பா.ஜ.க.வை வீழ்த்த பாட்னாவில் 16 கட்சிகளின் முடிவு – வெற்றிக்கான வெளிச்சம்!
வரும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தாவிட்டால் – இதுதான் ‘நாட்டின் கடைசி பொதுத்தேர்தல்’ என்பதை மறவாதீர்!
தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான மூன்று யோசனைகள் சிறப்பானவை! பயன்தரும் மருந்து!!
பாசிச பா.ஜ.க.வை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்திட பீகார் தலைநகரமான பாட்னாவில் 16 கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்திருப்பது வெற்றிக்கான வெளிச்சம். தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்று யோசனைகள் ஆக்கப்பூர்வமான முத்தாய்ப்பானவை. பா.ஜ.க.வை வீழ்த்திட ”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நேற்று (23.6.2023) பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா வில் 16 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் (இதில் தற்போதுள்ள ஆறு முதலமைச்சர்களும் அடங்குவர்) ஒன்றுகூடி, வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளனர். அரசமைப்புச் சட்ட விதி – நெறி களையும், ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, இந்திய ஜனநாயகத்திற்கு விடை கொடுத்துவிட்டு, மக்கள் விரோத ஆட்சியை மூன்றாம் முறையாகவும் அமைக்க முனைந்து, எதேச்சதிகார – பாசிசத்தை சிம்மாசனத்தில் அமர்த்தி. ஆள வைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வைத் தோற்கடிக்க சிறப்பான வியூகம் வகுக்கக் கூடியது காலத்தின் கட்டாயமாகும்!
பொது எதிரியை வீழ்த்துவதே ஒரே குறி!
அக்கட்சிகளிடையே பல கருத்து மாறுபாடுகள், அணுகுமுறை வேறுபாடுகள் இருந்தாலும், பொது எதிரியை வீழ்த்த ஒன்று திரள்வது தவிர்க்கக்கூடாத ஒன்று என்பதை உணர்ந்து ஒன்று திரண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கடந்த பல ஆண்டுகளாக அனைத்து முக்கிய கட்சிகளையும் ஓர் கூட்டணியில் – கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்த்து வைத்து, மூன்று தேர்தல்களை (நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றம்) சந்தித்து பெற்ற வெற்றி மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது; இந்தியா விற்கே ‘திராவிட மாடல்’ ஆட்சித் தலைமை ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதோடு – பாசிச எதிர்ப்பு அறப்போர் அரசியல் தளத்தில் ஒரு கூட்டணி அமைத்து நின்று வென்று காட்ட முடியும் என்பதை நம்பிக்கையுடன் விதைத்திருப்பது நல்ல முன்னோட்டமாக அமைந் துள்ளது! சரியான அறச்சீற்றம்!!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தேஜஸ்வி ஆகியோரின் சீரிய முயற்சி – இடையறாத சந்திப்புகள் சிறந்த பலனைத் தந்துள்ளன – நன்றி கூறுகிறோம்!
நமது பாராட்டும் – வாழ்த்தும்!
கலந்துகொண்ட அத்துணைத் தலைவர்களும் ஒரே பொதுநோக்கோடு, ஒற்றை இலக்கோடு, தங்களை எது பிரிக்கிறதோ அதைத் தள்ளி வைத்து, தங்களை எது இணைக்கிறதோ அதனையே முன்னிலைப்படுத்தி, இந்த முதல் கட்ட முயற்சியிலேயே வெற்றியின் வெளிச்சத்தை – விடியலுக்கான சரியான வினைத்திட்பத்தை உருவாக்கி யிருக்கிறார்கள்.
அனைத்துத் தலைவர்களுக்கும் நமது பாராட்டும் – வாழ்த்தும்!
பலூன் போன்று ஊதியுள்ள – பண பலம், பத்திரிகை பலம், முரட்டு ஆள் பலம் எல்லாம் கொண்டதாக உள்ள ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.க. ஆட்சியை அகற்ற தக்க மூளை பலம் (Mind Power) பயன்படுத்தினால் வெற்றி சாத்தியமாவது உறுதி!
2019 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணி பெற்ற வாக்குகள் வெறும் 40 விழுக்காடே!
வெற்று விளம்பர மாயையிலேயேயும், பொய் உற்பத்தி சமூக வலைத் தளங்களிலும் ‘‘பூதாகார”மாகக் காட்டப்படும் ஒன்றிய ஆளும் கட்சி பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 2019 ஆம் ஆண்டின்போதும் 40 சதவிகிதம் கூடக் கிடையாது என்பதை மக்களிடையே தலைவர்கள் நினைவூட்டினால், அதற்கு எதிரான மக்கள் 60 சத விகிதத்தினர் எதிர்த்துள்ள பிறகு – ஆதரவு தர மறுத்த வர்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்க முயற்சித்து, அரசியல் போட்டிக் களத்தை அமைத்தால், வெற்றிக்கனி பறிப்பது எளிதாகும்! மோடி – வாக்கு வங்கி என்ற மாயை கருநாடகத்தில் கலைக்கப்பட்டு விட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பொதுத் திட்டம் – ஜனநாயகம் மீட்பு – மதச்சார்பின்மை – சமூகநீதிகளுக்குப் பாதுகாப்பு – வெறுப்பு அரசியலுக்கு விடை – மனித உரிமை நிலைத்தல் – உண்மையான குடியரசு தழைத்தல் இவற்றை முன் திட்டமாக்கி, இப்போதிருந்தே விரைவில் முடிவு எடுத்து, களப் பணியில் – தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கிவிடவேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரின்
ஆக்கப்பூர்வமான மூன்று யோசனைகள்!
நமது முதலமைச்சர் பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று சென்னை விமான நிலையத்தில் நேற்று (23.6.2023) அளித்த பேட்டியில் வெளியிட்ட கருத்து ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் – நமது நோக்கமும்கூட!
1. எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு தமிழ் நாட்டில் ‘திராவிட மாடல் ஆட்சி’ – அதன் தலைமையில் ஒற்றை இலக்குக் கூட்டணி.
2. அது இயலாவிட்டால், தொகுதி உடன்பாடு; பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான ஒரு வேட்பாளர்.
3. அதுவும் முடியாவிட்டால், பொதுவேட்பாளர் அறிவித்து – ஒன்றுபட்ட தேர்தல் பணி.
இந்த முறையில்தான், தீயணைப்பதில் எப்படி ஒரே நோக்கம், இலக்கு உண்டோ, அதுபோன்று ஒரு நடை முறையை விரைவில் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
16 கட்சிகள் கூடி ஒருங்கிணைந்துள்ள நிலையில், தன்முனைப்புக்கு இடமின்றி, நாட்டு நலன் – ஜனநாயக மீட்புபற்றி மட்டுமே சிந்தித்து, மற்றவற்றைப் பின்னே தள்ளிவிட வேண்டும்.
‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!”
இன்றேல், பல தலைவர்கள் சுட்டிக்காட்டி வருவது போல், இதுதான் (2024) கடைசி பொதுத் தேர்தல் என்றாகி விடும். ஆபத்து தவிர்க்க முடியாத கடுஞ்சோதனையாகி விடும் என்பதைத் தலைவர்கள் சிந்திக்க; செயலாற்றுக!
மக்கள் தயாராகி உள்ளனர் –
தலைவர்களே, நீங்கள் தயாராகுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.6.2023