பெங்களூரு, ஜூன் 25 கருநாடக அரசின் இலவச அரிசி திட்டம் நாடு முழுவதும் பர பரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த திட்டத்தை எப்படியும் முடக்கவேண்டும் என்ற நிலையில், இலவச அரிசி கொடுப்பதை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. அதோடு இல்லாமல் அந்தத் திட்டத்திற்கான இணையதளத்தையும் முடக்கும் வேலையில் இறங்கியுள்ளது
இது தொடர்பாக கருநாடகா பொதுப் பணித்துறை அமைச்சர் சதீஸ் ஜார்கிகோளி கூறும் போது “நாங்கள் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்துள்ளோம். அதைத் தடுக்கும் நோக்கத்தில் ஒன்றிய பாஜக அரசு அரிசி ஒதுக்க மறுக்கிறது. ஒன்றிய அரசிடம் 7 லட்சம் டன் அரிசி கையிருப்புள்ளது. அதில் 2 லட்சம் டன் அரிசி வழங்குமாறு கேட்கிறோம். ஆனால், அரிசி கொடுக்க மறுக்கிறார்கள். கருநாடகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போதும், கருநாடகத்திற்கு நிதி உதவி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டுதான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். அரிசியுடன் சோளம், ராகியை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிரகஜோதி திட்டத்தில் சேவா சிந்து இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இணையதளம் தற்போது சரிவர செயல்படுவதில்லை. ஒன்றிய அரசு கொடிய எண்ணத்தோடு அந்த இணையதளத்தின் ‘சர்வரில் குளறுபடி செய்கிறது. இதன்மூலம் சேவா சிந்து இணையதள பக்கத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்க முயற்சி செய்கிறது. இதைத் தடுக்க எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும், காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை நாங்கள் அமல்படுத்தியே தீருவோம்.”
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.
இலவச அரிசி தரும் திட்டத்தின் பயனாளர் களுக்கான இணைய தளத்தையே ஒன்றிய அரசு முடக்கும் நடவடிக்கையில் இறங்குவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கருநாடக தேர்தலின்போது பா.ஜ.க.விற்கு வாக்களிக்காவிட்டால், உங்களுக் கான அனைத்துத் திட்டங்களும் கிடைக்காமல் போய்விடும் என்று ஜே.பி.நட்டா மிரட்டல் விடுத்திருந்தார். தற்போது அவர்கள் செயலில் இறங்கி உள்ளார்கள்.