தமிழ்நாடு காவல் துறையினருக்கு கடும் கட்டுப்பாடுகள் காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வெளியீடு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 8- சமூக வலை தளங்களில் காவல் துறை அதிகாரிகள் தங்களது சீருடையுடன் இருக்கும் ஒளிப்படங்களை வெளியிடக்கூடாது என்பது உள்ளிட்டபல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் கூறி யிருப்பதாவது:-

சீருடை அணிந்த நிலையில்…

காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருக்கும் உயர் காவல்துறை அதிகாரிகள் அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், முக்கியமான காவல்துறை பணிகள் தொடர்பாக சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை தங்களது தனிப்பட்ட சமூகவலைதள பக்கங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் சீருடையுடன் கலந்து கொள்வதாகவும் அப்போது பரபரப்பான அதிகாரபூர்வ தகவலை தெரிவிப்பதாகவும், காவல் துறை தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. யூடியூப் நேர்காணலின்போது காவல்துறை அதிகாரிகள் வழக்குகள் பற்றிய ரகசிய தகவல்களை எக்காரணத்தை கொண்டும் பகிரவேண்டாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி

அகில இந்திய பணிகளின் நடத்தை விதிகளின்படி, இது போன்ற செயல் களில் ஈடுபடக் கூடாது. தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் சேனலில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து அரசிடம் தகவல்  தெரிவித்து உரிய அனுமதிபெற வேண்டும். தேவைப் பட்டால் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய அனைத்து தகவல்களையும் தங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய அனுமதி பெறவேண்டும்.

உயர் அதிகாரிகளின் அனுமதி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றுதான் பேட்டி அளிக்க வேண்டும். இதுபோன்ற நன்நடத்தை விதிகளை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து அதிகாரிகளும் கண்டிப் பாக மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநரின் இந்த சுற்றறிக்கை தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *