தமிழ்நாடு அரசு திட்டம் போரூரில் ரூ. 258 கோடியில் குடிநீர் தேக்கம் பயனடைவோர் பத்தாயிரம் குடியிருப்புவாசிகள்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 9- சென்னை போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

சென்னைக்கு குடிநீர்

சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து, கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6ஆவது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகளிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில், சென்னை அடுத்த போரூரில் ரூ.258 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டு உள்ளது. 11 ஆயிரத்து 486 சதுர மீட்டர் பரப்பளவில் 15 மில்லியன் லிட்டர் கொள்ளளவு சேமிப்பு திறன் கொண்ட வகையில் இந்த நீர்தேக்கம் இருக்கும். சென்னை, மணலி, மாதவரம் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சிகள்

இந்த நீர்தேக்கத்திற்கு ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் நிதி அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ரூ.51.99 கோடி நிதி அளிக்கிறது. 18 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ள 20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முதல் படியைக் குறிக்கும் வகையில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பம்பிங் நிலையங்கள் மற்றும் குளோரின் கட்டுமானங்கள், எந்திரம் மற்றும் மின் கம்பங்களை நிறுவுதல், ஏற்கெனவே உள்ள நீர் வினியோக குழாய் இணைப்புகள் மற்றும் இறுதி சோதனை போன்ற பல முக்கிய கட்டங்களை இந்த திட்டம் உள்ளடக்கியது.

ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் 20 ஆண்டுகள் உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பொறுப்பை ஏற்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

இயற்கை உபாதை
– தள்ளிப் போடாதீர்!

சிறுநீர் கழிப்பது என்பது இயற்கையான நிகழ்வு. இதைக் கூட சிலர் தங்களது சோம்பேறித்தனத்தால் தள்ளிப் போடுவார்கள். இப்படி செய்வது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இருதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுமாம். நமது மூளையையும் பாதிக்குமாம். இடுப்பு தசைகளை பலவீனமாக்கும், பிரச்சினைக்கும் வழி வகுக்குமாம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *