தமிழ்நாட்டில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம் 2.0 விரைவில் துவக்கம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 8 தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாமக்கல்லில் நேற்று (7.6.2025) காலை 5 மணியளவில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ், 8 கி.மீ., தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவுக்கு, கடந்த 2023ஆம் ஆண்டு நிதி ஆதாரம் பெற சென்ற போது, அங்கு ஹெல்த் வாக் என்ற பெயரில், 8 கி.மீ., தூரம் மக்கள் நடந்து சென்றனர். சாலையின் இருபுறமும் மரங்கள் இருந்தது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

இதை பின்பற்றி தமிழ்நாட்டிலும் ஹெல்த் வாக் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 2023 நவம்பர் மாதம் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது.

சில மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வதால், உடல் வலிமை, மனவலிமை பெறமுடியும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தற்போது மாவட்ட தலைநகரில் மட்டும் இந்த திட்டம் உள்ளது. மற்றொரு நகரத்திலும் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம், விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *