் வளர்ச்சியை அதாவது முன்னேற்றத்தை வழங்கவும் உதவியாக இருக்கும்.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கொடுத்துள்ள நிர்வாக சூத்திரங்கள் இன்றும் உங்களுக்கு வெற்றியைத் தரும். பகவான் கிருஷ்ணரின் சூத்திரங்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். நீங்களும் அவரை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம் சிறந்த நிர்வாக குருவாக முடியும்.

1. உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள்… வெற்றி உங்களைத் தொடரும்.

2. நீங்கள் ஒரு குழுத் தலைவராக இருந்தால், உடன் பணி புரிபவர்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

3. உங்கள் வேலையைச் செய்யுங்கள், முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

4. உங்கள் வேலையில் கர்வம் கொள்ளாதீர்கள்.

5. புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள் அதாவது உங் களைத் தொடர்ந்து தகைமையாற்றிக் (Update)  கொள்ளுங்கள்.

கிருஷ்ணர் பகவத் கீதையில் நூற்றுக்கணக்கான சூத்திரங் களைக் கொடுத்துள்ளார். இவற்றை அன்றாடம் கடைப்பிடிப்பதன் மூலம் எவரும் தங்கள் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த 2023ஆம் ஆண்டிலும் மாணவர்களை மடையர் களாக்கும் கேடு கெட்ட வேலையை நோக்கித் திருப்புவதன் பின்னணி என்ன?

அந்தக் கிருஷ்ணன் தானே நான்கு வருணத்தை நானே படைத்தேன் என்று கூறுகிறான். பெண்களும், சூத்திரர்களும், வைசியர்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. காவிகள் ஆட்சியோ அஞ்ஞானத்தை மாணவர்கள் மூளையில் திணிக்கிறது. பா.ஜ.க.வும், சங்பரிவார்களும் கூறும் ஒரே மதம், ஒரே கலாச் சாரம் என்றால் என்ன என்பது இப்பொழுது தெரிகிறதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *